Published : 21 Dec 2019 08:29 am

Updated : 21 Dec 2019 08:29 am

 

Published : 21 Dec 2019 08:29 AM
Last Updated : 21 Dec 2019 08:29 AM

முடியாத புத்தர்

book-review

கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதரின் பேராசையால் சுரண்டப் பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியலாளர்கள் வரை புத்தர் அனைவரையும் இன்றும் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தில்இருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும்கூட.

பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் பிறந்த சித்தார்த்தன், அரச மரத்தடியில் ஞானம் பெறுகிறார். பெரும் கருணையையும் ஈவிரக்கமற்ற தன்மையையும் ஒருசேரக் கொண்ட வெட்டவெளி இயற்கையில் பிறந்து, அதே வெட்டவெளியில் ஞானமென்று சொல்லப்படும் புரிதலை அடையும் புத்தனின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாவல், ஒரு கவிஞனால் எழுதப்பட்ட அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. தெரியாத கத்திமுனையின் கூர்மையைக் கொண்டது.


பழைய உபநிடதங்கள் தொகுக்கப்பட்டு, புதிய உபநிடதங்களும் இயற்றப்பட்ட காலகட்டத்தில் பிறந்த சித்தார்த்தனின் தேடலும் உபநிடதங்களிலிருந்தே தொடங்குகிறது. துன்பம் என்ற பிரச்சினை குறித்து உபநிடதங்களில் எதுவும் சொல்லப்படவில்லை என்ற புள்ளியில் அவன் தேடல் தொடங்குகிறது. அதுவரையில் நிகழ்ந்த உச்ச அறிதல் என்று சொல்லப்பட்டவற்றை, ‘ஐநூறு தேர்கள் கடந்த பிறகு எஞ்சும் தூசி’ என்று சித்தார்த்தன் கடக்க வேண்டியிருக்கிறது. பச்சையாய்ப் பெரிய உடம்போடு இருந்து மரத்திலிருந்து உதிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து நரம்புகளின் கூடாகி இன்மை நோக்கிப் பயணிக்கும் அரச மரத்தின் இலையை நாவலாசிரியர் வர்ணிப்பது போன்றே புத்தரின் துன்பங்கள், தோல்விகள், பலவீனங்கள், சமரசங்கள் அனைத்தும் இந்தப் படைப்பில் விசாரிக்கப்படுகின்றன.

உறக்கமற்றவனின் இரவு நீண்டது என்று தம்மபதத்தில் வரும் கவித்துவ வரிகளைப் போலவே புத்தனாவதற்காக அவன் தந்தை சுத்தோதனரில் தொடங்கி, மனைவி யசோதரா, மகன் ராகுலன் உட்பட அனைவரது இரவுகளையும் உறக்கமற்றவைகளாக ஆக்குகிறான் சித்தார்த்தன். ஆசைகளும் குரோதமும் காமமும் மட்டுமே மனிதனின் இயல்பூக்கங்கள் என்பதை நிரூபிக்கப் போராடும் மாரனுக்கும் புத்தனுக்குமான உரையாடல் ஞாபகத்தில் நிலைக்கும் உருவகங் களால் நிரம்பியது. பிணங்களைத் தின்பதற்காகக் கழுகுகள் பறந்துகொண்டிருக்கும் அதே மலையில்தான் முட்டைகளையிட்டு ஒரு தாய்க் கழுகு அடைகாத்துக்கொண்டிருக்கிறது என்று பதிலளிக்கிறார்.

பிறப்பு இறப்பு என்னும் துன்பங்களால் உழன்ற மனிதர்களின் கண்ணீரினால் ஆன பொய்கையில் அவலோகிதேஷ்வரரால் பிறப்பிக்கப்படும் பெண் தெய்வமான தாரா, இந்த நாவலின் இறுதியில் அறிமுகமாகிறாள். மனிதனை மரணத்தின் பால் இட்டுச்செல்லாதவள் பெண் என்று அவளைப் படைத்த போதிச்சத்துவரான அவர் தன் செயலுக்குக் காரணம் கூறுகிறார். மனிதர்களின் பெரும் அச்சங்களைக் கடக்க வைக்கும் பெண் என்னும் இயற்கையின் அமுதத் தாரையை நாவலாசிரியர் பரிசீலிப்பதாகவும் இதைக் கொள்ளலாம். கருணையின் வடிவமான பொன்னிற தாரா, தவாங் புல்வெளியில் பூடானையும் திபெத்தையும் பார்த்தபடி சிலையாக நிற்கிறாள்.

பௌத்த ஓவியங்களில் சிங்கங்கள் வரையப் பட்டிருக்கின்றன. சிங்கங்களே இல்லாத திபெத்தில் இந்த சிங்கங்கள் ஓவியங்களில் இடம்பெற்றிருக்கின்றன. தாராவும் சிங்கங்களும் நாம் கடக்க வேண்டிய அச்சங்களின் குறியீடாகவும் பார்க்கலாம். சமீபத்தில் வந்த தமிழ் மொழிபெயர்ப்புகளில் காளிப்ரஸாத் மொழிபெயர்த்திருக்கும் இந்நாவல் முக்கியமானது; சமகாலத்துடன் பொருத்தப்பாடு கொண்டதும்கூட.

தம்மம் தந்தவன்

விலாஸ் சாரங்

தமிழாக்கம்: காளிப்ரஸாத்

நற்றிணைப் பதிப்பகம்

திருவல்லிக்கேணி, சென்னை-5.

விலை: ரூ.260

தொடர்புக்கு: 94861 77208முடியாத புத்தர்தம்மம் தந்தவன்Book review

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x