

விளக்கு விருதுகள்
அமெரிக்கத் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் 23-வது (2018) ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் எழுத்தாளர்கள் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலகவதி, பேரா. சு.சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு, விருதாளர்களைத் தேர்வுசெய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ.1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள், சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். 50 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டாரியல் ஆய்வுப் புலத்தில் செயல்பட்டுவரும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் 40-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணன் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் உள்ளிட்ட வகைமைகளில் 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். விருதாளர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!
வல்லிக்கண்ணனுக்கு நூற்றாண்டு!
வல்லிக்கண்ணன் நூற்றாண்டு நவம்பர் 12-ம் தேதியிலிருந்து தொடங்கியிருக்கிறது. 1920-ல் பிறந்த வல்லிக்கண்ணன் கதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், கடிதம் எனப் பன்முகத்தோடு இயங்கியவர். இவர் எழுதிய ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூல் 1978-ல் அவருக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்திருக்கிறது. எழுத்தாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வல்லிக்கண்ணனின் நூற்றாண்டைத் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடவிருக்கிறது. வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், வல்லிக்கண்ணன் குறித்த கட்டுரைத் தொகுப்பு, ஆவணப்படம் தயாரித்தல், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கருத்தரங்குகள் நடத்துவது, கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் கட்டுரைப் போட்டிகள் என்று 2020 நவம்பர் முடிய நூற்றாண்டைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளர்களைக் கொண்டாடும் இது போன்ற ஆரோக்கியமான போக்கு தொடரட்டும்!
ஈழப் போர் – ஒரு கிராஃபிக் நாவல்
பெஞ்சமின் டிக்ஸ், ஐநா சபை சார்பாக 2004-ல் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக இலங்கைக்குச் சென்றார். 2008-ல் யுத்தம் தீவிரம் அடையும்போது கிளிநொச்சியிலிருந்து வெளியேறினார். தமிழ் மக்களிடம் அவர் எடுத்த நேர்காணல்கள், நேரடியான கள அனுபவங்களின் அடிப்படையில் ‘வன்னி: எ ஃபேமிலி’ஸ் ஸ்ட்ரகிள் த்ரூ தி ஸ்ரீலங்கன் கான்ஃப்ளிக்ட்’ என்ற கிராஃபிக் நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலின் சித்திரங்களை வரைந்தவர் வரைகலைஞர் லிண்ட்ஸே பொல்லாக். பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இலங்கையில் செம்பியன்பட்டு என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தினூடாக இந்த கிராஃபிக் நாவலானது ஈழப் போரின் வலிகளைப் பதிவுசெய்கிறது.
ஆம்பூரில் புத்தகக்காட்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் சேர்ந்து நடத்தும் புத்தகத் திருவிழா ஆம்பூரில் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் 17 அன்று ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள சரோஜா பிரகாசம் மஹாலில் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா, வரும் 27-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கும் இடம்பெற்றிருக்கிறது. அண்ணாவைப் பற்றிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’, காந்தியைப் பற்றி ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’, மருதன் எழுதிய ‘பாரதியின் பூனைகள்’ உள்ளிட்ட நூல்கள் இங்கே கிடைக்கின்றன.