Published : 14 Dec 2019 09:23 am

Updated : 14 Dec 2019 09:23 am

 

Published : 14 Dec 2019 09:23 AM
Last Updated : 14 Dec 2019 09:23 AM

நூல்நோக்கு: தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்...

book-review

தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்...

கலீல் ஜிப்ரான்
வாழ்க்கை வரலாறு
மிகையீல் நைமி
தமிழில்: சிற்பி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
பொள்ளாச்சி, 642003
தொடர்புக்கு: 99761 44451
விலை: ரூ.150


இளம் வயதிலிருந்து தொடரும் வறுமையும் குடும்பத்தவரின் அகால மரணங்களும், நோய்மையும், விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையும், இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், கலை உன்னதங்களின் தோற்றங்களுக்காகவே என்று எண்ண வைக்கிறது கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை. உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் இருந்த உயிர்நண்பர் மிகையீல் நைமி; ஜிப்ரானுடன் இணைந்து எழுதுகோல் இயக்கத்தைத் தொடங்கி அரபி இலக்கியத்தைப் புத்தெழுச்சி பெற வைத்தவர், ‘மிர்தாதின் புத்தகம்’ நூலாசிரியராகப் புகழ்பெற்றவர். கவிதைக்கும் ஓவியத்துக்கும் இடையே அலைக்கழிந்த ஜிப்ரானின் வாழ்க்கையையும் மனவோட்டங்களையும் காவியமாக்கியிருக்கிறார் நைமி. அரபி மூலத்திலிருந்து மலையாளம் வழி தமிழுக்கு வந்திருக்கும் இந்நூல், ஜிப்ரானில் திளைப்பவர்கள் தவறவிடக் கூடாத ஒன்று.

- பி.எஸ்.கவின்

வழிகாட்டும் வாழ்வு

ஷமாயில் திர்மிதீ
அரபுமூலம் - தமிழாக்கம் - அடிக்குறிப்பு
ரஹ்மத் பதிப்பகம்
சென்னை-4
விலை: ரூ.300
: 044-24997373

தமிழில் ஹதீஸ் தொகுப்புகளின் மொழியாக்கங்களை வெளியிட்டுவரும் ரஹ்மத் பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடு இது. இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்களின் ‘அஷ்ஷமாயிலுல் முஹம்மதியா’ ஹதீஸ் தொகுப்பின் தமிழாக்கமே ‘ஷமாயில் திர்மிதீ’. 56 பாடங்களாக 415 ஹதீஸ்கள் இத்தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இறைத்தூதர் நபிகளாரின் தோற்றத்தையும் அவரது பேரியல்புளையும் நன்னடத்தைகளையும் பற்றற்ற எளிய வாழ்வையும் குறித்து தெளிவாகப் பேசும் இத்தொகுப்பின் தமிழாக்கம் அரபு மூலத்துடனும் அடிக்குறிப்புகளுடனும் வெயிடப்பட்டுள்ளது. இப்ராஹீம் அல்பாஜூரீ அவர்களின் அரபி விரிவுரை உள்ளிட்ட முக்கியமான அரபி, உருது மார்க்க நூல்கள் பலவற்றையும் பின்பற்றி 936 விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார் மொழிபெயர்ப்பாளரான இ.எ.பஸ்லுர் ரஹ்மான்.

- செ.இளவேனில்


இல்லாத பாதையில் நடப்பவன்

ழ என்ற பாதையில் நடப்பவன்
பெரு.விஷ்ணுகுமார்
மணல்வீடு பதிப்பகம்
ஏர்வாடி, சேலம்-636453.
விலை: ரூ.100
98946 05371

ஒரு இளம் கவிஞரின் முதல் தொகுப்பு வெளியாகி, பரவலாகக் கவனம் பெற்று, குறுகிய காலகட்டத்துக்குள் மறுபதிப்பு காண்பதெல்லாம் நம் சமகாலச் சூழலில் அரிதாக நேரும் அற்புதம்தான். அப்படியான அதிசயம்தான் பெரு.விஷ்ணுகுமாரின் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’. தோழியின் மல்லிகையை என்றும் வாடாமல் காக்கும் மனநிலையாகட்டும், புனையப்படும் கதைகளில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதர்களாகட்டும், பெருநகரத்துச் சிறுவன், விவஸ்தை கெட்ட நாணயங்கள், திறக்க முடியாத பூட்டைத் தொலைத்த சாவியாகட்டும்... இவையெல்லாம் வாழ்வின் ஞாபக மிச்சத்தை அப்புறப்படுத்திவிடாமல் இருக்க உதவுகின்றன. கூரான பார்வையில் வெளிப்படும் அப்படியான கவிதைகளெல்லாம் பெருமூச்சுடனான ஏக்கத்தை உண்டாக்கிவிடுகின்றன. கவிதைகளில் இருக்கும் மாயத்தன்மையிலான கற்பனைகள் விஷ்ணுவுக்குத் தனித்துவமான மொழியைக் கொடுத்துவிடுகின்றன.

- ம.கண்ணம்மாள்Book reviewநூல்நோக்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x