Published : 30 Nov 2019 11:53 am

Updated : 30 Nov 2019 11:53 am

 

Published : 30 Nov 2019 11:53 AM
Last Updated : 30 Nov 2019 11:53 AM

நூல் வெளி: புதுச்சேரி என்னும் விடுதலை நிலம்

the-land-of-liberation

ஷங்கர்ராமசுப்ரமணியன்

இந்திய, தமிழ் வாழ்க்கையில் பொது மனிதன் என்ற ஒருவன் இன்னும் உருவாகவில்லை; சாதி என்ற ஒன்றுதான் எல்லா இந்தியர்களையும் தமிழர்களையும் பிரிப்பதாகவும் இணைப்பதாகவும் உள்ளது. இந்தக் கருத்தோட்டப் புள்ளியில் நின்று, ஒரு தமிழ் பொது மனிதனை, அவனுக்கான விடுதலையைக் கனவு காணும் மூன்று நாவல்களின் (‘நல்லபாம்பு: நீல அணங்கின் கதை’, ‘அவன் பெயர் சொல்’, ‘ஐந்தவித்தான்’) தொகை ‘பொந்திஷேரி’.

பாண்டிச்சேரி என்ற பிரெஞ்சு-தமிழ் பண்பாட்டு, கலாச்சாரக் கலப்பு நிலத்தை மையமாகக் கொண்டு, அங்கிருந்து ஒரு தமிழ் மனிதன், சாதி ஏற்படுத்திய சுமையிலிருந்து உலகத்தைத் தழுவ வாய்ப்புள்ள தமிழ்ச் சாத்தியங்களின் மீது கவனம் குவிக்கும் மூன்று தனிப் படைப்புகள் இவை.


கலையும் தத்துவமும், மெய்யியலும் அரசியலும், புனைவும் அபுனைவும், வரலாறும் புராணங்களும் அருகே அமர்ந்து உரையாடும் எழுத்துகள் அவை. தமிழ் வாழ்க்கை, தமிழ் எதார்த்தம், தமிழ் அரசியல், தமிழ் மெய்யியலின் அடையாளங்கள் நவீன கதைகளில் அரிதாகவே தென்பட்ட ஒரு காலகட்டத்தில் செய்யப்பட்ட தலையீடு இது.

ஐரோப்பிய நவீனத்துவம் உருவாக்கிய கருத்தியல், பௌதீகச் சிறைகளை ஆராய்ந்த மிஷைல் பூக்கோவும் தமிழின் வள்ளுவரும் வள்ளலாரும் பிரபாகரனும் சிவமும் பாரதிதாசனும் இயல்பாகப் புழங்கும் உரையாடும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன.

தமிழகத்தின் சமகால அரசியலையும் அரசியல் தலைவர்களையும் ஞாபகப்படுத்தும் சோழர் காலத்தில் தொடங்கும் வரலாற்று நாவல் ‘நல்லபாம்பு: நீல அணங்கின் கதை’. தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்னர் அந்த இடத்தில் பாம்பாகப் புற்றில் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு அரசி, தன் மனைவியைக் கடித்த அந்தப் பாம்பை ஆயிரம் ஆண்டுகளாக விரட்டிக்கொண்டிருக்கும் கிழவர் செம்புலி இருவரும்தான் இந்தக் கதையை நிகழ்த்துபவர்கள்.

பாம்பைக் கிட்டத்தட்ட தமிழ் அடையாளமாக்கி, பேரரசுக்கான வேட்கையும் ஆதிக்கமும் நிலவும் சோழனின் அகங்காரமாக்கி, காமம், அதிகாரத்தின் வேறு வேறு பாவனைகளில் நாவலில் பாம்பு உலவிக்கொண்டேயிருக்கிறது. பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருக்கும் தஞ்சைத் தரணியும் பாண்டிச்சேரியின் சென்ற நூற்றாண்டு வாழ்க்கையும் சுவாரஸ்யத்துடன் துலக்கம்கொள்கிறது.

தஞ்சை பெரிய கோயிலுக்குக் கண்ணாடி பிம்பமாக இரும்பை சிவன் கோயில், ராஜ ராஜ சோழனுக்கு கிழவர் செம்புலி, மணிக்கு கருநாகன் என சரித்திரத்தில் ரெட்டை ரெட்டைகளாகக் கதாபாத்திரங்கள் திரும்பத் திரும்பத் தோன்றிக்கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நல்லதங்கமும் அம்பிகாவும் சோழப் பேரரசு தோன்றுவதற்கு முன்பு இறந்துபோன அரசி, தோழியின் பிம்பங்கள்தான்.

