Published : 28 Dec 2019 09:36 AM
Last Updated : 28 Dec 2019 09:36 AM

எதேச்சாதிகாரத்தின் பின் இயங்கும் உளவியல்

ஜி.குப்புசாமி

தமிழில் அரசியல் நாவல்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தின் தேசபக்தி நாவல்கள் தொடங்கி திராவிட, இடதுசாரி, பெண்ணிய, தலித்திய அரசியல் நாவல்கள் தத்தமது சமூக, அரசியல், பண்பாட்டுப் பார்வைகளோடு இன்றும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தற்போது நாவலின் அட்டையிலேயே ‘ஓர் அரசியல் நாவல்’ என்ற உபதலைப்புடன் வந்திருக்கும் தமிழவனின் ‘ஷம்பாலா’ நாவல், மிகவும் வெளிப்படையாக இன்றைய வலதுசாரி, மதச்சார்பு அரசியலையும், ஆட்சியாளர் மற்றும் குடிமக்களின் மாறிவரும் உளவியலையும் காத்திரமாகச் சித்தரிக்கிறது.

‘ஷம்பாலா’ நாவலை வாசிக்கத் தொடங்கும்போதே சென்ற நூற்றாண்டில் வெளிவந்த சில எதிர்கால துர்க்கற்பனை (dystopian) நாவல்கள் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக, ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ என்ற புகழ்பெற்ற நாவலில் நாட்டு மக்களின் சிந்தனைகளை வேவு பார்க்கும் ‘சிந்தனை காவல் துறை’ இந்நாவலிலும் முக்கியப் பங்கெடுக்கிறது. அல்டஸ் ஹக்ஸ்லியின் ‘துணிச்சலான புதிய உலகம்’ நாவலில் இடம்பெற்ற மரபணு ஆய்வு மூலம் ஒரே கருமுட்டையிலிருந்து பலநூறு கருக்களை வளர்த்து, ஒரே மாதிரியான சிந்தனையமைப்பு கொண்டவர்களை உருவாக்கும் முறை இந்நாவலில் ஊடகப் பிரச்சாரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இன்றைய சூழல் எந்த அளவுக்கு சுதந்திரச் சிந்தனைக்கும், அறிவுச் செயற்பாடுகளுக்கும் எதிராக இருக்கிறது என்பதை எந்தத் தரப்பின் சார்பாகவும் நிற்காமல் சுயமான குரலில் பேசுகிறது ‘ஷம்பாலா’.

நாவலின் மையப் பாத்திரமான பேராசிரியர் அமர்நாத் ஓர் அறிவுஜீவி, சுதந்திரச் சிந்தனையாளர். அவர் வீட்டுக்குச் சிந்தனை போலீஸ் நுழைந்து அவரது கட்டுரைகளைக் கையகப்படுத்துகின்றனர். அவரைக் கைதுசெய்வதில்லை. ஆனால், மிக நுட்பமாக அவர் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் சென்ற பிறகு, வீட்டில் பத்திரமாக இருக்கும் அவருடைய மகள் கடத்தப்பட்டதாக போலீஸுக்குப் புகார் வந்திருப்பதாகவும், காவல் துறை தேடலுக்கு அமர்நாத் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்திகளும் தொலைபேசித் தகவல்களும் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன. அமர்நாத் போன்ற அறிவுலகச் செயற்பாட்டாளர்களே எதேச்சாதிகார அரசுகளுக்குப் பெரும் அச்சமளிப்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களை உளவியல்ரீதியாக ஒடுக்குவதுதான் இன்றைய புதிய அடக்குமுறை உத்தி. “புத்தகங்களை அழிப்பது பழைய முறை; புத்தகங்களை உருவாக்கும் மனங்களை ஆட்சியாளர்கள் அழிப்பதுதான் புதிய முறை.”

