Published : 16 Nov 2019 07:30 AM
Last Updated : 16 Nov 2019 07:30 AM

அர்ப்பணிப்புக்கு அப்பால்... 

சம்பத்ஜி

தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலும் அடங்கிய பண்போடும் ஒரு தீராத சேவைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் உமா பிரேமனின் வாழ்க்கையைப் பேசும் புத்தகம்தான் ‘கதை கேட்கும் சுவர்கள்’. இது புனைவு அன்று; அசலான வாழ்க்கைச் சித்திரம். சுயசரிதை எனினும்கூடப் புனைவுக்கான சுவாரஸ்யத்தோடும் புதுப்புதுத் திருப்பங்களோடும் வாழ்க்கை தரிசனங்களைக் காட்சிகளாக்கி விரிகிறது. துயர் பூசிய தன் வாழ்வின் விம்மல்களைச் சுவர்களோடு மட்டுமே பகிர்ந்துகொள்கிறார் உமா. மலையாளத்தில் ஷாபு கிளிதட்டிலால் எழுதப்பட்ட இந்நூலை கே.வி.ஷைலஜா தமிழாக்கம் செய்துள்ளார்.

நமக்குப் பாதுகாப்பாய்த் துணைநிற்கும் ஒன்று, திடுமென சைலன்சர் பொருத்திய துப்பாகியாக மாறி நம்மைச் சுட்டு வீழ்த்தினால் எப்படி இருக்குமோ அப்படியானதுதானே குடும்ப உறவினுடைய துரோகம்? அப்படியான கொடூர துரோகம் தன்னை ஈன்ற தாயாலேயே உமாவுக்கு நேர்கிறது. தனக்குப் பிடித்தமான ஜீவன் மிருகமாய்த் தன் கூரிய நகங்களால் கீறிக்கீறி ரணமாக்கிக்கொண்டிருப்பதைத் தவிர்க்கவும் முடியாமல் கவிழ்க்க முடியாத கடலாய் நுரைத்துக்கொண்டிருந்தது உமாவின் வாழ்வு.

ரணம் கசிந்து சீழ் வடியும் நோயாளிகளைத் தேடிச்சென்று முகம் சுளிக்காது சிகிச்சை தரும் அப்பாவின் கம்பவுண்டர் சேவையின்பால் உமாவுக்கும் பற்றுதல் உண்டாகிறது. மலரின் ஆயுளைவிட அது சுரக்கும் தேனின் ஆயுள் அதிகம்தான் இல்லையா? பால்யகாலத்து சிறு பற்றுதல்கூடப் பித்தாய்ப் பரவி ஆயுள் வரை தொடர்கிறது. அப்பாவுக்கு அப்படியே நேரெதிரானது அவரது அம்மாவின் இயல்பு.

மருத்துவச் சேவையை அருவருப்பாகப் பார்ப்பவளாக, பகட்டு விரும்பியாக , உல்லாசப் பேர்வழியாக, பணத்தேவையின் பொருட்டு எந்த எல்லைக்கும் செல்பவளாக இருக்கிறாள் அம்மா. ஒருகட்டத்தில், உமாவையும் தம்பிக்குட்டனையும் தன் கணவரையும் விட்டுவிட்டு, வேறொருவரோடு தீபாவளி நாளன்று கிளம்பிவிடுகிறார் உமாவின் அம்மா.

நொறுங்கிப்போன இக்குடும்ப நிகழ்வை ஊரே பட்டாசு வெடித்துக் கொண்டாடிக்கொண்டிருந்தது. உமாவுக்குள் ஒளிர்ந்துகொண்டிருந்த மத்தாப்புகள் மொத்தமாய் அணைந்துபோன முதல் இருள் அது. எட்டு வயதிலேயே தாயின் பொறுப்பேற்கிறாள் உமா. பாட்டி வீட்டின் அடைக்கலம்கூட நிலைக்கவில்லை. உமாவையும் தம்பிக்குட்டனையும் சொற்ப காலத்திலேயே அவமானங்களைப் பூசித் துரத்திவிடுகிறார்கள். அண்டைவீடுகள், பள்ளி சினேகங்கள் யாவுமே உமாவைப் பரிகசிக்கின்றன.