‘பொந்திஷேரி’ மூவியல் படைப்புகளில் முழுமையான படைப்பென்றும், படைப்பின் கனவு நிறைவேறியதாகவும் ‘ஐந்தவித்தான்’ உள்ளது. ஆணாகப் பிறந்து எத்தனையோ துயரங்களுக்குள்ளாகி மனவாதையின் உச்சத்தில் பெண்ணாக உணரும் மாதவன் முந்தைய ‘நல்லபாம்பு’ நாவல் வரும் செம்புலியைப் போலவே மரணமில்லாதவன்.

நாவலின் முதல் பகுதி அதிகம் அறியப்படாத ஒரு பிராந்தியத்தினுள் எதார்த்தம் கால்பாவ வன்மையுடன் பிரவேசிக்கிறது. மாதவனும் அவனது காதலியான மரணமற்ற தேவகிக்குமான உரையாடலில் நாவலின் இரண்டாம் பகுதி மையம்கொள்கிறது. உலகளாவிய வரலாறு, தமிழ் வரலாறு, பண்பாட்டு வரலாறு, உணவின் வரலாறு வரை கதைகளாகப் பேசப்படுகின்றன.

தமிழில் மட்டுமே சொல் என்பது பெயராகவும், சொல் என்பது வினையாகவும், சொல் என்பது உணர்வாகவும் உள்ளது. வினையின் சுமைகொண்ட பெயராகவும் சொல் ஆகிறது. ‘அவன் பெயர் சொல்’ நாவலின் மையம் இதுதான். கவித்துவம், சுதந்திரத்துடன் எழுதப்பட்ட படைப்பு இது. 2009-ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை ஞாபகப்படுத்துவதோடு அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்த கண்ணகியிலிருந்தும் தமிழ் தேசியத்தின் முதல் பாவலனென்று இளங்கோவடிகளையும் ஞாபகம்கொண்டு தொடங்குகிறது.

தான் இறந்து 6,500 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறும் கதைசொல்லி ரஹ்மானுக்கும், அவன் மகள் சூன்யதாவுக்கும் நடைபெறும் உரையாடல்தான் கதை. இந்துவாகப் பிறந்த ராமசாமி, ரஹ்மானாக மாறி தன் மேல் மதத்தின் சுமையைத் துறந்த கதைசொல்லி ஒரு ஒட்டகத்தை வளர்க்கிறான். ஒட்டகம் இடும் குட்டிகள் இரண்டின் பெயர் பாரதி, பாரதிதாசன். பாய் வியாபாரியும் புதுச்சேரி சாராயக் கடைகள் பற்றிய ஆவணப்படத்தை எடுப்பவனாகவும் கவிஞனாகவும் பல அடையாளங்களைக் கொண்டவன். ‘மழை’ என்பது அவனது காதலியின் பெயர்.

சாதாரண மனிதர்களை மட்டுமல்ல; புராணங்களிலிருந்தும் பெருஞ்சமயத்தின் தங்க விமானங்களிலிருந்தும் சிவனும் பிள்ளையாரும் மதுரை மீனாட்சியும் தரையிறக்கம் காண்கின்றனர். கண்ணகியைக் கண்ணனாக்குவதன் மூலமாக விடுவித்துவிடுகிறார் நாவலாசிரியர். சில வேளைகளில் அலுப்படைய வைக்கும் அளவுக்குக் கவித்துவம் அதீதமாகத் திகட்டுவதாக உள்ளது.

அறிவுகள், தத்துவங்கள், தொழில்நுட்பங்கள் குவிந்து கடைச்சரக்காகப் பரப்பப்பட்டுவிட்ட சந்தைதான் நமது காலம். அதன் இடைவெளிகளில், மூலைகளில் தான் பெருக்கும் கதைகளைத்தான் விடுதலையென்று பரிந்துரைக்கிறாரா ரமேஷ் பிரேதன்?

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in


நூல் வெளிபுதுச்சேரிவிடுதலை நிலம்தமிழகம்நல்லபாம்புசமகால அரசியல்தஞ்சை பெரிய கோயில்கலையும் தத்துவமும்மெய்யியலும் அரசியலும்புனைவும் அபுனைவும்வரலாறும் புராணங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x