Published : 01 Dec 2019 10:07 am

Updated : 01 Dec 2019 10:07 am

 

Published : 01 Dec 2019 10:07 AM
Last Updated : 01 Dec 2019 10:07 AM

வெண்ணிற நினைவுகள்: திரையை வாசிப்பவன்

vennira-ninaivugal

எஸ்.ராமகிருஷ்ணன்

ஆர்சன் வெல்ஸின் புகழ்பெற்ற ‘சிட்டிசன் கேன்’ படத்தின் தொடக்கக் காட்சி மிக முக்கியமானது. மிகப் பெரிய அரண்மனை போன்ற தோற்றம் கொண்ட வீட்டில் தனியே வாழும் சார்லஸ் ஃபாஸ்டர் கேன் ‘ரோஸ்பட்’ என்ற பெயரை உச்சரித்தபடியே இறந்துபோகிறார். ரோஸ்பட் என்ற சொல் எதைக் குறிக்கிறது எனத் தேடுவதன் வழியே கேனின் கடந்த கால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. படத்தின் முடிவில் ரோஸ்பட் எனப்படுவது கேனின் சிறுவயதில் பரிசளிக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பொருள் என்று தெரியவருகிறது. படம் பார்த்த பார்வையாளர்கள், தங்களின் ரோஸ்பட் எதுவென ஆராயத் தொடங்கினார்கள். பத்திரிகைகளும் பால்ய காலத்தின் மகிழ்ச்சியைச் சுட்டிக்காட்ட ரோஸ்பட் என்ற சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தன. இன்றைக்கும் அச்சொல் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.


சினிமாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் ஏன் உலகெங்கும் இவ்வளவு புகழ்பெற்றது? உண்மையில், ரோஸ்பட் என்ற சொல் புதிரின் ஒற்றைத் துண்டைப் போலப் பார்வையாளரைத் தூண்டுகிறது. ஒருவகையில் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்க அச்சொல்லே கால இயந்திரம்போலச் செயல்படுகிறது. காட்சி வழியாகப் பின்னோக்கிப் போவதற்குப் பதிலாக ஒரு சொல் வழியாகப் பின்னோக்கிப் போக வைக்க முடியும் என்பதற்கு ‘சிட்டிசன் கேன்’ சிறந்த உதாரணம். அப்படி இன்றைக்கும் நோபல் பரிசுபெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான ஹென்ரிச் போல் புத்தகம் எதையாவது கையில் எடுத்தால் மறுநிமிடம் ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் மனதில் தோன்றிவிடுகிறது. எங்கோ இருக்கும் ஒரு ஜெர்மானிய எழுத்தாளனுக்கும் ஒரு தமிழ் சினிமாவுக்கும் என்ன உறவிருக்கிறது? அதுதான் ஆச்சரியம். ஒரு எழுத்தாளரை சினிமா என்ன செய்யும் என்பதற்கு இந்த அனுபவம் ஒரு சிறு உதாரணம்.

என் கல்லூரி நாட்களில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் வெற்றிகரமாக ஓடி சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடு செய்திருந்தார்கள். அப்போதும் நல்ல கூட்டம். படத்தின் ஒரு காட்சியில் ஜெயப்பிரதா விமானத்தில் பறக்கும்போது கையில் ஒரு புத்தகம் வைத்துப் படித்துக்கொண்டிருப்பார். அரை நிமிடம் வந்துபோகும் காட்சி அது. தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அது என்ன புத்தகம் என்று கவனிப்பதற்குள் அடுத்த காட்சி வந்துவிட்டது. அதன் பிறகு மனது படத்தில் லயிக்கவில்லை.

ஜெயப்பிரதா படிக்கும் புத்தகம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காகவே மறுமுறை படம் பார்க்கப் போனேன். இதற்காகத் திரையின் முன்பாக உள்ள வரிசையில் அமர்ந்துகொண்டேன். அந்தக் காட்சியில் அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் ஆசிரியர் பெயர் மட்டுமே தெளிவாகத் தெரிந்தது. அது ஹென்ரிச் போல் (Heinrich Boll) என்ற எழுத்தாளரின் புத்தகம். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், என்ன புத்தகம் அது, நாவலா, கட்டுரையா எனத் தெரிந்துகொள்வதற்காக மறுநாள் நூலகத்துக்குச் சென்றேன். அந்த நாட்களில் இன்று உள்ளதுபோல கூகுள் வசதியோ இணையமோ கிடையாது. எந்தத் தகவலாக இருந்தாலும் கலைக்களஞ்சியம் அல்லது இதழ்த் தொகுப்புகளில் தேடிச் சலித்துத்தான் கண்டறிய வேண்டும். மதுரையில் ஹென்ரிச் போல் பற்றி ஒரு தகவலையும் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் வழியாக ஹென்ரிச் போல் நோபல் பரிசுபெற்ற ஜெர்மானிய எழுத்தாளர் என்பதை அறிந்துகொண்டேன்.

