Published : 24 Nov 2019 08:41 am

Updated : 24 Nov 2019 08:42 am

 

Published : 24 Nov 2019 08:41 AM
Last Updated : 24 Nov 2019 08:42 AM

புத்தர் சிலையும் பெர்ஃப்யூம் புட்டியும்

singapore-writer-festival

இசை

சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் அழைப்பை ஏற்று ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’வில் கலந்துகொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இந்த விழாவில் இம்முறை தமிழ் மொழியின் சார்பாக நானும், மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியும் கலந்துகொண்டோம். விழாவுக்கான அழைப்பு வந்ததும்தான் உறைத்தது, என்னிடம் பாஸ்போர்ட் ஏதும் இல்லை என்பது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தாண்டி நமக்கு வேறெங்கே சோலி வந்துவிடப்போகிறது என்கிற நினைப்பில், பாஸ்போர்ட் குறித்தெல்லாம் யோசித்திருக்கவில்லை. சேலம், மதுரை, அதிகபட்சம் சென்னையைத் தாண்டி இலக்கிய சேவையாற்றத் தேவையிருக்காது என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்.


முதல் விமானப் பயணம் அதற்குரிய தடுமாற்றங்களுடனும் குதூகலத்துடனும் இருந்தது. விமானம் தரையிறங்கும்போது சிங்கப்பூரின் ‘ஒளிவெள்ளத் திருக்கோலம்’ காண்பது அலாதியானது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. ஜன்னல் சீட்டுக்கு முண்டியடிக்காமல் விட்டது வருத்தம்தான். ஆனால், தரையிறங்குகையில் கொஞ்சம் எட்டிப்பார்க்க முடிந்தது. கனவுமயமாகத்தான் இருந்தது.

தமிழ்க் கவிதையில் பகடி

முதல் அமர்வாக ‘தமிழ்க் கவிதையில் பகடி’ குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. ஊசியின் மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்துவதுபோல கவிதையைப் புகுத்திவிட முடியாது என்பதுதான் எனது எண்ணமும். ஆனால், கவிதையில் அறிவு சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகள் என்றும் சில உண்டு. அவற்றைப் பயிற்றுவிக்க முடியும் என்றே நம்புகிறேன். ‘பகடி தீவிரத்தைக் குறைத்துவிடாதா?’ என்கிற அந்த வழக்கமான கேள்வி இந்த அமர்விலும் கேட்கப்பட்டது. இம்முறையும் உறுதியாக மறுத்தேன்.
மாலை அமர்வு வெவ்வேறு தேசத்து தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்ததாக இருந்தது. தமிழக, ஈழத்து இலக்கியங்களோடு ஒப்புநோக்குகையில் சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் போதுமான தீவீரத்துடன் இல்லைதான். எனவே, இந்த அமர்வில் அதிகம் கவனம்கொள்ள வேண்டியது சிங்கப்பூர், மலேசிய இலக்கியம் குறித்துதான் என்று எண்ணினேன். எனவே, என் உரையை ஈழத்துக் கவிதைப் போக்குகள் குறித்த சிற்றுரையாக நிறுத்திக்கொண்டேன். சீ.முத்துசாமி மலேசிய இலக்கியம் குறித்தும், சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் விரிவாகப் பேசினர்.

மறுநாள் காலையில் எனது படைப்பு வெளி குறித்த அமர்வு. எல்லா அமர்வுக்கும் கிட்டத்தட்ட அதே பார்வையாளர்கள்தான். எல்லா ஊரிலும் அப்படித்தானே? சமீபகாலமாக, ‘ராபிட் ஃபயர்’ என்கிற புது வியாதி புறப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் இரண்டு ‘ராபிட் ஃபயர்’களில் கலந்துகொண்டேன். இரண்டிலும் சொதப் பினேன். ஒரு நொடிப்பொழுதில் பதில்களைத் தீயாய் ஊதிவிடும்படிக்கு நான் இன்னும் தயாராகவில்லை.

அற்ப ஆறுதல்

சிங்கப்பூருக்குள் நுழையும் சோதனைச் சாவடியில், “எதற்காக சிங்கப்பூர் வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் அந்த அதிகாரி. “சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துகொள்வதற்காக” என்றேன். என் கண்களை ஊடுருவிப் பார்த்து, “நீங்கள் எழுத்தாளரா?” என்று கேட்டார். அந்த அதிகாரியைப் போன்றே டாக்ஸிக்காரர்களும் என்னை நம்பவில்லை. நான் தங்கியிருந்த விடுதிக்குப் போகச் சொன்னால், “உறுதியாகவா? அங்குதானா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்கள். ‘தி ஃபுல்லெர்ட்டன்’ (The Fullerton) என்கிற அந்த ஹோட்டல், சிங்கப்பூர் ஆற்றங்கரையில் அமைந்திருக்கிற, பாரம்பரியமிக்க, கனவான்கள் வந்துபோகும் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதி என்பதை நண்பன் சரவணன் மூலம் தெரிந்துகொண்டேன். டாக்ஸிக்காரர்களை கோபித்துக்கொள்ள ஒரு நியாயமுமில்லை. ஆனால், கூடவே திரிந்த சரவணன் ஒரு விஞ்ஞானி. அவன்கூட அவர்களுக்கு ஒரு விஞ்ஞானியாகத் தோன்றவில்லை என்பதில் எனக்கு ஒரு அற்ப ஆறுதல்.

