Published : 24 Nov 2019 08:48 am

Updated : 24 Nov 2019 08:48 am

 

Published : 24 Nov 2019 08:48 AM
Last Updated : 24 Nov 2019 08:48 AM

வெண்ணிற நினைவுகள்: நினைவில் ஒளிரும் பூக்கள்

uthiri-pookkam

எஸ்.ராமகிருஷ்ணன்

இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம் புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ கதையை மையமாகக் கொண்டது. புதுமைப்பித்தனின் எத்தனையோ புகழ்பெற்ற கதைகள் இருக்கையில் எப்படி ‘சிற்றன்னை’யைப் படமாக்க வேண்டும் என்று மகேந்திரன் தீர்மானித்தார் என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது. ஒருமுறை மகேந்திரனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இதைப் பற்றிக் கேட்டேன். “நான் தீவிர இலக்கிய வாசகன். புதுமைப்பித்தன் எழுதியது அத்தனையும் வாசித்திருக்கிறேன். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்” எனச் சிரித்தபடியே சொன்னார். ‘சிற்றன்னை’ கதையை வாசித்துப் பார்த்தால், அதிலிருந்து திரைப்படம் எவ்வளவு மாறுபட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். புதுமைப்பித்தனின் கதை மகேந்திரனுக்கு ஒரு விதைபோலவே பயன்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய கௌரவமாகவே இப்படத்தைக் கருகிறேன்.


இலக்கிய வாசிப்பு ஒரு திரைப்பட இயக்குநருக்கு எவ்வளவு உறுதுணை செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இயக்குநர் மகேந்திரன். அவரே சிறந்த நாடக ஆசிரியராக, கதை வசனகர்த்தாவாக இருந்தபோதும் ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’, ‘நண்டு’, ‘பூட்டாத பூட்டுகள்’, ‘சாசனம்’ என அவரது முக்கியப் படங்கள் வேறு எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வுசெய்தே படமாக்கியிருக்கிறார். ‘உதிரிப்பூக்கள்’ டைட்டில் காட்சியில் மஞ்சள் வெயிலில் தோளில் மகளை அணைத்தபடியே நிற்கும் அஸ்வினியும், அருகில் அப்பாவின் உடை போன்ற பெரிய ஜிப்பா அணிந்து நிற்கும் சிறுவனும் ஒரு காட்சிப் படிமம்போலவே மனதில் பதிந்துபோகிறார்கள்.

மரணப் படுக்கையில் இருக்கும் லட்சுமியின் வளையல்களைப் பிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் அவளது மகள். லட்சுமியின் தந்தை குழந்தைகளின் கையில் பால் டம்ளரைக் கொடுத்து கடைசி வாய் பால் ஊற்றச் சொல்கிறார். தன் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் எனப் புரியாத கவலையோடு லட்சுமி கண்கலங்கிப் பார்க்கிறார். லட்சுமியின் வாயிலிருந்து பால் வழிகிறது. மூக்குத்தி அணிந்த அஸ்வினியின் சோக முகம், செண்பகத்தின் அழுகுரல், தந்தையின் கையறு நிலை என அந்தக் காட்சியை எப்போது பார்த்தாலும் கண்ணீர் வரவே செய்கிறது.

‘உதிரிப்பூக்கள்’ படத்தின் இறுதிக்காட்சிக்கு நிகராகத் தமிழ் சினிமாவில் இதுவரை அப்படியொரு இறுதிக்காட்சி உருவாக்கப்படவில்லை. ‘உதிரிப்பூக்கள்’ விஜயன் மற்ற திரைப்படங்களில் வரும் வில்லன்போல தீமையின் உருவமில்லை. அவர் ஒரு சராசரி மனிதன். அதிகாரமும் கோபமும், இயலாமையும் பலவீனமும் ஒன்றுசேர்ந்த மனிதன். அவரது அதிகாரத்தின் குவிமையம் அவரது வீடு. இறுதிக்காட்சியில் விஜயன் தன்னைத் தண்டிக்கும் ஊர் மக்களைப் பார்த்து “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இன்னைக்கு உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகள்லேயே பெரிய தவறு அதுதான்” என்று சொல்கிறார். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வசனம் இது.

