Published : 07 Dec 2019 09:19 AM
Last Updated : 07 Dec 2019 09:19 AM

சிவசங்கரியின் நெடும் பயணம்!

பிருந்தா

நினைவை மீட்டுவதென்பது காலச் சக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிப் பயணித்து மீள்வதைப் போன்றது. ‘சூரிய வம்சம்’ நினைவலைகளின் மூலம் அதை நிகழ்த்துகிறார் சிவசங்கரி. வாழ்க்கை சுரத்தில்லாமல் நிறமிழக்கும் நேரத்தில், மலர்ந்து சிரிக்கிற வசந்தத்தைப் போல எழுத்துலகில் புதுப் பாய்ச்சலுடன் புகுந்தவர் அவர். மானசீகமாகத் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொண்ட லலிதாவுக்காகத் தன் நினைவலைகளைத் தொகுத்திருக்கிறார். இது சுயசரிதை அல்ல என்று சொல்லும் சிவசங்கரி, சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டிவரும், பலரைக் காயப்படுத்த வேண்டிவரும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டுத் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளை மட்டும் நேர்த்தியாகத் தொடுத்திருக்கிறார்.

குழந்தைப் பருவம் தொடங்கி இன்று வரை தன் நினைவுக்குள் தங்கியிருப்பவற்றை மனத்துக்கு அணுக்கமான தொனியில் பகிர்ந்துகொள்கிறார். தன் குடும்ப உறவுகள், வாழ்க்கைப் பயணத்தில் உடன் வந்த நண்பர்கள், சந்தித்த ஆளுமைகளைப் பற்றி சிவசங்கரி விவரிக்கும்போது இவ்வளவு நெடிய பயணமா என வியப்பு ஏற்படுகிறது. அனைத்தையும் போகிறபோக்கில் சொல்வதுபோல் இருந்தாலும், அவர் விவரிக்கிற நிகழ்வுகள் ஏற்படுத்துகிற தாக்கத்தில் அங்கேயே மனம் சில நிமிடங்களுக்கு நின்றுவிடுகிறது. மெட்ராஸில் தொடங்கி விழுப்புரத்துக்குச் சென்று அங்கிருந்து அலாஸ்கா, அயோவா எழுத்தாளர்கள் மாநாடு, எகிப்து, மலேசியா என்று பல நாடுகளுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று மீண்டும் சென்னைக்கே அழைத்துவந்துவிடுகிறார். ஜன்னலோர இருக்கையில் நம்மை உட்காரவைத்து, கடந்து செல்கிற மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர் விவரிக்கிற நேர்த்தியில் எல்லாமே பலவண்ணக் காட்சிகளாக விரிகின்றன.

வன்முறையும் அநீதியும் நடக்கிறபோது மானையும் தேனையும் பாடுவதால் என்ன பயன்? அறத்தையும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் எழுதினால்தானே அது பயன்தக்கது. எழுதக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அப்படித்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைத் தன் படைப்புகள் தோன்றிய விதம், எழுதப்பட்ட சூழல் குறித்து சிவசங்கரி சொல்லும்போது புரிகிறது.