நிழலற்றவர்களாக அலைந்த குழந்தைகளைக் கண்டு புழுங்கிய நிலையில் உமாவின் வற்புறுத்தலும் புற மனிதர்களின் அழுத்தமும் கூடி அப்பாவுக்கு மறுமணம் நடக்கிறது. தாய்ப்பற்றுக்கு ஏங்கிய உமாவின் வாழ்வு மீண்டும் சரிகிறது. சித்தி வடிவில் கொடுமை தொடர்கிறது. சிட்டுக்குருவிகளோடு பறந்து வானம் அளக்க வேண்டிய பால்யத்தில் துயர்படிந்த நிலத்தில் அவமானங்களை அளந்துகொண்டிருந்தாள் உமா.

நமக்கான தடயத்தை விட்டுச்செல்ல வேண்டும் என்பதை ஆழ்மன வாக்குமூலமாக சபதமேற்கிறாள் உமா. முத்தாய்ப்பாக, தனது பதினேழாவது வயதில் கொல்கத்தா சென்று செவிலியாவதற்காக அன்னை தெரசாவைச் சந்திக்கிறாள். வயது கருதி அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. அன்னையிடமிருந்து உரிய அறிவுரைகளோடும் ஆசியோடும் திரும்புகிறாள். இது உமாவின் வாழ்வில் பெருவாசலாக அமைகிறது. சேவை என்பதில் பிடிவாதமோ வைராக்கியமோ தேவையற்றது; மனசையும் உடலையும் பூரணமாகச் சமர்ப்பிக்கவல்லது என்ற புரிதலுக்கு வருகிறாள் உமா.

உமாவின் இந்த மன அமைதி மீண்டும் கலைக்கப்படுகிறது. விட்டுப்போன அவளது அம்மா மீண்டும் உமாவின் வாழ்வுக்குள் நுழைகிறாள். உமாவுக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒருவனிடம் பணம் பெற்றுக்கொண்டு மும்பை சிவப்பு விளக்குப் பகுதிக்கு அனுப்பிவிடுகிறாள். தன்னைப் பறிகொடுத்துவிடாமலும், உயிரோடும் அங்கிருந்து மீண்டெழுந்துவருகிற உமாவின் போராட்டம் நுட்பமும் சாதுர்யமும் கலந்த மூர்க்கத்தில் வெளிப்படுகிறது. அவள் நம்முள்ளே உன்னதமான உயரத்தை எட்டிவிடுகிறாள்.

அதன் பிறகும், அம்மாவின் புதிய புதிய நாடகத்துக்கு முன்பாகத் தோற்றுக்கொண்டே இருக்கிறாள் உமா. தான் பெற்ற கடனுக்காக வயது முதிர்ந்த பிரேமன் என்பவனுடன் கட்டாயக் கல்யாணத்துக்குப் பலியாகிறாள். அந்தக் கட்டாய உறவில் ஒரு குழந்தையும் பிறக்கிறது. பிரசவமான இளவுடல் எனவும் பார்க்காமல், உமாவின் தொடர்ந்த புறக்கணிப்பைப் பழிவாங்கும் விதமாக அவளது பலவீன நிலையைப் பயன்படுத்தி வல்லுறவுகொள்கிறான் பிரேமன். உயிருக்குப் போராடிய உமாவைக் கஷ்டப்பட்டுக் காப்பாற்றுகிறார்கள்.

இத்தனை அழுத்தங்களிலிருந்தும் மூர்க்கமாய்த் திமிறி எழுந்து பெருஞ்சுடராய் ஒளிர்கிறாள் உமா. தனக்குக் கிட்டாத தாயன்பை நிலமெங்கும் கடத்த வேண்டுமென்ற உறுதியோடு இரக்கத்தையும் மன்னிப்பையும் மட்டுமே முதன்மைப் பண்பாக முன்னெடுக்கிறாள் உமா.

‘எந்தத் துயரும் என்னை வேட்டையாட விடுவதில்லை. நினைத்த எல்லாவற்றையும் யாரையும் காயப்படுத்தாமலே செய்ய விரும்புகிறேன். துக்கத்தின் வழியாக நடந்தாலும் என் தடத்தை மாற்றி வைத்து இடறாமல் சென்றுகொண்டிருக்கிறேன்’ என்ற உன்னத லட்சியத்தோடும், சாந்தம் ததும்பும் ஆகிருதியோடும் செவிலித்தாயாய் வலம்வந்துகொண்டிருக்கிறார் உமா!

- சம்பத்ஜி,
தொடர்புக்கு: sampathnregs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x