Published : 21 Dec 2019 08:32 AM
Last Updated : 21 Dec 2019 08:32 AM

நூல்நோக்கு: அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை

அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை

தொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்
கே.சுப்ரமணியன்
வெளியீடு: ஏஐடியுசி
(சரோஜினி பதிப்பகம் மூலமாக)
விலை: ரூ.80
தொடர்புக்கு: 94862 80307

கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி - விநியோகம், மண்ணெண்ணெய் விநியோகம், டிராம்வே, ரயில்வே, அலுமினியப் பாத்திரங்கள் உற்பத்தி, தோல் பதனிடுதல், அச்சகங்கள், பெரும் பொறியியல் பட்டறைகள் ஆகியவற்றில் சங்கங்களை உருவாக்கினார். 1940-41-ல் சென்னை மேயராக இருந்தபோது, சென்னையில் வந்து குவிந்த பர்மா அகதிகள் சொந்தக் காலில் நிற்க அவர் உருவாக்கியதுதான் கடற்கரை ரயில்நிலையம் அருகேயுள்ள பர்மா பஜார். தொழிற்சங்கப் பணிகள் மட்டுமின்றி விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி நடத்திய எண்ணற்ற அறவழிப் போராட்டங்களில் தொழிலாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) நூற்றாண்டு தொடங்கியுள்ள தருணத்தில், தமிழகத் தொழிலாளர் இயக்க முன்னோடியான சக்கரை செட்டியாரின் வாழ்க்கைச் சித்திரத்தை வழங்கியுள்ள வழக்கறிஞர் கே.சுப்ரமணியனைப் பாராட்டத்தான் வேண்டும். நாம் வந்த வழியைத் தெரிந்துகொள்ள உதவும் நூல்.

- வீ.பா.கணேசன்

நஞ்சும் துளி அமுதமும்

நீலகண்டம்
சுனில் கிருஷ்ணன்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை-42.
விலை: ரூ.270
தொடர்புக்கு: 90424 61472

மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் - இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், பல்வேறு குரல்களில் இன்றைய வாழ்க்கையை விசாரணை செய்கிறது இந்நாவல். யதார்த்தமும் புனைவும் வெவ்வேறு விகிதங்களில் அளந்து தரப்படுகிறது இங்கு. அதுவே குழந்தை வருவினுடைய சிக்கலான உள் உலகத்தை நம் முன் விரித்துக்கொடுக்க உதவுகிறது. நிலையில்லாத எழுச்சிகொண்ட, அதேசமயம் சுயபரிசீலனை செய்யக்கூடிய இன்றைய இளைஞனான செந்திலும், எதிர்நிலைப் பண்புகொண்ட ஹரியும் அவரவருக்கான உருவத்தைச் சரியாகவே பெற்றிருக்கிறார்கள். தொலைந்துபோன குழந்தை வருவைத் தேடுதலும் கண்டடைதலும் நாவலை வேறொரு அர்த்தத் தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. சுடலைமாடன் - மெடியா - கலீல் ஜிப்ரான் இடம்பெறும் பகுதியில் இறுதியில் இயல்பாக உருவாகியுள்ள பகடியை ரசிக்கும்போதே, மெடியாவும் சுடலைமாடனும் ஒட்டாமல் தனித்துத் திரிவதன் உறுத்தலையும் உணர முடிகிறது.

- ந.ஜயபாஸ்கரன்

யாருமற்ற கடற்கரை உரையாடல்

மிதக்கும் யானை
ராஜா சந்திரசேகர்
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை – 83.
விலை: ரூ. 140
தொடர்புக்கு: 044 – 24896979

‘எழுதுவதற்கு முன் எதுவுமில்லை நானுமில்லை, எழுதிய பின் எல்லாம் இருந்தன. நானும் இருந்தேன்’ என்கிற முகப்புக் கவிதையிலே புத்தகத்தின் சுவாரஸ்யப் பயணம் வேகமெடுக்க ஆரம்பித்துவிடுகிறது. சின்னச் சின்னக் கவிதைகள் மனதின் மேடுபள்ளங்களில் ஏறியும் இறங்கியும் வாசிப்பவரை யோசிக்க வைக்கின்றன. யாருமற்ற கடற்கரை உரையாடல் பாணியிலான கவிதைகள், மனதின் நிகழ்த்துக்கலையாக வடிவம்கொள்கின்றன. ‘அந்தரத்தில்/ ஆயிரம் சைத்தான்கள்/ அரங்கத்தில்/ தெய்வப் புன்னகை’ என்கிற கவிதை ஒரு சந்நிதானத்து மெல்லொளியாய்ச் சுடர்விடுகிறது. ராஜா சந்திரசேகர் தன் கவிதைகளில் அக உலகின் உள்ளார்ந்த பார்வைகளைக் கடத்தியிருக்கிறார். சில கவிதைகளில் ஜென் தூறலும், சில கவிதைகளில் தம்மபத வாசனையும் எழுகிறது.

- மானா

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x