Published : 01 Dec 2019 10:04 am

Updated : 01 Dec 2019 10:04 am

 

Published : 01 Dec 2019 10:04 AM
Last Updated : 01 Dec 2019 10:04 AM

கேரளக் கூத்தில் கம்பனின் அயோத்தி காண்டம் 

ayodhya-kaandam

அ.கா.பெருமாள்

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், ரவீந்திரநாத் தாகூரின் மாணவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான ஜீ.ராமச்சந்திரனை (1904-1995) பார்க்க எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் (1981) நானும் போனேன். அப்போது ஜீ.ஆர். திருவனந்தபுரம் அருகிலுள்ள பூவாறு என்னும் இடத்தில் நடந்த மலையாளக் கவிதைப்பட்டறைக் கூட்டத்தில் இருந்தார். அங்கேதான் கேரளத் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கிருஷ்ணன் குட்டிப் புலவரைச் சந்தித்தேன். அன்று அந்தக் கலைஞரிடம் பெரிதாகப் பேச முடியவில்லை. அவருடன் வந்திருந்த மலையாளப் படைப்பாளி ஒருவர், “19-ம் நூற்றாண்டிலேயே கேரளத்துச் சாக்கையர் கூத்தைப் பதிவுசெய்திருந்தால் மலையாளத்துக்கும் தமிழுக்கும் உள்ள துல்லியமான இலக்கணம் சாராத உறவை இன்னும் வெளிப்படுத்தியிருக்கலாம். இப்போது எஞ்சியிருப்பது தோல்பாவைக் கூத்து, வடகேரளத்து வேலனாட்டம், கண்ணகி வழிபாடு எனச் சில உள்ளன. இவற்றையும் பதிவுசெய்யத் தவறினால், தமிழ்-மலையாள உறவு குறித்த வாய்மொழிச் செய்திகள் முழுதுமாய் அழிந்துவிடும்” என்றார்.


கேரளம் திருச்சூரில் நடந்த ஒரு நாடக விழாவுக்கு வெங்கட் சாமிநாதனுடன் ஒருமுறை போனபோது, கிருஷ்ணன் குட்டிப் புலவரைச் சந்தித்தேன். தோல்பாவைக் கூத்துக்குரிய ஆடல் பற்றுத் தாள் பிரதி ஒன்றைக் காட்டினார். அப்போது நகலச்சு பரவலாகாத காலம். ஆடல் பற்றில் ஒரு காண்டத்தையாவது எழுதி எடுக்க ஆசை. முடியாமல்போனது. இது நடந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. சில நாட்களுக்கு முன்பு ‘காலச்சுவடு’ கண்ணனின் உதவியால் ஆடல் பற்றின் அயோத்தி காண்ட கையெழுத்துப் பிரதியின் நகலச்சைப் பெற்றேன். மலையாளத்திலிருந்து அப்படியே தமிழாக்கிய வடிவம். அந்தத் தமிழ்ப் பிரதி 388 பக்கங்கள் கொண்டது. அழகான கையெழுத்துப் பிரதி.

இப்பிரதியில் கம்பனுடைய அயோத்தி காண்டத்தின் 12 படலங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடல்களும், மணிப்பிரவாள உரைநடை விளக்கமும் உள்ளன. இதிலுள்ள கம்பனின் பாடல்கள் கேரளத் தோல்பாவைக் கூத்தில் அப்படியே பாடப்பட்டன. தோல்பாவைக் கூத்துக் கலை தென்னிந்திய மாநிலங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், கேரளத்தில் மட்டும் இக்கலைக்கென்றே ஒரு மூலப் பனுவல் உள்ளது. கேரளம் தவிர்த்த பிற மாநிலங்களில் இதை நிகழ்த்துகின்றவர்கள் மராட்டிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். கேரளக் கூத்தின் பார்வையாளர்களாக காளியே அமர்ந்திருக்கிறாள் என்பது ஆழமான நம்பிக்கை. பிற மூன்று மாநிலங்களுக்கும் இது பொருந்தாது.

கேரள ஐதீகம்

கேரளத்தில் இக்கலை வழிபாடும் சடங்கும் சார்ந்து நடக்கிறது. வடகேரளத்தில், குறிப்பாக பாலக்காடு மாவட்டத்தில் சில பகுதிகளில் பகவதி அல்லது பத்திரகாளி கோயில் விழாக்களில் நடக்கிறது. இப்படி நடப்பதற்கே ஒரு காரணம் சொல்லப்படுகிறது. காளியும் அசுரனான தாருகனும் யுத்தம் செய்த காலத்தில் ராம - ராவண யுத்தம் நடந்தது. ஆனால், ராமாயணத்தை காளி பார்க்க முடியாமல் ஆயிற்று. ராமனின் கதையைப் பார்க்க காளி ஆசைப்பட்டாள். இதற்காக காளி எனும் ஒரு பார்வையாளருக்காக ராமாயணக் கூத்தை நடத்தினர். இந்த ஐதீகம் பிற மூன்று மூன்று மாநிலங்களிலும் பேசப்படவில்லை.