விஜயன் ஆற்றை நோக்கி நடந்து செல்லும் காட்சி வெகு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. குழந்தைகள் ஒருபக்கம் ஓடிவருகிறார்கள். வெறிச்சோடிய வீதிகள். சட்டை அணியாத விஜயனை அழைத்துக்கொண்டு ஊர் ஒருபக்கம் நடக்கிறது. பின்னணி இசை உயர்ந்து ஒலிக்கிறது. ஆற்றங்கரைக்கு வந்தவுடன் இசை அடங்குகிறது. ஆற்றின் ஓசை மட்டுமே கேட்கிறது. வெறித்த முகங்கள். ஆற்றின் நீர்சுழிப்பு. ‘நீ வாழத் தகுதியற்றவன், ஆகவே உன் சாவை நீயே தேடிக்கொள்’ எனத் தண்டனை தரும் நாவிதரின் குரல். ஓடிவரும் பிள்ளைகளை அணைத்து முத்தமிட்டு, ‘நல்லா படிங்க. நல்லவங்களா வளரணும்’ எனச் சொல்லும் விஜயனின் பாசம். அழகிய கண்ணே பாடலின் பின்புல இசை. ஆற்றை நோக்கி அவர் செல்லும்போது திமிறி தடுக்கச்செல்லும் ஆட்கள். ஆற்றில் விஜயன் இறங்கிய பிறகு ஆற்றையும் வானத்தையும் மலையையும் சுற்றிவரும் கேமரா நடந்தவற்றுக்கு இயற்கை சாட்சியாகவுள்ளது என்பதுபோலவே காட்டுகிறது. இளையராஜாவின் மாய இசை நம்மை ஆற்றுப்படுத்துகிறது. பிள்ளைகள் இருவரும் ஆற்றின் வழியாகவே நடக்கிறார்கள்.

மிடாஸ் என்ற மன்னன் எதைத் தொட்டாலும் பொன்னாகிவிடும் என்பார்கள். அது இசைஞானி இளையராஜாவுக்குத்தான் பொருத்தமானது. இப்படத்தில் இளையராஜாவின் இசை கலையின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ‘அழகிய கண்ணே...’ பாடலை எப்போது கேட்டாலும் சோகமான அந்தத் தாயின் முகம் மனதைக் கனக்க வைக்கிறது. எத்தனை அழகான பாடல். அசோக்குமார் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். எடிட்டர் லெனின் சிறப்பான படத்தொகுப்புச் செய்துள்ளார். கண்ணதாசனின் சிறந்த பாடலை எஸ்.ஜானகி இனிமையாகப் பாடியிருக்கிறார்.

படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றோடு செல்லும் அந்தக் குழந்தைகள் என்னவாகியிருப்பார்கள் என்ற கேள்வி மனதில் எழவே செய்கிறது. அதே ஊரில் வளர்ந்திருப்பார்களா அல்லது ஊர் மாறிப் போயிருப்பார்களா? வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு தந்தையைப் புரிந்துகொண்டிருப்பார்களா? தந்தை இறந்துபோன அந்த ஆற்றைத் தேடிவந்து காண்பார்களா? உலகுக்குத்தானே அது ஆறு, அவர்களுக்கு அது தந்தையின் மரண சாட்சியம் இல்லையா?

படத்தில் நாவிதராக நடித்துள்ள சாமிக்கண்ணு சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரது கேலிப்பேச்சும், லட்சுமி மற்றும் குழந்தைகள் மீது காட்டும் அக்கறையும் உண்மையாக வெளிப்பட்டுள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ என்று படத்துக்குப் பெயர் வைத்தவர் இளையராஜா. அஸ்வினியைப் போல எத்தனை எத்தனையோ பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்கிப்போய்த் தனது சுகத்தை மறந்து, சந்தோஷத்தை மறந்து குடும்பமே பெரிதென வாழ்ந்து நோயுற்று இறந்துபோயிருக்கிறார்கள்.

தமிழ்ப் பெண்களின் துயர வாழ்க்கையை ‘உதிரிப்பூக்க’ளைப் போல யாரும் அழுத்தமாகக் காட்டியதில்லை. அஸ்வினி பழைய யுகத்துப் பெண் என்றால், மாறிவரும் புது யுகத்துப் பெண் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ சுகாசினி. திரையில் பெண்களைக் கௌரவமாகக் காட்சிப்படுத்திய மகேந்திரன் என்றும் நம் போற்றுதலுக்குரியவர். அவரிடம் இன்றைய தமிழ் சினிமா கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.comவெண்ணிற நினைவுகள்​​​​​​​எஸ்.ராமகிருஷ்ணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x