Published : 17 Nov 2019 02:01 PM
Last Updated : 17 Nov 2019 02:01 PM

வெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி

ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு திரையரங்கு பழைய படங்களுக்கானது. அதில் எப்போதும் பழைய திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இன்றைக்கு மல்டிபிளக்ஸ் அரங்குகள் வந்த பிறகு, பழைய திரைப்படங்களை வெளியிடுவதும் காண்பதும் அரிதாகிவிட்டது. தொலைக்காட்சியிலோ இணையத்திலோ பார்ப்பது மட்டுமே வழி. தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ‘ராஜ ராஜ சோழ’னைச் சின்னத்திரையில் காணுவது குரூப் போட்டோவை ஸ்டாம்ப் சைஸில் பார்ப்பது போன்ற அவலம்.

‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் 1961-ல் வெளியானது. இப்படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கித் தயாரித்திருந்தார். படத்தின் இசை ஜி.ராமநாதன். கதையை ம.பொ.சிவஞானமும், திரைக்கதையை கிருஷ்ணசாமியும், வசனத்தை எஸ்.டி.சுந்தரமும் எழுதியிருந்தனர். இப்படம்தான் தமிழின் முதல் வரிவிலக்கு பெற்ற படம். ‘கப்பலோட்டிய தமிழன்’ வெளியானபோது, வசூலில் வெற்றி பெறவில்லை. ஆகவே, 1967-ல் மறுவெளியீட்டின்போது படத்துக்கு அரசு வரிச்சலுகை அறிவித்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை அறிந்துகொள்வதற்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் ஒரு ஆவணம். இளம் தலைமுறை அறிந்துகொள்ளும்படி, அப்படத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி - கல்லூரிகளில் திரையிட வேண்டும்.

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் என்னைப் பெரிதும் வசீகரித்தது சிவாஜியின் நடிப்பு. தனது நிகரற்ற நடிப்பால் சிதம்பரம் பிள்ளையாகவே உருமாறியிருப்பார். அதுபோலவே மகாகவி பாரதி பற்றிய காட்சிகளும் மிகவும் பிடித்திருந்தன.

அதுவரை ரேடியோவில், கிராமபோன் ரிக்கார்டில் பாரதியின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். வீட்டில் பாரதியின் ஓவியத்தைக் கண்டிருக்கிறேன். ஆனால், கனலும் கண்கள், துடிப்பான பேச்சு, முண்டாசு கட்டிய கம்பீரத் தோற்றம் கொண்ட பாரதியைத் திரையில் கண்டது பரவசமாகயிருந்தது. சொல்லாக இருந்த பாரதி உருவெடுத்து நடமாடியது சினிமாவில்தான். அதேநேரம், பாரதி குடும்பத்தின் வறுமை, கடன் தொல்லை இவற்றைப் படத்தில் கண்டபோது அதிர்ச்சியாகவும் இருந்தது. பாரதியாக எஸ்.வி.சுப்பையா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் நடித்திருப்பார்.

பாரதியை விடப் பத்து வயது பெரியவர் வ.உ.சி. எட்டயபுரம் சமஸ்தானத்தில் இருவரின் தந்தையாரும் நெருக்கமான நண்பர்கள். பாரதியாரை வ.உ.சி. “மாமா” என்று அழைப்பதே வழக்கம். ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் வருவதற்கு முன்பு சில படங்களில் பாரதியின் பாடல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால், கப்பலோட்டிய தமிழனில்தான் பாரதி திரையில் தோன்றி, தன் பாடலைப் பாடும் காட்சி இடம்பெறுகிறது. அநேகமாக சினிமாவில் பாரதி தோன்றியது அதுவே முதல் முறை என நினைக்கிறேன்.

