Published : 14 Dec 2019 09:18 AM
Last Updated : 14 Dec 2019 09:18 AM

அண்ணாவின் எழுத்துகள் @ ரூ.16,000

செல்வ புவியரசன்

அண்ணாவின் வரலாற்றைப் பேசும் வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் 800 பக்கங்களில் ரூ.500 விலையில் வெளிக்கொணர்ந்த ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் வெற்றி, அண்ணாவின் முழு எழுத்துகளையும் வெளிக்கொணர்வதற்கான முயற்சிக்கு உத்வேகம் தந்திருக்கிறது. திரு.வி.க., மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் படைப்புகளை முழுத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் ‘தமிழ்மண்’ பதிப்பகம் இம்முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது. அண்ணாவின் எழுத்துகளையும் உரைகளையும் 110 தொகுதிகளாக வெளியிடும் முயற்சியின் முதற்கட்டமாக 64 தொகுதிகள் வரும் டிசம்பர் 21 அன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கின்றன.

1955 தொடங்கி 1963 வரை ‘திராவிட ஏடு’ ஏட்டிலும், 1964 தொடங்கி 1969 வரை ‘காஞ்சி’ ஏட்டிலும் அண்ணா தனது தம்பியருக்குத் தீட்டிய 291 கடிதங்கள் முதல் 20 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடிதத்தின் தொடக்கத்திலும் ‘திராவிட ஏடு’, ‘காஞ்சி’ இதழ்களின் அட்டைப் படங்கள் அலங்கரிக்கின்றன. கடிதங்கள் வெளியான காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலும் அவை அமைந்திருக்கின்றன. இதற்கு முன்பு அண்ணாவின் கடிதங்களை வெளியிட்ட ‘பாரி நிலையம்’, ‘பூம்புகார்’, ‘தமிழரசி’ பதிப்பகங்களுக்கு ஒவ்வொரு தொகுப்பின் முதல் பக்கத்திலும் நன்றி தெரிவித்திருப்பது பதிப்புநெறிக்கு நல்லதொரு முன்னுதாரணம். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பதிப்பிப்போர் அதற்கு முன்பு வெளியான பதிப்புகளைக் குறிப்பிடும் வழக்கத்தை இனிமேலாவது தமிழ்ப் பதிப்புலகில் ஒரு வழக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.

அண்ணாவின் முழுப் படைப்புகளும் தொகுக்கப்படவில்லை என்றபோதும் கடித இலக்கியங்கள் ஏற்கெனவே தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. எனினும், இந்தப் புதிய பதிப்பு தனது தனிச் சிறப்பான பின்னிணைப்புகளால் முந்தைய பதிப்புகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அண்ணாவுடன் நெருங்கிப் பழகிய அவரது தம்பிகளின் நினைவலைகள், அண்ணாவைப் பற்றிய ஆய்வு நூல்களின் சாரம்சமான பகுதிகளோடு மற்ற இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், பல்துறை அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் அண்ணாவைக் குறித்து பேசியவற்றிலிருந்தும் எழுதியவற்றியலிருந்தும் தேர்ந்தெடுத்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

பின்னிணைப்புகளில் ஒன்றான வாழ்க்கைச் சுவடுகளில் அண்ணாவின் வாழ்க்கைச் சுருக்கத்துடன் அவரது திருமண அழைப்பிதழ், அமெரிக்காவிலிருந்து பெரியாருக்கு அவர் எழுதிய கடிதம் என்று அரிய பதிவுகள் பலவும் காணக்கிடைக்கின்றன. 20-வது தொகுதியில் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இது தவிர, அண்ணாவைக் குறித்து எழுதப்பட்ட கவிதைகள் ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலேயே வரவேற்கின்றன.

‘பாலபாரதி’, ‘நவயுகம்’, ‘திராவிட நாடு’, ‘நம்நாடு’, ‘காஞ்சி’ ஆகிய தமிழ் ஏடுகளுக்கும் ‘ஹோம் லேண்ட்’, ‘ஹோம் ரூல்’ ஆகிய ஆங்கில ஏடுகளுக்கும் ஆசியராகப் பொறுப்புவகித்தவர் அண்ணா. அவர் 1942 முதல் 1969 வரை பத்திரிகையில் எழுதிய 1,146 தலையங்கங்கள், ஆசிரியவுரைகள் என்ற தலைப்பில் 26 தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. 1937 தொடங்கி 1969 வரையிலான மேடைச் சொற்பொழிவுகள் 14 தொகுதிகளாகவும், 1957 தொடங்கி 1968 வரையில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் 4 தொகுதிகளாகவும் இடம்பெற்றுள்ளன. இதுவரை நூல்வடிவம் பெறாத பல உரைகள் கண்டெடுக்கப்பட்டு ‘மேடை இலக்கியம்’ என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுதியும் வாசிப்பதற்கு வசதியாக 300 பக்க அளவில் கைக்கடக்கமாகவும், பாதுகாப்பதற்கு வசதியாக கெட்டி அட்டையிலும் அமைந்துள்ளது. அண்ணாவின் படைப்புகள் மட்டுமின்றி அண்ணாவைப் பற்றிய படைப்புகளின் தொகுப்பாகவும் ஒருசேர அமைந்துள்ளது இந்த முழுத் தொகுப்பு.

அண்ணாவின் அறிவுக்கொடை (64 தொகுதிகள்)
தமிழ்மண் பதிப்பகம்
தியாகராய நகர், சென்னை-17.
விலை: ரூ.32,500 | முன்வெளியீட்டுச் சலுகை: ரூ.16,000
044 24339030

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x