Published : 14 Dec 2019 09:17 AM
Last Updated : 14 Dec 2019 09:17 AM

வீணையின் எதிரொலி

சி.ஹரி

ஆர்.சூடாமணி எழுதிய 574 சிறுகதைகளில் சிலவற்றை மொழிபெயர்த்து மேனாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வெளியிட்ட முதல் தொகுப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இப்போது ‘எக்கோஸ் ஆஃப் தி வீணா’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியாகியிருக்கிறது. எளிமையான நடை, கூர்மையான பார்வை, கதைக்களத்தை வர்ணிப்பதில் சிக்கனம், கதை மாந்தர்களைப் பற்றிய வர்ணனைகளும்கூட தேவைக்கு அதிகமாகக் கிடையாது. பலதரப்பட்ட பெண்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்திருக்கிறார் சூடாமணி. அவரது கதைகளில் பெண்களுக்கு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் முக்கியமான இடம் உண்டு. இவரது கதைகளில் இருக்கும் நுட்பமான யதார்த்தச் சித்தரிப்பானது வார்த்தை ஜாலங்கள் ஏதுமின்றி இயல்பாக இருக்கிறது. அதை அப்படியே மொழிபெயர்ப்பிலும் கொண்டுவந்திருக்கிறார் பிரபா ஸ்ரீதேவன். ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒன்றோடு வாசகர்களான நம்மையும் அடையாளப்படுத்திக்கொள்ள வைத்துவிடுகிறார். அதனால், அந்தக் கதைக்களத்தில் நாமும் இருப்பதான பிரமை ஏற்படுகிறது.

‘டைம்பாஸ்’ கதையில் படிப்பில் ஆர்வம் மிக்க எஸ்.வஞ்சிக்கொடியின் தந்தை இறந்ததால் தாய் வேலைக்குப் போக நேர்கிறது. தம்பி எஸ்.சோலை என்ற கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ள பள்ளிக்கூடப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டோடு முடங்குகிறார் வஞ்சி. குழந்தைக்கு வேடிக்கை காட்ட மாலை நேரம் பூங்காவுக்குச் செல்லும் வஞ்சி, அங்கே அரும்பு மீசை வாலிபனை சினேகிதனாகப் பெறுவதோடு கதை முடிகிறது. ‘ஹி கேம் அஸ் எ கெஸ்ட்’ என்ற கதை, இளவயதுப் பெண் இரண்டாவது தாரமாக இன்ஜினீயருக்கு வாழ்க்கைப்படுவது; அவர்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் தன் வயதையொத்த இளைஞன் செந்திலால், நாயகி சுகந்தி உற்சாகம் பெறுவதும் நிலைதடுமாறுவதும் பிறகு எதார்த்தத்தை உணர்ந்து அழுவதும் நன்றாக வடிக்கப்பட்டிருக்கிறது. நூல் தொகுப்புக்கே தலைப்பாக வந்த ‘எக்கோஸ் ஆஃப் தி வீணா’ கதையில், வித்வானிடம் இரண்டே ஆண்டுகள் விருப்பமில்லாமல் கற்றுக்கொண்ட நாயகி ரம்யா, அவருடைய மறைவுக்குப் பிறகு வீட்டுக்குச் சென்று இரங்கல் தெரிவிப்பதும், வித்வான் விட்டுச் சென்றது இரண்டு மகன்களை அல்ல, ராகங்களை என்று முடித்திருப்பதும் நிறைவைத் தருகிறது.
சூடாமணியினுடைய கதைகளின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று அவையெல்லாம் பெண்களை மையமிட்டிருப்பதுதான். ஆரோக்கியமான பெண்ணிய உரையாடல்கள் பிரமாதமாகக் கதைகளில் சாத்தியப்பட்டிருக்கின்றன. பெண்கள் மட்டுமே உணர்ந்துகொள்ளக்கூடிய விஷயங்கள் வெகு அசாத்தியமாக இவரது கதைகளில் வெளிப்படுகின்றன. அவை ஏதும் சிதையாமல் மொழிபெயர்ப்பில் சாத்தியமாகியிருக்கிறது என்பது அதை மொழிபெயர்த்தது ஒரு நீதிபதி அல்லது ஒரு பெண் என்பதால் மட்டுமல்ல; அவர் சூடாமணியின் எழுத்தில் தோய்ந்த வாசகியும் என்பது நூலில் வெளிப்படுகிறது.

எக்கோஸ் ஆஃப் தி வீணா
ஆர்.சூடாமணி
மொழிபெயர்ப்பு: பிரபா ஸ்ரீதேவன்
ரத்னா புக்ஸ், டெல்லி
விலை: ரூ.349

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x