

யுகன்
புதியவர்களோ, மேடையில் அதிக அனுபவம் உள்ளவர்களோ, பெரிதாக அனுபவம் இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் தமிழையும் நாடகத்தையும் இணைக்கும் முயற்சிக்கு மேடை கொடுத்து அழகு பார்க்கிறது தியேட்டர் ஷ்ரத்தா. அருகிலிருந்து ஒரு கலையைப் பார்க்கும் இந்த அனுபவப் பகிர்வுக்கு வெகு பொருத்தமாக `திறவு’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அண்மையில் இயல் இசை நாடக மன்றத்தின் அரங்கில் இரண்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
லா.ச.ராமாமிர்தம் தன்னுடைய வாழ்க் கையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்க ளை நினைவலைகளாகத் தொகுத்து 1984-ல் `தினமணி கதிர்’ இதழில் `சிந்தாநதி’ என்னும் தலைப்பில் கட்டுரைகளாக எழுதி னார். இதற்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகா டமி விருது கிடைத்தது. இதில் இடம்பெற்ற ஒரு பதிவு `தாராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?’.
தேவி உபாசனை
லா.ச.ரா., லால்குடியில் பக்கத்தில் இருக்கும் ஆங்கரைக்குச் செல்கிறார். அவருடைய அக்கா மரணத்தருவாயிலும் இவரைப் பற்றி பேசிய நினைவுகள், ஆங்கரையில் இருக்கும் பெருந்திரு அம்பாள் கோயில், அந்த அம்மையுடன் அவருக்கு இருக்கும் உறவு, நெருக்கம், அம்பாள் உபாசகராக அவருடைய பேச்சில் கோபம், அன்பு, கருணை என பல உணர்ச்சிகளும் வெளிப்படும் தருணம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே யான பந்தம் எப்படியெல்லாம் இருக் கும் என்று அனைத்தையும், லா.ச.ராமா மிர்தமாகத் தோன்றிய சுவாமிநாதன் தன்னுடைய பண்பட்ட நடிப்புத் திறமை யால் வெளிப்படுத்தினார். அபிராமி அந் தாதியில் இருந்து `மணியே மணியின் ஒளியே’ பாடலுக்கு இசை வடிவம் கொடுத்து ஜனனி பாடியதும் சூழலை தெய்வீகமாக்கியது. சிறிய பதிவாக இருந்தாலும் சீரிய முறையில் நாடகமாக்கி இயக்கியிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.
சுரேஷின் நேசம்
இயக்குநர் மாரி செல்வராஜின் `தாமிர பரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பிலுள்ள `எனக்கு அவர்கள் சுரேஷ் என்று பெயரிட்டார்கள்!’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தனிநபர் நாடகத்தை சுதர்ஷி நிகழ்த்தினார்.
செல்லப்பிராணியின் பார்வையில் ஒரு குடும்பத்தில் இருக்கும் பலரின் குணா திசயங்களை சொல்லும் இந்தக் கதையில், சுரேஷ் என்னும் செல்லப்பிராணியாக தன்னுடைய உடல்மொழி, வசன உச்சரிப் பின் மூலமாகவே நாயின் அவஸ்தைகளை அற்புதமாக வெளிப்படுத்தினார் சுதர்ஷி.
உயிருள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதர்கள் மொழி மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். விலங்குகள் அவற்றின் செயல்கள் மூலமும் உடல் மொழி மூலமும் உணர்வுகளை வெளிப் படுத்தும். ஆனாலும் விலங்குகளின் பல உணர்வுகள் மனிதனுக்கு புரியாமலே போய்விடும் பரிதாபத்தை நெகிழ்ச்சியுடன் தனிநபராக ரசிகர்களுக்கு கடத்திய சுதர்ஷியின் நடிப்புக்கு இன்னும் பல மேடைகள் கிடைக்கும்.