விளையாட்டுத்தனமும் பேரழகும் கொண்ட ஜெயப்பிரதா ஒரு ஜெர்மன் நாவலைப் படிப்பது விசித்திரமாக இருந்தது. எதற்காக அக்காட்சியில் அந்தப் புத்தகத்தைப் படிக்க வைத்தார்கள்? தற்செயலாகத்தான் நடந்திருக்கும். என்றாலும், நிஜத்தில் யார் ஹென்ரிச் போல் படிக்கக்கூடியவர்? கமல்ஹாசன் நிறையப் படிப்பவர். ஒருவேளை அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகம்தான் கதாநாயகி கையில் தரப்பட்டதா? இல்லை, ஜெயப்பிரதா நிறையப் படிக்கக்கூடியவரா? இவர்களின்றிப் படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் சுஜாதா. ஒருவேளை அவரது புத்தகமா? அனந்து நிறையப் படிக்கக் கூடியவர். அவரது புத்தகமா? கே.பாலசந்தரும் தீவிர வாசிப்பாளர்தானே?

எவர் படித்த புத்தகம் எனத் தெரியாதபோதும் நோபல் பரிசுபெற்ற ஒரு புத்தகம், தமிழ் சினிமா ஒன்றில் காட்டப்படுவதை முதன்முறையாகப் பார்த்தேன். உடனே, அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவானது. அதன் பிறகு, ஹென்ரிச் போல் புத்தகத்தைத் தேட ஆரம்பித்தேன். எங்கேயும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி தரியாகன்ச் பழைய புத்தகக் கடை ஒன்றில் ஹென்ரிச் போலின் புத்தகத்தைக் கண்டுபிடித்தேன். ஆச்சரியமாக, படத்தில் இடம்பெற்ற அதே அட்டையுள்ள புத்தகம். ‘தி லாஸ்ட் ஹானர் ஆஃப் கதரினா ப்ளம்’ என்ற நாவல்.

சினிமா படப்பிடிப்பில் பொதுவாகக் கலை இயக்குநர்கள் தங்களது சேமிப்பில் வைத்திருந்த புத்தகங்களைத்தான் காட்சியில் பயன்படுத்துவார்கள். அல்லது நடிகர், நடிகையர் வாசித்துக்கொண்டிருந்த புத்தகமாக இருக்கக்கூடும். ஒன்றிரண்டு இயக்குநர்களைத் தவிர வேறு எவரும் புத்தகம் படித்து நான் கண்டதில்லை. விதிவிலக்காகத் துணை நடிகர்கள், உதவி இயக்குநர்கள் ஓய்வு நேரத்தில் தீவிரமாகப் புத்தகம் படித்துக்கொண்டிருப்பார்கள். ஒரு சினிமா எடுக்க கோடி கோடியாகச் செலவழிப்பார்களே அன்றி, அந்த சினிமாவுக்குத் தேவையான ஆதாரங்களுக்காக, தரவுகளுக்காகப் புத்தகம் வாங்கக் காசு செலவழிக்க மாட்டார்கள்.


வேறு ஒரு தமிழ்ப் படத்தில் டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ புத்தகம் காட்டப்படுகிறது, இன்னொரு படத்தில் சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே சில குறிப்புகள்’ நாவல் காட்டப்பட்டிருக்கிறது. அவை தற்செயலாகக் காட்சியில் இடம்பெற்றிருந்தாலும்கூட, யாரோ ஒரு இலக்கிய வாசகரை அது சந்தோஷப்படுத்தவே செய்கிறது. ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இனிமையான பாடல்கள். இப்படத்தில், ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை’ என்றொரு சிறிய பாடல் உள்ளது. மிக அழகான பாடல் அது. ஒருவன் தனது சிறுவயதில் எதை மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதுகிறானோ அது மட்டுமேதான் அவனது நினைவில் கடைசி வரை எஞ்சி நிற்கும்போலும். பதின்வயதில் பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம் இன்றைக்கும் மனதில் பசுமையாக நிற்பது ரோஸ்பட் போன்றதுதான் இல்லையா?

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com


வெண்ணிற நினைவுகள்எஸ்.ராமகிருஷ்ணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x