மதியம் ‘கவிமாலை’ அமைப்பின் சார்பாக ‘விதைகள்’ என்ற மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு ‘கவிதையின் வினோதங்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றினேன். மாணவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலவையாக அமர்ந்திருந்த அந்த அரங்கை எதிர்கொள்வது கொஞ்சம் சிக்கலாக இருந்தது. முடிந்த வரை மாணவர்களுக்காகவே பேச வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். நான் எதிர்பார்த்ததுபோலவே முகுந்த் நாகராஜனால் மாணவர்களைக் கொஞ்சம் அசைக்க முடிந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டிலும் முகுந்த் நாகராஜனின் கவிதை நூல்கள் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.

அடுத்தடுத்து அமர்வுகள் இருந்ததால், ‘புதுமையிலே மயங்குகிறேன்’ என்று பாடல் பெற்ற சிங்கப்பூரை ஒழுங்காகச் சுற்றிக்கூடப் பார்க்கவில்லை. சிங்கப்பூரில் இறங்கிய அன்று அமர்வுகள் ஏதுமில்லை என்பதால், அன்று புத்தர் கோயிலுக்குச் செல்ல வாய்த்தது. கலைநுட்பம் கூடிய விதவிதமான புத்தர் சிலைகள். புத்தப் பிக்குகளின் அசலான மெழுகுச் சிலைகள். புத்தரின் பல் ஒன்று இங்குதான் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். உருப்பெருக்கி வைத்து, அந்தப் பல்லைப் பெரிதாக்கிக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். புத்தனிடம் காண வேண்டியது அவன் பல் அல்ல என்பதால் எனக்குப் பெரிதாகச் சிலிர்ப்பு ஒன்றும் தோன்றவில்லை.

முழு மகிழ்ச்சி என்றால் என்ன?

‘சொல் புதிது’ நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்ததுதான் இறுதி அமர்வு. என் அந்தரங்க வாசகர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அமர்வென்று இதைச் சொல்லாம். ஒரு கல்லூரி விடுதியின் கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்ததுபோல் இருந்தது அரங்கு. இவர்கள்தான் தேவதேவனின் சமீபத்திய சிங்கப்பூர் வருகையின்போது கைகட்டி, வாய் பொத்தி கவிதா உபதேசம் கேட்டவர்கள். ஆனால், என்னைக் கண்ட மாத்திரத்தில் எல்லோரிடமும் குறும்பு பூத்துவிட்டது. தேவதேவனும் இசையும் எதிரெதிரானவர்கள் அல்ல என்பதும், இருவரின் உலகங்களும் சந்திக்கும் புள்ளிகள் உண்டு என்பதும் அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. அந்தப் புரிதலிலிருந்துதான் சகல கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினார்கள்.

எனக்கு ஒரு வியாதி உண்டு. மகிழ்ச்சியைக் காணும்போதே அதற்கு அப்பால் தெரியும் துயரத்தையும் சேர்த்தே காண்பேன். அதனால், முழு மகிழ்ச்சி என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்த நான்கு நாட்களும் என் நண்பர்களையும் வாசகர்களையும் என்னால் இயன்றவரை மகிழ்ச்சியில் வைத்திருந்தேன் என்றே நம்புகிறேன்.

சிங்கப்பூரிலிருந்து தியானத்தில் இருக்கும் புத்தர் சிலை ஒன்றையும், உயர்தர பெர்ஃப்யூம் புட்டி ஒன்றையும் வாங்கிவந்தேன். இரண்டுக்கும் ஜோடி சேராதுதான். ஆனாலும் பாருங்கள், வாழ்க்கை அப்படி இருக்கிறது. குட்டை ட்ரவுசரும், நீள சிகரெட்டுமாகத் தான் நின்ற நிலத்தை வேறொரு உலகமாக்கிப் புகைத்துக்கொண்டிருந்த அந்த சீன யுவதியைத் தாயகம் திரும்பியதற்குப் பிறகான நாட்களில் நீலிக்கோணம்பாளையத்துத் தெருக்களில் தேடிக்கொண்டிருந்தேன்.

- இசை, ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: isaikarukkal@gmail.comதமிழ்க் கவிதையில் பகடிசிங்கப்பூர் எழுத்தாளர் விழா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x