கேரளத் தோல்பாவைக் கூத்துக்கும் ராமாயணமே மையம். மொத்த ராமாயணக் கதையையும் 21 நாட்களில் நிகழ்த்திக்காட்டுகின்றனர். இப்படிக் காட்டுவதற்கென்று ஒரு மூலப் பனுவல் உள்ளது. இது ஆடல் பற்று எனப்படுகிறது. ஆடல் - நடிப்பு; பற்று - தொடர்பானது. அதாவது, நடிப்பு தொடர்பான பனுவல் எனக் கூறலாம். நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்கள் ஆடல் பற்றில் உள்ளன. இவை கூத்துக் கவிகள் எனப்படும். முந்தைய காலங்களில் இப்பனுவலைத் தாளி ஓலைகளில் எழுதி வைத்திருந்தனர். இப்போது தாளில் பெயர்த்துள்ளனர். கூத்துக் கலைக் குழுவின் தலைவரின் வீட்டில் இந்தப் பனுவல் இருக்க வேண்டும் என்பது நியதி.
ஆடல் பற்று குரு-சீடர் வழி கடத்தப்படுகிறது. இது எழுத்து வடிவில் இருந்தாலும் அப்படியே சொல்லப்படு வதில்லை. கூத்துக் கலைஞர் தன் படிப்பு, அனுபவம், தேடல், மனோபாவம் வழி சேர்த்துக்கொண்ட விஷயங்களைக் கூத்தில் விளக்குவார். பொதுவாக, நாட்டார் கலைஞர்களின் கலைநிகழ்த்தலில் ஒரே மாதிரியான போக்கு காணப்படும் என்ற குற்றச்சாட்டு கேரளத் தோல்பாவைக் கூத்தில் இல்லை. ஒரு கோயிலில் சொல்லப்படும் விளக்கம் அடுத்த கோயிலில் இருப்பதில்லை. பிற தென்னிந்தியத் தோல்பாவைக் கூத்தும் கேரளக் கூத்தும் மாறுபடும் இடம் இதுதான்.

ஆரம்ப நிகழ்வு

கேரளப் பாவைக் கூத்தின் ஆரம்ப நிகழ்வு பிற தென்னிந்திய மாநிலக் கூத்து நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது காலமாற்றத்தால் அழியவில்லை. தோல்பாவைக் கூத்து நிகழ்த்துவதற்கென்றே கோயில்களின் அருகே கூத்து மாடங்கள் உண்டு. இந்த மாடம் மேற்கூரையும் (ஓடு அல்லது ஓலை) மூன்று புறமும் அடைக்கப்பட்டதாயும் இருக்கும். திறந்த பக்கத்தில் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். மாடத்துக்குள்ளே மின்விளக்கு பயன்படுத்துவதில்லை. எண்ணெய் விளக்கையே பயன்படுத்துகின்றனர். தேங்காய் மூடியில் ஒரு விரல் பருமனான துணித் திரியைப் போட்டு, தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கை எரிக்கின்றனர். 21 விளக்குகள் இருக்க வேண்டும் என்பது நியதி. அனுமன் இலங்கையை எரிக்கும் காட்சி போன்ற சிறப்புக் காட்சிகளில் தேங்காய் மூடி விளக்குகளின் மேல் தெல்லுப்பொடியைத் தூவுகின்றனர். உடனே, மத்தாப்பு எரிவதைப் போல் குபீரென்று தீப்பற்றி எரியும். உடனே அணைந்துவிடும். ஒரு மரத்தின் பாலைக் காயவைத்துப் பொடித்து இந்தப் பொடியைத் தயாரிக்கின்றனர்.
கூத்தரங்கின் முன்னே பார்வையாளர்கள் கூடியதும் வெளிச்சப்பாடு (கோயிலின் சாமியாடி) வருவார். இவர் இடுப்பில் சிவப்புப் பட்டுடன் கையில் வளைந்த வாளுடன் ஒரு கையில் சிலம்புடன் இருப்பார். இவர் கோயிலிலிருந்து கூத்துமாடத்துக்கு வரும்போது, கூடவே யானை ஊர்வலமும் வரும். இந்த நேரத்தில், மூத்த கலைஞர் கணபதி முதலான தெய்வ தோத்திரப் பாடல்களைப் பாடுவார். மாடத்தினுள் விளக்குகள் கொளுத்தப்படும். கூடவே கூத்துக்குரிய ரங்கபூசையும் நடக்கும்.

கம்பனின் பாடல்கள்

கேரளத் தோல்பாவைக் கூத்தில் ராமாயணம் மையப் பொருள். அதிலும் கம்ப ராமாயணக் கதையே உள்ளடக்கம். கேரளத்தில் அத்யாத்ம ராமாயணம் பொதுவாக அறியப்பட்டாலும் தோல்பாவைக் கூத்தில் கம்பனின் ராமாயண நிகழ்ச்சிகள் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. தமிழகத் தோல்பாவைக் கூத்திலிருந்து முழுதும் இது வேறுபட்ட நிலை. கம்பனின் காப்பியத்திலிருந்து 2,300 பாடல்கள் கேரளக் கூத்தில் பாடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கம்பனின் மூலப் பாடல்கள்; சில கம்பனைத் தழுவியவை. ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் உண்டு. இது தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மலையாள மொழியில் உள்ளது. ஆடல் பற்று மூலத்தில் உள்ள இந்த விளக்கங்களை அப்படியே சொல்லுவதில்லை.

