Published : 21 Dec 2019 08:27 AM
Last Updated : 21 Dec 2019 08:27 AM

சந்தைமயமாக்கப்படும் ஆன்மிகம்

எஸ்.வி.ராஜதுரை

கிரேக்கப் பொருளாதார அறிஞர் யானிஸ் வாரூஃபாகிஸ், நமது உலகிலுள்ள பொருட்களையும் விஷயங்களையும் ‘அனுபவ மதிப்பு’, ‘பரிவர்த்தனை மதிப்பு’ என்று பாகுபடுத்துகிறார். எடுத்துக்காட்டாக, நண்பர்கள் குழாமிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்த ஒருவர் ஜோக் சொன்னால், அது அந்த நண்பர்களுக்கான ‘அனுபவ மதிப்’பாகிவிடுகிறது. ஆனால், அவரே ஒரு ‘ஸ்டேண்ட்அப் காமெடியானாகி ஜோக் சொல்லத் தொடங்குவார் என்றால், அது நண்பர்களால் விலைகொடுத்து வாங்கப்படும் ‘பரிவர்த்தனை மதிப்’பாகிவிடுகிறது. இது ‘ஆன்மிகத்’துக்கும் பொருந்தும்.

மூடநம்பிக்கை, பேராசை, அதிகார வேட்கையைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடவுள்களையும் ஆன்மிகத்தையும் சரக்காக விற்பனை செய்யும் ‘நவீன மோஸ்தர்’ சாமியார்கள் பெருகிவருகின்றனர். அவர்கள் ஈட்டும் பரிவர்த்தனை மதிப்பில் 99%-ஐத் தங்கள் ‘ஆன்மிகக் கூடங்களில் பதுக்கி வைத்துக்கொள்ளவும், தொழில், வணிகத்தில் முதலீடு செய்துகொள்ளவும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் உதவுகிறார்கள். மக்களின் மத உணர்வு, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களது வாக்குகளைப் பெற இந்த நவீன ஆன்மிகவாதிகள் துணைபுரிகிறார்கள்.

இந்தியாவிலுள்ள முக்கிய ஊடகங்களும் அரசு உதவி பெறும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமும் திரட்டியுள்ள புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டுகிறார் மீரா நந்தா, ‘கடவுள் சந்தை’ எனும் நூலில்: 1) ஐந்தாண்டுகளில் (2002-2007) இந்தியர்களிடையே மத உணர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ளது. கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 30 விழுக்காட்டினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் முன்பைவிட மிகவும் மத உணர்வு கொண்டவர்களாகிவிட்டதாகக் கூறினர். இரண்டே இரண்டு விழுக்காட்டினர் இதற்கு நேரெதிரான கருத்தைக் கூறினர். 2) கல்வியும் நகர வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பும் இந்தியர்களை முன்பைவிடக் கூடுதலான மத உணர்வு கொண்டவர்களாக்கியுள்ளன. 3) கிராமப்புற, படிப்பறிவற்ற மக்களைக் காட்டிலும் நகர்ப்புற, படித்த இந்தியர்களிடத்தில்தான் மத உணர்வு அதிகமாக உள்ளது.

ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி எல்லோருமே கடவுள்களை நாடுகின்றனர். குருக்களுக்கும் புரோகிதர்களுக்கும் பூசாரிகளுக்கும் சோதிடர்களுக்கும் வாஸ்து நிபுணர்களுக்கும் ஆன்மிக ஆலோசகர்களுக்கும் நல்ல யோகம் அடித்துக்கொண்டிருக்கிறது. இந்திய வகை மதச்சார்பின்மை, பெரும்பான்மை மதத்துடன் நெருக்கமான, அதற்கு ஊட்டம் கொடுக்கக்கூடிய உறவை வளர்த்துக்கொள்ள அரசு இயந்திரத்தை அனுமதிக்கிறது. நவ-தாராளவாத அரசும் தனியார் துறையும் பங்குதாரர்களாக ஆகிவிட்டதால் அரசு, கார்ப்பரேட் துறை, இந்து நிறுவனம் மூன்றுக்குமிடையே சொகுசான முக்கோண உறவு ஏற்பட்டுவிட்டது.

அரசு-கோயில்-கார்ப்பரேட் கூட்டணி புதிய நிறுவனரீதியான வெளியை உருவாக்குகிறது. இந்த வெளியில், உலக அரசியல் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்ட புதிய சமூகச் சூழலுக்குப் பொருத்தப்பாடு உடையதாக இருக்கும் வகையில், மதம் தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு வருகிறது. இதனால், அது மென்மேலும் தேசியவாதத் தன்மையை மேற்கொள்கிறது. அதாவது, மதச் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும், வலுப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சிகளாக மாற்றுகிறது. மதச் சடங்குகளும் வழிபாடுகளும் நடக்கும் வெளிகள் அரசியல்மயமாக்கப்பட்ட பொதுவெளிகளாக மாற்றப்படுவது இன்று இயல்பானதாகிவிட்டது. சடங்குகளுக்கும் வழிபாட்டுக்குமான வெளிகளை அரசியல் பொதுவெளிகளாக மாற்றும் நிகழ்முறை நமது கூட்டுப் பொதுபுத்தியில் இரண்டறக் கலந்துவிட்டது. எனவே, அந்த நிகழ்முறை தடையில்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மிகச் சாதாரணமான மதச் சடங்குகளும்கூட இன்று கடவுள் வழிபாட்டைத் தேச வழிபாட்டுடன் கச்சிதமாக இணைத்துவிடுகின்றன.

இந்தப் போக்கு, பல்வேறு சமயங்களைப் பின்பற்றிவரும் இந்திய மக்களிடையே பொதுவாக இருந்துவந்துள்ள சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்குக் குழிபறிக்கும் சுயநல ‘ஆன்மிக-அரசியல்வாதி’ கூட்டுக்கு வலுசேர்ப்பதால் நாட்டுக்கு ஏற்பட்டுவரும் பெருங்கேடுகளை எடுத்துக்கூறுகிறது மீரா நந்தாவின் ‘கடவுள் சந்தை’.

- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர்.எஸ்.வி.ராஜதுரை

கடவுள் சந்தை

மீரா நந்தா

தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன்

அடையாளம் வெளியீடு

கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621310.

விலை ரூ.300

தொடர்புக்கு: 94447 72686

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x