Published : 24 Nov 2019 08:42 AM
Last Updated : 24 Nov 2019 08:42 AM

இது பொன்னீலனின் மறுபக்கம்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் எண்பதாம் அகவை விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடந்தது. நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவில் பொன்னீலனின் வீட்டு முற்றத்தில் கலந்துரையாடும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், பாரதிமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள அந்த மாலைப் பொழுதில் சுவாரசியமும் சேர்ந்துகொண்டது.

நல்லகண்ணுவைச் சந்தித்த முதல் அனுபவம் பற்றி சொல்லத் தொடங்கினார் பொன்னீலன். “1967-ன்னு நினைக்கேன். எட்டயபுரம் பாரதி விழாலதான் தோழரை முதல்ல சந்திச்சேன். பாலன் இல்லத்துல நானும் அவரும் சேர்ந்தே தங்கியிருந்தோம். ஜோல்னா பையில பிரெட் வச்சுருப்பேன். அதுல கொஞ்சம் வெங்காயம், கேரட் எல்லாம் வெட்டிவெச்சு சேர்த்துச் சாப்பிடுவேன். தோழரும் அதை ரசிச்சுச் சாப்பிடுவாங்க. நான் அங்கயிருந்து நாகர்கோவிலுக்கு வரும்போது தோழர்தான் பஸ் ஏத்திவிடுவாங்க. நான் ஊருக்கு வந்துசேர்ந்ததுமே பின்னாலேயே தபால் வரும். இப்படியெல்லாம் எனக்குத் தந்தையாவும் அண்ணணாவும் தோழர் இருந்துருக்காங்க” என்று பொன்னீலனைத் தொடர்ந்தார் நல்லகண்ணு. “பாரதி விழாவுல பேன்ட் போட்டு கவிதை வாசிச்சுட்டு இருந்தாரு பொன்னீலன். ஃபாரின் டிரெஸ் மாதிரி இருக்கு, நம்ம இயக்கத்துல இருக்காரேன்னு ஆச்சரியப்பட்டேன். அன்னிக்கு கரிசல் மண்ணுல அப்படி கவிதை வாசிச்சவங்கள பாத்ததே இல்ல. அதுலருந்தே இப்படியெல்லாம் ஒரு ஆளு நம்ம இயக்கத்துக்கு வரும்போது விட்டுறக் கூடாதுன்னு நெருங்கிட்டேன்” என நல்லகண்ணு சொல்ல அந்த இருளும்கூடக் கூட்டத்தின் முத்துப்பல் சிரிப்பால் வெளிச்சமானது. பொன்னீலனின் ‘மறுபக்கம்’ கடும் விமர்சனத்துக்கு உள்ளான நாவல்களில் ஒன்று. “மண்டைக்காடு கலவரம் வந்ததுமே நாம் பார்க்கும் சமூகம் இப்படி இல்லையே. இதற்கு மறுபக்கம் இருக்கிறதே எனத் தோன்றியது. பாதிரியார்கள் என்னை அழைத்துப் பல கேள்விகளைக் கேட்டார்கள். மூன்று மணி நேரம் பேசினோம். அத்தனையும் நாவலில் சேர்த்திருக்கிறேன்” என்றார் பொன்னீலன். “உங்களின் மறுபக்கத்தைப் பார்த்துவிட்டுத்தான் எனக்கு உங்கள் மீது பேரன்பும் மதிப்பும் உண்டானது” என்றார் ஜோ.டி.குரூஸ். பாரதிமணியோ பொன்னீலன் என் எதிர்பாலினமாக இருந்திருந்தால் காதலித்துக் கைப்பிடித்திருப்பேன் எனத் தனக்கும் பொன்னீலனுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்தார்.

“அண்ணாச்சி, உங்க நாவல் ஒண்ணு படமாச்சுல்லா?” என்று ஒருவர் கேட்க, “ஆமா, என்னோட ‘உறவுகள்’ கதையை ‘பூட்டாத பூட்டுகள்’ன்னு மகேந்திரன் எடுத்தார். பாதிப் படம் முடிஞ்சப்பவே, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்துக்கும் அவருக்கும் சண்டைவந்து பாதியில் போட்டுட்டுப் போயிட்டாரு. பஞ்சு அருணாச்சலம்தான் மிச்சத்தை முடிச்சாரு. அப்பவே அவரு மீதியை முடிச்சுத்தாங்கன்னு என்னைக் கூப்பிட்டாரு. போயிருந்தா நானும் இன்னிக்கு இயக்குநர் ஆகியிருப்பேன்” என்றார்.
இந்நிகழ்வை இளம் எழுத்தாளர் ராம்தங்கம் ஒருங்கிணைத்திருந்தார். மறுநாள் நடந்த ‘பொன்னீலன் 80’ விழாவில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பவா செல்லதுரை, குளச்சல் யூசுப் உள்ளிட்ட தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டனர்.

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x