ஆடல் பற்றைத் தொகுத்தவர் பற்றிய செய்திகளை மலையாள நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் ஜீ.வேணு சேகரித்திருக்கிறார். இவர் “புதூர் சின்னத்தம்பிப் புலவரே கேரளத் தோல்பாவைக் கூத்துக்காக கம்பனின் பாடல்களைத் தெரிவுசெய்திருக்கிறார். வெள்ளாளச் செட்டி சாதியினரான இவருக்கு தஞ்சையிலிருந்து பாலக்காட்டில் குடியேறிய பிராமணர்கள் உதவியிருக்கின்றனர்” என்கிறார். கடந்த ஆறு ஏழு தலைமுறைகளாக கேரளத்தில் கம்பனின் பாடல்களைப் பாடுவதற்கு கூனத்தறா குடும்பத்தினர் முக்கியக் காரணம். இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணன் குட்டிப் புலவர். மேலும் தம்பிப் புலவர், முத்தப்பப் புலவர், லட்சுமணப் புலவர் என்பவர்களுக்கும் இதில் பங்கு உண்டு.

அயோத்தி காண்டம்

டெல்லி சங்கீத நாடக அகாடமியின் உதவியால் கபிலவாத்சாயனர் தூண்டுதலால் ஆடல் பற்று மூலப் பனுவல் முழுவதும் ஓலையிலிருந்து தாளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதில் அயோத்தி காண்டம் மட்டும் மலையாள எழுத்து வடிவிலிருந்து தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. இது மொழிபெயர்ப்பல்ல. மூலப் பனுவலின் மொழி தமிழ்; எழுத்து வடிவம் மலையாளம்.
அயோத்தி காண்ட கையெழுத்துப் பிரதி 388 பக்கங்கள் கொண்டது. கம்பனின் 12 படலங்களும் இதில் உள்ளன. ஒன்றிரண்டு படலங்கள் பெயர் மாற்றம் உடையவை. கம்பன் மூலத்தில் உள்ள பள்ளிபடை படலம் என்பது பள்ளியடை படலம் என்றும், ஆறு செல் படலம் என்பது ஆற்றுப் படலம் என்றும், திருவடி சூட்டுப் படலம் என்பது கிளைகண்டு நீங்கு படலம் என்றும் உள்ளன. பிற படலங்கள் கம்பனைப் போலவே உள்ளன.

வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் கணக்குப்படி கம்பனின் அயோத்தி காண்டத்தில் 1,224 பாடல்கள் உள்ளன. ஆடல் பற்றில் 240 பாடல்கள். இவற்றில் 6 பாடல்கள் கம்பனில் இல்லாதவை. 26 பாடல்கள் பாடபேதம் உள்ளவை.

வேறுபட்ட விளக்கம்

ஆடல் பற்று அயோத்தி காண்டம் பாடல்களுக்கு விரிவாக விளக்கமும் ஒப்பீடுகளும் உள்ளன. உதாரணமாக, ‘ஆழி சூழ் உலகெலாம் பரதனே ஆள’ என்பதற்கு ‘ஆழியான சரயு நதியால் சூழப்பட்ட அயோத்தி ராஜ்யம்’ என உள்ளது. கம்பன் பாடல்களுக்குத் தமிழகத்தில் கொடுக்கப்படும் விளக்கங்களுக்கு மாறுபட்டும் உள்ளது. பெரும்பாலும் நாடக பாணியில் விளக்கம் உள்ளது. புராணம், தர்மம், பிரம்மாவின் மனதில் உதித்த ரிஷிகள், 56 தேசங்கள் என எல்லாவற்றுக்கும் நீண்ட பட்டியல் உள்ளது. சில பாடல்களுக்கு மிக விரிவாக விளக்கம் உள்ளது. ‘வெய்யவன் குல முதல்’ என்ற கம்பன் பாடலுக்கு 3 பக்க விளக்கம் உள்ளது. ஒரு பாடல் விளக்கம் மாதிரிக்கு; ‘மன்னவன் பணியன்றாகினும்...’ ‘ஆகா வாராய் தாயே. இந்தக் கற்பனையானது அந்தப் பிதாவின் கற்பிதமென்றிருந்தாலும் உம்முடைய கற்பனையேதான். உமக்கு வேண்டி பிதா சொன்னதாக இருந்தாலும் ராமனான நாள் உபேசிட்கப் போறவனில்லை’.

ஆடல் பற்றை முழுவதும் தமிழாக்கி அச்சில் கொண்டுவரலாம். கம்பனுக்குப் புது விளக்கம் கிடைக்கும்.

- அ.கா.பெருமாள், நாட்டாரியல் ஆய்வாளர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.comஅயோத்தி காண்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x