Published : 06 Aug 2015 10:46 AM
Last Updated : 06 Aug 2015 10:46 AM

வீடில்லாப் புத்தகங்கள் 44: லோட்டியின் பயணம்!

கடந்த வாரம் பிரெஞ்சு நாவலாசிரி யர் பியர் லோட்டி எழுதிய ‘ஆங்கிலேயர் இல்லாத இந்தியா’ புத்தகத்தைப் பற்றியும், அதில் தமிழகத்தில் பல இடங்களுக்கு அவர் பயணித்து எழுதிய குறிப்புகளையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி…

‘‘நாங்கள் நாகர்கோவில் எனும் கிராமத்தை வந்தடைந்தபோது சிலர் எனக்கு சல்யூட் அடித்து வரவேற்றனர். அங்கே நான் தங்கி இரவில் மீண்டும் பயணிப்பதாக ஏற்பாடு. அங்கே சந்தித்த ஆண்கள் வெண்கல நிறத்துடன் பொருத்தமான மீசையுடன் இருந்தார் கள். ஆனால், பெண்கள் அழகுடையவர் களாக தெரியவில்லை. வயதுக்கு அதிக மான முதிர்ச்சித் தோற்றம் கொண்டிருப் பதைப் போல தெரிந்தார்கள். பெரிய உதடுகள் கொண்டிருந்தார்கள். காது களில் தங்க நகை அணிந்திருந்தார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தையொட்டியே எங்கள் பயணம் நீண்டது’’ என்று எழுதிச் செல்கிறார்.

பியர் லோட்டியின் ‘ஆங்கிலேயர் இல்லாத இந்தியா’ புத்தகத்தின் தனிச் சிறப்பே நுட்பமான விவரணைகள்தான். திருச்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது மலைக்கோயிலை வியந்து எழுதியிருக் கிறார். ரங்கத்துக்கு அவர் போனபோது அங்கே தேர்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.

திருவிழாவுக்காக இரவில் வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்கள், தேரின் அலங்கார வேலைப்பாடுகள், பந்தம் பிடிப்பவர்கள், வடம் பிடிக்கக் காத் திருக்கும் பக்தர்கள், ஆடல்பாடல் இசை நிகழ்வுகள், யானைகளின் அணிவகுப்பு, தேர் கிளம்பும் ஆரவாரம், ஆடி அசைந்து செல்லும் தேரின் அழகு, வானில் வட்ட மிடும் காகம், கிளிகள் என ஓர் ஆவணப் படத்தைப் போல துல்லியமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் பியர் லோட்டி

இதுபோலவே மதுரையின் வணிகவீதி கள், தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோயில், அதன் மதிப்புமிக்க வைர, வைடூரிய, தங்க நகைகளைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.

புகழ்பெற்ற நாடக நடிகையும், நடனக் காரருமான பாலாமணியின் நாடகத்தை தான் கண்டு ரசித்ததை லோட்டி குறிப் பிடுகிறார். நாடக உலகின் ராணியாக கொண்டாடப்படும் பாலாமணி அம்மாள் தனது சகோதரியுடன் இணைந்து நடத் திய ‘பாலாமணி அம்மாள் நாடக கம் பெனி’ முழுவதும் பெண்களால் நடத்தப் பட்டது. பாலாமணி அம்மாளின் நாடகத் தைப் பார்ப்பதற்காகவே அந்த நாட் களில் சிறப்பு ரயில் விடப்பட்டதையும், பாலாமணியின் நாடகம் சிலிர்ப் பூட்டு வதாக அமைந்திருந்ததையும் ரசித்து எழுதியிருக்கிறார் லோட்டி.

ஐரோப்பிய பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஓர் அநாதை இல்லம் தொடங்கு வதற்காக நன்கொடை கேட்டு வந்த போது, பாலாமணி அம்மாள் ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்த பெருந்தன்மை குறித்து எழுதியதோடு, பாலாமணியின் வீட்டுக் கதவுகள் கஷ்டப்படுகிறவர்களுக்காக எப்போதும் திறந்தே இருந்தன என்றும் பெருமையாக குறிப்பிடுகிறார்.

லோட்டிக்குள் ஒரு கவிஞர் ஒளிந் திருக்கிறார் என்பதை அவரது விவரிப்பு களில் அடையாளம் காண முடிகிறது. ‘‘பயண வழியில் தென்படும் ஆலமரங் களின் விழுதுகள் யானையின் துதிக்கைப் போலவே தென்படுகிறது. உண்மையில் இயற்கைக்கு யானையின் வடிவம் மிகவும் விருப்பமானது போலும்; இயற்கை படைத்தவற்றில் எல்லாம் ஏதாவது ஒரு கோணத்தில் யானை தென்படுவது போலவே உள்ளது’’ என்கிறார் லோட்டி.

பாண்டிச்சேரிக்கு வருகை தந்த பியர் லோட்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்தது போன்ற உணர்வை அடைவதாக கூறுகிறார். பிரெஞ்சு கலாச் சாரத்தின் அடையாளமாக உள்ள பாண்டிச்சேரி வீதிகளின் பெயர்கள், பெரிய பெரிய வீடுகள், பிரெஞ்சு உணவு வகைகள், இசை, மற்றும் நடனவிருந்து கள் அவருக்கு சொந்த ஊரின் உணர்வை ஏற்படுத்தியதாம்.