“தங்களுக்குக் கஷ்டம் கொடுத்தாலும் இந்த எதேச்சாதிகாரிகளை மக்கள் எதற்காகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்துவருகிறார்கள் என்பதை விளக்கிக் கூறுவதற்கு நமது அறிவுத் துறை வளரவில்லை” என்பதுபோன்ற ஒருசில நேரடியான விமர்சனங்களைத் தவிர, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத, வழக்கத்துக்கு மாறான சம்பவங்கள் நடக்கும்போது அவை உளவியல்ரீதியாக விளக்கப்படுகின்றன. ஒரு தலித் மாணவன் தன்னைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்று அழைக்கும்போது அவமானமாக உணர்வதாகவும், ‘நாங்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற முழக்கத்தில் சேர்ந்துகொள்ளும்போது அவனுக்கு ஆன்ம திருப்தி கிடைப்பதாகவும் சொல்கிறான்.

அமர்நாத்தின் முஸ்லிம் நண்பர் ஒருவர் அவரது தெருவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் எல்லோரும் வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்களித்ததாகச் சொல்கிறார். வலதுசாரிகள் யாரும் அவர்களை வற்புறுத்தவோ தொந்தரவுசெய்யவோ இல்லை எனும்போதும், ஒரு காவியுடைச் சாமியாருக்கு வாக்களித்ததன் பின்னால் இருக்கும் மனநிலையை அமர்நாத் விளக்குகிறார். இந்துத்துவ வலதுசாரிகள் மக்களிடையே செல்வாக்கு பெறுவதற்கும், இடதுசாரிகள் ஆதரவு இழந்துவருவதற்கும் விவாதத்துக்குரிய ஒரு புதிய காரணம் நாவலில் சொல்லப்படுகிறது. போலவே, சர்ச்சைக்குரிய பல சிந்தனைகளும் எழுப்பப்படுகின்றன.

கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் வங்கிகளிடமிருந்து பெருந்தொகைகளைக் கடனாகப் பெற்று தலைமறைவாவது, சபரிமலையில் பெண்கள் நுழைவு, பணமதிப்பிழப்பு, மத அரசியல் செய்பவர்கள், என்கவுன்டர்களுக்காக ஆட்சியாளர்களிடமிருந்து காவல் துறைக்கு வரும் மறைமுக அழுத்தங்கள், ராமர் கோயில் கட்டிய பின்பு அடுத்த 150 வருடங்களுக்கான பொருளாதார மூலதனம் கிடைக்கும் என்ற ரகசியத் திட்டம் என அநேகமாக எல்லா சமகாலப் பிரச்சினைகள் குறித்தும் நாவலில் பேசப்படுகிறது எனலாம்.

‘ஷம்பாலா’ என்ற இடம் திபெத்தில் உள்ளதாகவும், உலகிலேயே அதிகமான அதிகாரம் உறைந்திருக்கும் இடம் என்றும், அந்த இடம் உலகத்தை அழிக்கவும் ஆக்கவும் வல்லது என்றும் தொன்மக் கதைகள் கூறுகின்றன. அந்த இடத்தை அடைந்து பெரும் சக்தியைப் பெற்று, பெரும் அதிகாரத்தைப் பெறுவதற்கு மிகச் சாதாரண நிலையிலிருந்து அமைச்சராக உயர்ந்த ‘ஹிட்லர்’ என்ற பெயர் கொண்ட ஒரு பாத்திரம் தயாராவது இந்நாவலுக்குள்ளே பொதிந்திருக்கும் ஓர் உபகதை ஆகியிருக்கிறது.

மையக் கதைக்கு இணையாகச் செல்லும் இது அமர்நாத் எழுதும் கதை என்று நாவலில் சொல்லப்படுகிறது. அதிகாரப் பிரயோகம் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் விதங்களைப் பதிவுசெய்வதாக இருந்தாலும் நாவலின் தீவிரத்தன்மையை இப்பகுதி சற்று தளர்வடையச் செய்கிறது.

பிரச்சாரங்கள், கட்டுரைகள் மூலம் முன்வைக்கப்படும் விமர்சனங்களைவிட ஓர் இலக்கியப் படைப்பின் குரல் கூர்மையானது என்பதை தமிழவனின் ‘ஷம்பாலா’ நிரூபிக்கிறது.

- ஜி.குப்புசாமி, ‘உடைந்த குடை’ உள்ளிட்ட நாவல்களின் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com

ஷம்பாலா

தமிழவன்

சிற்றேடு பப்ளிகேஷன்ஸ்

பெங்களூரு-560085.

விலை: ரூ.250

94806 20024

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x