Published : 16 Nov 2019 07:27 AM
Last Updated : 16 Nov 2019 07:27 AM

வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்

வே.முத்துக்குமார்

‘நான் இறந்தால் என்னைப் பற்றிப் பத்திரிகைகள் எழுதுமா என்பது கேள்வி. தமிழ்நாடு எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கெளரவம் அத்தகைய சந்தேகத்தை எழுப்புகிறது... பத்திரிகைகளாவது ஒருநாள் எழுதும்... எழுதாமலும் போகும். ஆனால், நண்பர்கள் என்று சில பிறவிகள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி நினைத்துவிட்டால் எனக்கு சாகக்கூட பயமாயிருக்கிறது.’

நையாண்டி பாரதி என்ற புனைபெயரில் ‘கிராம ஊழியன்’ இதழில் 1944-ல் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்திருந்தபோதிலும், ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்து மறைய வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டவர் வல்லிக்கண்ணன்.

‘எழுதுவது, படிப்பது, ஊர் சுற்றுவது - இதுவே என் வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று தன் வாழ்க்கையை நடத்திக்காட்டினார். மூன்றாண்டு காலமாகத் தான் பார்த்துவந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகப் பணியை 1941-ல் ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர எழுத்தாளராகும் எண்ணத்துடன் நெல்லை அரசடிப் பாலத் தெருவில் வீடொன்றை வாடகைக்குப் பிடித்துக் குடும்பத்தினருடன் குடியேறினார் வல்லிக்கண்ணன். அந்த வீட்டுக்கு ‘சாந்தி நிலையம்’ என்று பெயர்சூட்டிக்கொண்டார். இந்தப் பெயர் தாகூரின் ‘சாந்தி நிகேதன்’ பாதிப்பால் உண்டானது.

திருச்சி - துறையூரிலிருந்து கு.ப.ராஜகோபாலனைக் கெளரவ ஆசிரியராகவும், கவிஞர் திருலோக சீதாராமை ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த ‘கிராம ஊழியன்’ இதழில் துணை ஆசிரியராக 1944 பிப்ரவரியில் இணைந்தார் வல்லிக்கண்ணன்.

1944 ஏப்ரலில் கு.ப.ரா. காலமாகிவிட, இதழாசிரியர் திருலோக சீதாராமும் விலகிக்கொள்ள, ‘கிராம ஊழியன்’ ஆசிரியர் பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டார். சொ.மு., சொக்கலிங்கம், கெண்டையன் பிள்ளை, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, சொனா.மூனா, ரா.சு.கிருஷ்ணசாமி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம், இளவல், நையாண்டி பாரதி ஆகிய புனைபெயர்களில் தனது பன்முகப் படைப்புகளால் கிராம ஊழியனை அழகுபடுத்தினார்.

அப்போதே அவரது ‘நாட்டியக்காரி’ சிறுகதைத் தொகுப்பும், கோரநாதன் என்ற புனைபெயரில் அவர் எழுதிய ‘கோயில்களை மூடுங்கள்’, ‘படவுலகில் கடவுள்கள்’ சிறு வெளியீடுகளும், ‘குஞ்சாலாடு’ குறுநாவலும், ‘இதய ஒலி’ கையெழுத்துப் பிரதியின் அச்சு வடிவ வெளியீடும் வெளிவந்தது. ரசிகமணி டி.கே.சி.யின் ‘இதய ஒலி’ நூல் ஏற்படுத்திய தாக்கத்தில், அந்தப் பெயரிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் நடத்தியிருக்கிறார் வல்லிக்கண்ணன்.

‘பாரதி காட்டிய வழியைப் பின்பற்றி மறுமலர்ச்சி இலக்கியத்துக்குத் தொண்டுசெய்வோம்’ என்ற அறிவிப்போடு ‘கிராம ஊழியன்’ ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவர், இளம் எழுத்தாளர்கள் பலரை இவ்விதழில் பங்களிக்க அழைத்துவந்தார். இளைஞர்களை இலக்கியத் துறைக்குள் ஆற்றுப்படுத்தும் பணி அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

‘கிராம ஊழியன்’ நின்றுபோன பிறகு, சென்னையிலிருந்து வெளிவந்த ‘தீப்பொறி’, ‘ஹனுமான்’ பத்திரிகைகளில் சில காலம் பணியாற்றினார். அதன் பின்னர், சுதந்திர எழுத்தாளராகவும் எழுதிவந்தார். 1960-க்குப் பிறகு வல்லிக்கண்ணன் எழுதிய கவிதைகளை, ‘அமர வேதனை’ எனும் தலைப்பில் சி.சு.செல்லப்பா தனது ‘எழுத்து’ பிரசுர வெளியீடாக1974 ஏப்ரலில் வெளியிட்டார்.

1977-ல் ‘எழுத்து’ பிரசுரம் வெளியிட்ட வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலே அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத்தந்தது. புதுக்கவிதை குறித்து வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட முன்னோடி முயற்சி என்ற வகையில் அந்நூலை எழுதிய வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றென்றும் நினைவில் இருப்பார்.

- வே.முத்துக்குமார், தொடர்புக்கு: narpavi2004@yahoo.com
நவம்பர் 12: வல்லிக்கண்ணன் நூற்றாண்டு தொடக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x