

தரமான புத்தகங்கள் மலிவான விலைக்குக் கிடைக்குமா என்று ஏங்குபவர்கள் நிறைய. அதிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வண்ணப் படங் களுடன், ஆனால் மலிவு விலையில் கிடைத்தால் எப்படி இருக்கும். வாருங்கள், நேஷனல் புக் டிரஸ்டின் அரங்குக்கு (அரங்கு எண் - 505). மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த வெளியீட்டுப் பிரிவு இந்திய மொழிகள் அனைத்தையும், இந்திய மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாகவே செயல்படுகிறது.
வண்ணப் படங்கள், தரமான வடிவமைப்பு, பிரபலமான ஆசிரி யர்கள். ஆனால், விலையோ மிகமிகக் குறைவு. அள்ளிச் செல்லலாம், அப்படிப்பட்ட புத்தகங்கள் குவிந்துகிடக்கின்றன இந்த அரங்கில். குறிப்பாக, குழந்தைகளுக்கான புத்தகங்கள் பெரும் பொக்கிஷங்கள். விலங்குகளின் வீடுகளிலிருந்து மனிதர்களின் வீடுகள் வரை அழகான சித்திரங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் ‘வீடுகள்’, அற்புதமான நீர்வண்ண ஓவியங்களைக் கொண்ட ‘ஒரு காகத்தின் கதை’, ‘சக்கரத்தைக் கண்டுபிடித்த எறும்புகள்’, ‘ஆசையுடன் வளர்த்த மீசை’, ‘புத்திசாலி உழவனும் நான்கு போக்கிரிகளும்’ போன்ற புத்தங்கள் குழந்தைகளைக் குஷிப்படுத்தக்கூடியவை. நூறு ரூபாய் இருந்தால் போதும், உங்கள் குழந்தைகளுக்குப் பத்துப் புத்தகங்கள் கொண்ட நூலகம் கிடைத்துவிடும்.