

கர்னாடக இசையில் ஆழங்கால் பட்ட அனுபவம், சாகித்யங்களை எழுதுவது, ராகங்கள் குறித்த ஆழமான அறிவு, மனித நேயம், நகைச்சுவை, பரிபூரண மான பக்தி.. இப்படி பலவிதமான பரிமாணங்களையும் தன்னுள் தேக்கி ஓடிய ஜீவநதியான தட்சிணாமூர்த்தி சுவாமியின் வாழ்க்கையில் இருந்து சில துளிகளை சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாடகமாக்கினர் தியேட்டர் மெரினா குழுவினர்.
‘சங்கீத குலபதி டாக்டர் வி.தட்சிணாமூர்த்தி சுவாமி’ என்ற இந்த நாடகத்தில், தட்சிணாமூர்த்தி என்னும் மனிதரின் வாழ்வில் இறைவன் வைக்கத்தப்பன் நடத் தும் அற்புதங்கள், அவரது இசைப் பயணம், வைக்கத்தில் 7 நாட்களுக்கு தட்சிணாமூர்த்தி சுவாமியின் கச்சேரியே நடக்கும் விந்தை.. இப்படி நீண்ட நெடிய சம்பவங் களின் கண்ணிகளை முறை யாக கோர்த்து திரைக்கதை, வசனத்தை தட்சிணாமூர்த்தி சுவாமி யின் பேரன் தக்ஷன் வெகு சிறப் பாக எழுதியிருந்தார்.
ஆர்.கிரிதரனின் இயக்கத்தில் 90 நிமிட நாடகம் தெளிந்த நீரோ டையாகச் சென்றது. பத்திரிகையா ளருக்கு தட்சிணாமூர்த்தி சுவாமி பேட்டி தரும் உத்தியில் நாடகத்தை நகர்த்தியதில் இயக்குநரின் சாமர்த்தியம் பளிச்சிடுகிறது. அதே சமயம், ஒரு பிரபலமானவரைப் பற்றிய விஷய ஞானம் போதாத வராக பத்திரிகையாளரை சித்தரித் திருப்பது ஏமாற்றம்.
பத்திரிகையாளராக வரும் மீரா (தீப்தா) தனது இயல்பான நடிப்புத் திறமையால் கவனம் ஈர்க்கிறார். சிறிய வேடத்தில் தோன்றியவர்களும் ஈடுபாட்டுடன் தங்கள் பங்களிப்பை செய்திருந் தனர். பாலகன், வாலிபன், வயது முதிர்ந்த தோற்றத்தில் தட்சிணாமூர்த்தியாக மேடையில் தோன்றிய சாய் ரக்ஷித், அஸ்வின் கிருஷ்ணா, சாந்தாராம் ஆகிய மூவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தனர்.
`சுவாமி சரணம்’ என்பதையே தட்சிணாமூர்த்தி சுவாமி இரு வித மான தொனிகளில் வெளிப்படுத் துவார். அது மட்டும் நாடகத்தில் மிஸ்ஸிங்!
‘ஈஸ்வரன் ஒன்றே சாஸ்வதம் என்றே’, ‘கமலாசனே’, ‘நானாரோ நீயாரோ’, ‘சகலமும் நீ என்று’, ‘ராமா ரவிகுல சோமா’, ‘எங்கும் நிறைந்த பொருள்’, ‘அன்பாம் என் ஆலயத்தில்’ ஆகிய தட்சிணா மூர்த்தி சுவாமியின் பாடல்களை யும், இசையையும் பயன்படுத்தி யது மிகவும் சிறப்பு.
இசை நுணுக்கங்கள் குறித்த பத்திரிகை நிருபரின் பல கேள்வி களுக்கும் ‘அந்த வைக்கத்தப்பன் தான் காரணம்’ என்கிறார் தட்சிணா மூர்த்தி. இன்றைய தலைமுறை யின் பிரதிநிதியாக அவர் சொல்லும் விஷயங்களை `கோ-இன்ஸிடன்ட்’ என்று நம்பும் பத்திரிகையாளர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள் ளும் நிகழ்வோடு நாடகம் முடிகிறது.
தட்சிணாமூர்த்தி சுவாமி எனும் சங்கீத சாகரத்தின் ஒரு கமண்டல நீர்தான் இந்த நாடகம். குறைவாக கிடைத்தாலும் நிறைவைத் தரும் பிரசாதம்!