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியின் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தன. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா பாடிய ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ மிகவும் இனிமையான பாடல். ஆண் பாடுவதாகவே பாரதியார் எழுதியுள்ள இந்தப் பாடலை, ஜி.ராமநாதன் இருவரும் பாடுவதாக மாற்றி இனிமையாக்கியிருப்பார். இந்தப் படத்தில் பாரதி ஒரு காட்சியில், மனிதர்களைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் பிச்சையெடுப்பதில்லை என்று சொல்லுவார். அந்த வார்த்தைகள் இன்றும் மனதில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் பல நாட்களுக்கு அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மனிதன்தான் பிச்சையெடுக்கிறான். பசிக்கு உணவு கிடைக்காத தெருநாய் ஒருபோதும் பிச்சை எடுப்பதில்லை. துறவு வாழ்க்கை பிச்சை வாங்குவதை நெறியாக வைத்திருக்கிறது. அது ஒரு அறவழி. ஆனால், உழைக்காமல் ஏமாற்றி வாழ நினைப்பவர்கள் பிச்சை எடுப்பதைத்தான் பாரதி கண்டிக்கிறார்.

இந்தப் படத்தில் வ.உ.சி.யின் தம்பி மீனாட்சி சுந்தரம் இரண்டு காட்சிகளில் இடம்பெறுகிறார். வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த மீனாட்சி சுந்தரம், மனங்கலங்கிப் பைத்தியமாக மாறினார். வ.உ.சி தனது உயிலில் எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குச் சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். படத்தில் வ.உ.சி.யிடம் அவரது தம்பி சித்தம் கலங்கிப் பேசும் காட்சியிருக்கிறது. அதில் செய்வதறியாது வ.உ.சி. கலங்கி நிற்பார். சகோதர பாசம் எத்தனை வலிமையானது என்பதை விளக்கும் சிறந்த காட்சி அது.

வாஞ்சிநாதனுடன் ஆஷ் துரையைக் கொல்வதற்குச் சென்ற மாடசாமி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக மாற்றப்பட்டிருக்கிறார். மாடசாமியை பிரிட்டிஷ் அரசால் கண்டுபிடிக்க முடியவேயில்லை. அவர் என்னவானார் என்பது இன்று வரை அறியாத மர்மமே. சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலையானபோது, அவரை வரவேற்க தேசபக்தர்கள் திரண்டுவரவில்லை. வந்திருந்தவர் சுப்பிரமணிய சிவா மட்டுமே. அவரும் உருக்குலைந்து தொழுநோயாளியாக இருந்தார். படத்தில் அவரைக் கண்டு வ.உ.சி. கண்ணீர் விடும் காட்சி மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.

தேசத்துக்காக உழைத்து தனது செல்வத்தை இழந்த வ.உ.சி. பிழைப்புக்காக சென்னையில் மளிகைக் கடை, நெய்க் கடை, மண்ணெண்ணெய்க் கடை நடத்தியிருக்கிறார். வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாத நிலையில் வாழ்ந்திருக்கிறார். தனது உயிலில் கடன் பாக்கிகளை விரிவாகக் குறிப்பிடுகிறார். வீட்டு வாடகை பாக்கி ரூ.135, துணிக் கடை பாக்கி ரூ.30, எண்ணெய்க் கடை பாக்கி ரூ.30, சில்லறைக் கடன் ரூ.50, தனிநபர்களுக்குத் தர வேண்டிய கடன் ரூ.86 இப்படி நீள்கிறது அந்த உயில். அந்த உயிலை வாசித்துப் பார்க்கும் நமக்கே ரத்தக்கண்ணீர் வருகிறது.

சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. நினைவூட்ட வேண்டிய வரலாற்றை, ஆளுமைகளை, நிகழ்வுகளைச் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டியதும் அதன் பணியே. சில ஆயிரம் பேர் மட்டுமே அறிந்திருந்த வ.உ.சி.யைப் பல லட்சம் தமிழ் மக்கள் மனதில் பதியச்செய்தது சினிமாவே. அந்தப் பொறுப்பை இன்றைய சினிமா ஏன் கைவிட்டது? தமிழகம் எவரைக் கொண்டாட வேண்டும், எதற்குக் கொண்டாட வேண்டும் என்று தெரிந்துகொள்ளாமல், பொய்யான மனிதர்களுக்குக் கிரீடம் சூட்டி, புகழாரம் பாடுகிறது என்பது சீரழிவின் அடையாளமே. ஒரு கத்தி கொலைக்கான ஆயுதமாவதும் அறுவைசிகிச்சைக்குப் பயன்படுவதும் யார் கையில் அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இது சினிமாவுக்கும் பொருந்தக்கூடியதுதானே.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x