ஹைதராபாத் நகருக்குச் சென்ற பியர் லோட்டி ‘‘அது ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் வரும் பாக்தாத் நகரம் போலவே இருந்தது. அங்கே நிஜாம் வருகை தரப் போவதையொட்டி கைகளில பலவிதமான பறவைகளுடன் ஆட்கள் உலா வந்தனர். முக்காடு அணிந்த பெண்களும், ஆபரணங்கள் விற்கும் கடைகளும், ரோஜாப் பூ விற்பவர்களும், விசித்திரமான தலைப்பாகை அணிந்த ஆண்களும், அரேபிய வணிகர்களும் காணப்பட்டனர்’’ என்று பதிவு செய்துள்ளார்.

வட மாநிலங்களை நோக்கி செல்லும் போது பஞ்சத்தால் பாதிக்கபட்ட மக் களைக் கண்ட லோட்டியின் அனுபவம் நெஞ்சை உலுக்கக்கூடியது. ‘‘வழியெல் லாம் எலும்புக்கூடுகளாக நிற்கும் ஏழைக் குழந்தைகள் வறுமைத் துயரத்துடன் ஏதாவது ஒரு பாடலை பாடவோ, முன கவோ செய்கிறார்கள். அவர்கள் உடலில் சதை என்பதே இல்லை. தோலினால் மூடப்பட்ட எலும்புக்கூடாகவே காட்சி யளித்தார்கள். அவர்களது ஒட்டிய வயிறு உள் உறுப்புகளே இல்லையோ எனும் படியாக இருந்தது. அவர்கள் உதடுகளி லும் கண்களிலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கொடும்பசியால் வாடிக் கொண்டிருந்தனர்.

ரயில் வண்டி கடந்து போகும்போது ஏழைகள் கையேந்தியபடியே ‘மகா ராஜாவே… மகாராஜாவே…’ எனக் கதறிய படி பின்னால் ஒடினார்கள். சிலர் ரயிலில் இருந்து சில்லறைகளைக் குழந்தைகளை நோக்கி வீசினார்கள். பஞ்சத்தால் வாடும் மக்களின் கூக்குர லைக் கேட்கும்போது மனம் நடுங்கியது. ஒரு கடைக்காரன் இட்லி தின்று கொண் டிருக்கும்போது, இறந்து கொண்டிருக் கும் குழந்தையை கையில் ஏந்தியபடியே ஓர் ஏழைப் பெண் அவனிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த ஆள் அவளைப் பற்றி கவலையின்றி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந் தான். அவள் பசி தாங்கமுடியாமல் பெருங்குரலில் கத்தினாள். எவரும் தனக்கு உணவளிக்க மாட்டார்கள் என்ற இயலாமையை வெளிப்படுத்துவது போல் இருந்தது அவளின் குரல்’’ என்கிறார் லோட்டி.

குவாலியர் நகருக்குச் சென்ற லோட்டி அதை ‘கற்சிற்பங்களின் நகரம்’ எனக் கூறுகிறார். வீடுகள், மதில் சுவர்கள் எங்கும் சிற்பங்கள் காணப்படுவதாக கூறுகிறார். ‘‘ஓவியங்களும் சிற்பங்களும் ஒளிரும் கலைநகரமாக குவாலியர் விளங்குகிறது. வண்ணங்கள் மீது குவாலியர் மக்களுக்கு இருக்கும் மோகம் வலுவானது. துணிகளில் வண்ணம் தீட்டும் தொழில் பல தெருக்களில் நடை பெறுகிறது. பேரழகுமிக்க அரண்மனை யும் அலங்காரமான வளைவுகளும் குவா லியர் நகருக்கு அழகு சேர்க்கின்றன…’’ என லோட்டி எழுதியுள்ளார்.

உதய்பூர், பனாரஸ் எனச் சுற்றி யலைந்த பியர் லோட்டி இந்தியர்களின் ஆன்மிகத் தேடுதலை வியந்து பாராட்டு கிறார். குறிப்பாக, காசியின் படித்துறை யில் தான் சந்தித்த சாதுக்களைப் பற்றியும் அவர்கள் போதித்த ஞானம் குறித்தும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார்.

லோட்டி வெறும் பயணி மட்டுமில்லை; அவர் ஒரு காதல் மன்னன். சாரா பென்ஹார்ட் என்ற நடிகையை அவர் காதலிக்க விரும்பினார். அதற்காக அவர் தன்னை ஒரு பெர்சிய கம்பளத்தினுள் சுருட்டிக் கொண்டு அந்தக் கம்பளத்தைப் பரிசாகக் கொண்டுபோய் சாராவிடம் அளிக்கும்படியாக கூறினார். சாரா கம்பளத்தைப் பிரித்து உருட்டியபோது அதில் இருந்து லோட்டி வெளிப்பட்டார். அந்த வேடிக்கைக்காகவே அவரை சாரா காதலிக்கத் தொடங்கினார்.

ரோஸ்போர்டில் இருந்த தனது வீட்டை யொட்டி புது வீடு ஒன்றை விலைக்கு வாங் கிய லோட்டி, தான் பயணம் செல்லும் நாடுகளில் இருந்து கிடைத்த கலைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட விலங்கு கள், நகைகள் போன்ற அரிய சேமிப்பு களைப் பாதுகாத்து வந்தார். அந்த வீடு தற்போது மியூஸியமாக மாற்றப் பட்டுள்ளது.

116 ஆண்டுகளுக்கு முன்பாக பியர் லோட்டி கண்ட தமிழகத்தை இந்தப் புத்தகத்தில் வாசிக்கும்போது ‘இன்று நாம் எதை இழந்திருக்கிறோம்? எதில் வளர்ந்திருக்கிறோம்…’ என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காகவே லோட்டியை நாம் பாராட்ட வேண்டும்!

- இன்னும் வாசிப்போம்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x