360: ஆர்.பாலகிருஷ்ணனின் புதிய புத்தகம்

360: ஆர்.பாலகிருஷ்ணனின் புதிய புத்தகம்
Updated on
1 min read

ஆர்.பாலகிருஷ்ணனின் புதிய புத்தகம்

ஒடிசா மாநில அரசின் ஆலோசகரும், சிந்து சமவெளி பண்பாட்டு ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணனின் புதிய புத்தகம் ‘ஜர்னி ஆஃப் எ சிவிலைசேஷன்: இண்டஸ் டு வைகை’ எதிர்வரும் திங்கள் அன்று (டிசம்பர் 16) மாலை 5.30 மணியளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து வெளியாகவிருக்கிறது. நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, ‘இயர்லி இண்டியன்ஸ்’ நூலாசிரியர் டோனி ஜோசப் பெற்றுக்கொள்கிறார். என்.கோபாலசாமி, சுப்ரோடோ பக்சி, கே.ராஜன், பி.ஜெ.செரியன், த.உதயச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பெட்டி பெட்டியாய் அள்ளுங்கள்

பழைய புத்தக விற்பனையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் ‘புக்சோர்’. 2018-ல் பழைய புத்தக விற்பனையை ஒரு திருவிழாவாக முன்னெடுத்து அதைப் பெரும் வெற்றியாக மாற்றியவர்கள் இப்போது இரண்டாவது முறையாக சென்னைக்கு வந்திருக்கிறார்கள். தள்ளுபடியோ எடைக்கணக்கிலோ அல்லாமல் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பெட்டியை வாங்கிக்கொண்டு அதில் உங்கள் மனம்போல புத்தகங்களை நிரப்பிக்கொள்ளலாம். சென்னை தி.நகரிலுள்ள விஜயா மஹாலில் நேற்று (டிசம்பர் 13) தொடங்கிய திருவிழா டிசம்பர் 22 வரை நடக்கிறது.

உள்ளங்கைக்குள் ஒரு நூறு ஹைக்கூ

தமிழில் ஹைக்கூ கவிதையை இயக்கமாகவே முன்னெடுத்தவர் மு.முருகேஷ். இளம் கவிஞர்கள் பலரையும் ஹைக்கூ எழுத உற்சாகப்படுத்தி அக்கவிதைகள் நூல்வடிவம் காணச் செய்தவர். ஊரார் கவிதைகளையெல்லாம் ஊட்டி வளர்த்தவர் தன் கவிதைகளைச் சும்மா விடுவாரா? மூன்று வரிக் கவிதைகளின் தொகுப்பை மூன்று சென்டி மீட்டர் நீள அகலங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். தலைப்பு ‘குக்கூவென...’.

குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள்

வா.செ.குழந்தைசாமியின் நினைவைப் போற்றும் வகையில் ‘குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள்’ வழங்கப்படுகின்றன. தமிழியல் ஆய்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் அறிஞர்கள் மூவருக்குத் தலா ரூ.1 லட்சம் வழங்குவது இவ்விருதுகளின் சிறப்பு. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் ய.மணிகண்டன், பேராசிரியர் ம.ராஜசேகர தங்கமணி ஆகியோர் 2019-க்கான விருதைப் பெறுகிறார்கள்.

வேலூரில் புத்தகக்காட்சி

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், வேலூர் லயன்ஸ் கிளப், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி வேலூர் எத்திராஜம்மாள் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபத்தில் தொடங்கியிருக்கிறது. இன்று (டிசம்பர் 13) தொடங்கும் புத்தகக்காட்சி கிறிஸ்துமஸ் வரை நடக்கிறது. 5 ஆயிரம் தலைப்புகளில், 5 லட்சம் புத்தகங்கள் காத்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in