Published : 22 Dec 2019 09:38 AM
Last Updated : 22 Dec 2019 09:38 AM

வெண்ணிற நினைவுகள்- வீடெனும் கனவு

எஸ்.ராமகிருஷ்ணன்

பாலுமகேந்திரா இயக்கிய ‘வீடு’ திரைப்படம் 1988-ல் வெளியானது. எப்போது அப்படத்தை காணும்போதும் மனதில் வீடு கட்டிய பலரது நினைவுகள் குமிழ்விடவே செய்கின்றன. என்னை அறியாமல் கண்ணீர் கசியவே செய்கிறது. அதுதான் சிறந்த கலைப்படைப்பின் அடையாளம். ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. அதிலும் நகரவாசிகள் வாடகைக்கு வீடு தேடி அலைந்து பட்ட துயரங்களால் எப்படியாவது ஒரு வீட்டை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் சொந்த வீடு வாய்த்துவிடுவதில்லை. பலர் வாடகை வீட்டிலே வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடுகிறார்கள். ஆண்கள் வாழ்வதற்கு ஒரு அறை போதும்; பெண்களுக்கோ வீடு தேவை.

சிறிய தீக்குச்சி விளக்கை ஒளிரச் செய்வதுபோல செங்கற்களும் இரும்புக் கம்பிகளும் மண்ணும் கொண்டு கட்டிய வீட்டுக்குப் பெண்ணே உயிர் கொடுக்கிறாள். ஒளிரச் செய்கிறாள். வீடென்பது ஒரு அடையாளம். வீடென்பது வாழ்வின் ஆதாரம். சிறுபறவைகூடத் தனக்கென ஒரு கூடு மரத்தில் கட்டிக்கொள்கிறது. நத்தை தன் வீட்டை முதுகிலே தூக்கி அலைகிறது. வீடும் ஒரு தாவரம்போல கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மத்தியதர வர்க்க வாழ்க்கையில் வீடு தேடி அலைவது தீராப் பிரச்சினை. எப்போது வீட்டைக் காலி செய்யச் சொல்வார்கள் என்று தெரியாது. குடியிருக்கும் வீட்டுக்கு நண்பர்கள் வந்துபோக முடியாது. குழந்தைகள் சுவரில் படம் வரைந்துவிட்டால்கூட அது பெருங்குற்றம்.

ஒரு வீடு கட்டப்படுவது எளிய விஷயமில்லை. ஆயிரம் பிரச்சினைகள். சிக்கல்கள். கட்டி முடிக்கப்படாத வீடு, பிறந்த குழந்தையைப் போலத்தான் இருக்கும். வண்ணம் பூசி மின்சார வசதிகள் செய்து கதவும் ஜன்னலும் பொருத்தி முழு வீடாகும்போது அதைக் கட்டிய குடும்பம் ஊரார் வந்து பார்ப்பதற்கு முன்பு தனியே ஒருமுறை சொந்த வீட்டின் சுவர்களை ஆசை தீர தடவிப் பார்த்துக் கண்ணீர்விட்டுக்கொள்வார்கள். படத்தில் தாத்தா சொக்கலிங்க பாகவதர் அப்படித்தான் நடந்துகொள்கிறார். அது மறக்க முடியாத காட்சி.

ஒவ்வொரு வீடும் ஆயிரம் கதைகளைக் கொண்டிருக்கிறது. கண்ணீரின் கறைபடியாத வீடேயில்லை. வீடு கட்டி முடிக்கப்பட்டாலும் அதில் சந்தோஷமாக வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிலருக்கு அந்த அதிர்ஷ்டமில்லாமல் போய்விடுகிறது. வீட்டுக்கடன் அவர்களைத் துரத்தி வதைக்கும்போது மீள முடியாமல் வீட்டை விற்றுவிடுகிறார்கள். அது தாங்க முடியாத சோகம். படத்தில் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த, வேலைக்குப் போகும் பெண்ணான சுதா ஒரு வீடு கட்டத் திட்டமிடுகிறாள். அவளுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. அந்தக் காலத்தில் திருமணம்தான் ஒரு குடும்பத்தின் பெரிய பிரச்சினையாக இருக்கும். அதுகூட அவளைப் புரிந்துகொண்ட தோழனால் எளிதாகிறது. சுதாவின் உற்றதுணையாக வரும் கோபிபோல ஒரு கதாபாத்திரம் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டதே இல்லை. ஆனால், வீடு கட்ட முயலும்போது சுதா சந்திக்கும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் அவளை நிலைகுலைய வைக்கின்றன.