கற்பனை, தற்காலிக சிலிர்ப்பைத் தருகிறது என்றால் உண்மையோ மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். சிவசங்கரியின் படைப்புகளைப் படித்தவர்களில் பலர் தங்களை அப்படியான மாற்றத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். குழந்தைப்பேறு இல்லாத தனது சித்தியையும், தனக்கு நேர்ந்தவற்றையும் அடிப்படையாக வைத்து ‘எதற்காக?’ நாவலை எழுதினார். முதல் நாவலே பல்வேறு கேள்விகளைச் சமூகத்தின் முன் வைத்தது. பெண்மையின் பெருமையெல்லாம் குழந்தைப்பேறு என்பதற்குள் மட்டுமே அடங்கிவிடக்கூடியதா என்கிற வாதம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் சமூகத்தில் எப்படியான அலைகளை உருவாக்கியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தான் எழுதவந்து 50 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தற்போதைய சூழலோடு அந்தக் காலத்தை ஒப்பிட்டுச் சிலவற்றை சிவசங்கரி சொல்கிறார். தினசரி செய்திகளின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து மிகுந்த அக்கறையோடு பதிவுசெய்கையில், சிறுவயதில் தனக்கு நேர்ந்ததையும் குறிப்பிடுகிறார். பின்னாளில் பலரும் தாங்களும் அப்படியான பாலியல் சீண்டலுக்கு ஆளானதைப் பகிர்ந்துகொண்டதாகவும் சொல்கிறார். இதை மையமாக வைத்து உருவானதுதான் ‘ராட்சஸர்கள்’ சிறுகதை. அப்பா, அண்ணன், சித்தப்பா, அக்காள் கணவர் போன்ற நெருங்கிய உறவுகளால் சீரழிக்கப்பட்டுத் தாயான சிறுமிகளைச் சந்தித்து, அவற்றை ‘உண்மைக் கதைகள்’ என்ற தலைப்பில் பதிவுசெய்திருக்கிறார். கண் தானம், கருணைக்கொலை, மது அடிமைகள் மறுவாழ்வு, போதைப்பழக்கம், மறுமணம் என்று கதை எழுத இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்துக்கான உந்துதலாக இருந்திருக்கிறது.

பெண்ணியம் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத் தனக்கு நேர்ந்த அனுபவத்தின் மூலம் விளக்குகிறார். தன்னை விழாவில் பேச அழைத்தவர்களிடம், தன் கணவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறேன் என்று சிவசங்கரி சொல்லியிருக்கிறார். விழாவுக்கு அழைத்த பெண்ணோ, “இந்த அளவுக்குத்தானா உங்கள் பெண்ணியம்?” என்று கேட்க, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் சிரித்திருக்கிறார்கள். தன்னை மதித்து, தன் செயல்பாடுகள் அனைத்துக்கும் துணை நிற்கும் ஒருவரை மதிப்பது பெண்ணியத்தில் சேராதா எனக் கேட்கும் சிவசங்கரி, பிறரை எட்டி உதைத்துவிட்டுப் பேசுகிற பெண்ணியத்தால் என்ன பயன் என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’, எழுத்துலகுக்கு சிவசங்கரி ஆற்றிய முக்கியமான பங்களிப்பு. 1994-ல்
அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த 18 இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களில் சிலரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். அந்தத் தொகுப்புகள் வெளிவர அவர் செலுத்திய உழைப்பைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது.

நினைவலைகளின் இரண்டு பகுதிகளையும் படித்து முடிக்கும்போது சிவசங்கரி இருவிதங்களில் தெரிகிறார். நாய்க்குட்டியைத் தூக்கச் சென்று, அதன் அம்மாவிடம் கடிபட்ட குழந்தை ‘ஜிபு’வாகத் தோன்றி, கணவனை இழந்த நிலையில் என்ன செய்வதெனத் தெரியாமல் அமெரிக்காவிலிருந்து போன்செய்து பேசிய பெண்ணுக்கு ஆறுதல் தந்த, ஒன்பது ஓட்டைகள் உள்ள பானையில் தண்ணீர் தங்குவது அதிசயமா, வெளியேறுவது அதிசயமா என்ற வாரியாரின் வார்த்தைகளைத் தத்துவார்த்தமாக அணுகும் சிவசங்கரியாக விஸ்வரூபம் எடுக்கிறார்.

- பிருந்தா, தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

************************************

சூரிய வம்சம் (இரண்டு பகுதிகள்)
சிவசங்கரி
பதிவு - எழுத்து: ஜி.மீனாட்சி
வானதி பதிப்பகம்
தி.நகர், சென்னை-600017.
044-24342810
மொத்த விலை: ரூ.600

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x