Published : 30 Nov 2019 11:26 am

Updated : 30 Nov 2019 11:27 am

 

Published : 30 Nov 2019 11:26 AM
Last Updated : 30 Nov 2019 11:27 AM

360: திண்டுக்கல்லில் புத்தகக்காட்சி

bookfare

திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளி மைதானத்தில் நவம்பர் 28 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி டிசம்பர் 8 வரை நடக்கிறது. ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் அரங்கு எண் 90-ல் நம் வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம். நமது புதிய வெளியீடுகளான அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, காந்தியை அறிந்துகொள்ள உதவும் தொடக்க நூலான ஆசையின் ‘என்றும் காந்தி’ உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. புத்தகக்காட்சியில் எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.

நெகிழ வைத்த வள்ளியப்பா விருது விழா


குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கும் இந்த ஆண்டுக்கான வள்ளியப்பா இலக்கிய விருது எழுத்தாள டாக்டர் கு.கணேசனுக்கு வழங்கப்பட்டது. விருது விழா குழந்தைகள் திருவிழாவாக நடந்தது. குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் இருந்தாலும் ஹைலைட்டான விஷயமே 12 சிறுவர் நூல்களை வெளியிட்டதுதான்.

மூத்த ஆளுமைகளான சிற்பி பாலசுப்பிரமணியம், தேவி நாச்சியப்பன், அய்க்கண், பி.வெங்கடராமன், கவிஞர் பாலநடராஜன், ‘விஜயா’ மு.வேலாயுதம் உள்ளிட்டவர்கள் வெளியிட 12 குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள்.

கவிதைகளின் வழியே கலாச்சாரப் பரிமாற்றம்

ஆத்மாநாம் நினைவாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் ‘ஆத்மாநாம்’ விருதுகள் பிரத்யேகமாகக் கவிஞர்களுக்கானவை. ஆத்மாநாம் விருதுகளில் இரண்டு அம்சங்கள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று, விருது விழாவின் ஒரு பகுதியாக விருதுபெறும் கவிஞர்களின் படைப்புகள் தொடர்பான திறனாய்வுக் கட்டுரைகளைப் புத்தகமாக்குவது.

இரண்டாவது, பிற மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் கவிஞர்களை அழைத்துவந்து, அவர்களோடு ஒரு உரையாடலைச் சாத்தியமாக்குவது. விருது விழாவில் கலந்துகொள்ளும் கவிஞர்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான விருது விழாவில், பத்ம விருதுபெற்ற கவிஞரும் நாடக ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் குஜராத் சாகித்ய பரிஷித்தின் தலைவருமான சித்தன்சு யஷ்ஷஸ்சந்திரா கலந்துகொண்டார். விழாவுக்குப் பின்பாக சித்தன்சுவுடன் நடைபெற்ற உரையாடல் இரண்டு மொழிகளுக்குமான கலாச்சாரப் பரிமாற்றமாக இருந்தது என்கிறார்கள் நம்மூர் கவிஞர்கள்.

அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம் விருது

மலையாளக் கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு இந்த ஆண்டுக்கான ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதம், இசை, ஜோதிடம், ஓவியம் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த அக்கிதம் நம்பூதிரியின் ‘இருபதாம் நூட்டாண்டின்டே இதிஹாசம்’ எனும் காவியம் மலையாள இலக்கியத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. குழந்தைகளுக்கான கவிதைகள், பாடல் தொகுப்புகள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு தளங்களிலும் பங்களித்திருக்கிறார்.

பபாசியின் புதிய குழு

2020-21க்கான தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. பபாசியின் தலைவராக ‘செண்பகா’ பதிப்பகம் சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக நாகராஜன் (தமிழ்), ஒளிவண்ணன் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சென்னைப் புத்தகக்காட்சிக்கான ஆயத்தங்கள் தொடங்கியிருக்கும் வேளையில், இந்தப் புதிய அணி புத்துணர்ச்சியோடு செயல்படட்டும். புதிய குழுவுக்கு வாழ்த்துகள்!திண்டுக்கல்புத்தகக்காட்சிவள்ளியப்பா விருது விழாகவிதைகள்கலாச்சாரப் பரிமாற்றம்ஞானபீடம் விருதுபபாசியின் புதிய குழு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x