படத்தின் ஒரு காட்சியில் தாத்தாவும் அவரது இரண்டு பேத்திகளும் வாடகைக்கு வீடு தேடி நடக்கும்போது நாமும் கூடவே நடக்கிறோம். புது வீடு பற்றி கனவு காணுகிறோம். 1988-ல் ஐநூறு ரூபாய் வாடகைக்கு வீடு தேடுகிறார்கள். இன்று பத்தாயிரத்துக்குக் குறைவாக சிறிய வீடுகூடக் கிடைப்பதில்லை. ஒன்றரை லட்ச ரூபாயில்தான் வீடு கட்ட சுதா திட்டமிடுகிறார். இன்று பெருநகரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறிய வீட்டின் விலை அறுபது லட்சம். எத்தனை மடங்கு விலை உயர்வு. மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு வீடு கட்டக் கனவு காண்பவர்கள் இதை நினைத்து ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஏதாவது அற்புதம் நடந்து தங்களுக்கும் ஒரு வீடு கிடைத்துவிடாதா என ஏங்குகிறார்கள்.

ஒரு வீடு கட்டப்படுவதற்குள் என்னவெல்லாம் பிரச்சினைகள் உருவாகும் என்பதைத் துல்லியமாக பாலுமகேந்திரா காட்சிப்படுத்தியிருக்கிறார். சினிமா பார்க்கிற உணர்வே நமக்கு வராது. சுதாவும் அவளது தாத்தாவும் நமது சொந்த அக்காவும் தாத்தாவும்போல் ஆகிவிடுகிறார்கள். அதுதான் படத்தின் வெற்றி. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் வாழ்க்கையைப் படம் மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறது. மழை பெய்யும் காட்சியில் வேலையாட்கள் பாதியில் வேலையை விட்டு குடிசையில் ஒதுங்கி நிற்கிறார்கள். மழை எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தந்துவிடுவதில்லை. சுதா போன்றவர்கள் மழையால் பாதிக்கப்படுகிறார்கள். கட்டிட வேலையை மழை தடைசெய்கிறது. மனிதர்களும் இயற்கையும் கருணை கொண்டு செயல்பட்டால்தான் வீடு சாத்தியம்போலும்.

இளையராஜாவின் இசைத்தொகுப்பான ‘ஹவ் டு நேம் இட்’ ஆல்பத்தை பாலுமகேந்திரா விரும்பிக் கேட்டு அதைப் படத்தின் பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறார். மிகப் பொருத்தமான இசை. இப்படத்தில் பாடல்களே கிடையாது.

உண்மையில் படம் முடிவு பெறுவதில்லை. கடைசியில் பாலுமகேந்திராவின் குரல் அந்த வீடு, சுதாவின் நிலை என்னவானது என்பதை விவரிக்கிறது. அவ்வளவுதான் முடிவு. எப்படியாவது அந்த வீடு சுதாவுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்று பார்வையாளர் கனத்த மனதுடன் வேண்டிக்கொள்ளத் தொடங்குகிறார். காரணம், சுதா என்பது ஒரு அடையாளம். தானும் சுதாவும் வேறில்லை என அவனுக்கு, அவளுக்குத் தெரியும்தானே?

தேசிய விருதுபெற்ற இத்திரைப்படம் சிறிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. படத்தில் காதல் இருக்கிறது. ஆனால், காதலர்கள் கனவில் டூயட் பாடுவதில்லை. சண்டைக்காட்சி இருக்கிறது. அது வெறும் வாய்ச்சண்டை. ஆயுதங்களைக் கொண்டு யாரும் யாரையும் தாக்கிக்கொள்வதில்லை. பல இடங்களில் தாத்தாவின் எளிய வேடிக்கைப் பேச்சால் நம்மை மறந்து சிரிக்கிறோம். மேஸ்திரி போனால் போகட்டும், நாங்கள் இருக்கிறோம் எனக் கட்டிடத் தொழிலாளர்கள் சுதாவுக்காக உடன் நிற்கும்போது எளிய மனிதர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோகிறோம்.

ஒரு திரைப்படம் வாழ்க்கைப் போராட்டத்தின் சிறிய துண்டைத் துல்லியமாகச் சித்தரித்தால் போதும், அது முக்கியமான கலைப் படைப்பாகிவிடும் என்பதற்கு ‘வீடு’ ஒரு சிறந்த உதாரணம். அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கும் காலம் வரை இந்தப் படம் நினைவுகொள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x