

ஷங்கர்ராமசுப்ரமணியன்
அவன் சிறுவனாக இருந்தபோது, பொருட்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் பேராவல் கொண்டிருந்தான். கையில் கிடைப்பதை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அதன் இயக்கத்தைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். அவன் வளர்ந்த பிறகும் தன் வேலையை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால், அந்த வேலையின் வீச்சு வேறு. பொம்மை ரயில்களை உடைக்காமல் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வெற்றியும் கண்டான். அவன், ஸ்டீபன் ஹாக்கிங். பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள், காலம்-வெளி தொடர்பான பல புதிர்களை அவிழ்த்துத் தெளிவாக்கியவர்; அறிவியல் மீது சாமானிய வாசகர்களிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவரது இறுதி நூல் ‘ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்’.
கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது? இப்படியான பத்து முக்கியமான கேள்விகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்துள்ள ஆழமான பதில்கள்தான் இந்நூல். இளம் தலைமுறையினர், மாணவர்கள், குழந்தைகளை நோக்கி எளிமை, சுவாரஸ்யம், விந்தை, வாத்சல்யம், ஆழம், நகைச்சுவையுடன் உரையாட முயலும் இறுதிக் கடிதம் இந்தப் புத்தகம். அறிதலின் மீது பிரியம் கொண்டு அன்றாட அரசியல், வாழ்க்கை நிகழ்ச்சிகள், சினிமா செய்திகள், பல துறை அறிவுகளைக் கலந்து கருந்துளை சார்ந்த சிக்கலான விஷயங்களையும் விளக்க முற்படுகிறார். கருந்துளை ஒன்றுக்குள் இடப்பட்ட செய்தி அப்படியே இருக்கும் என்று கூறப்பட்டதை மறுக்கும் ஹாக்கிங், ‘செய்தி முழுமையாக அழிந்துபோகாது. ஒரு கலைக்களஞ்சியத்தை எரித்துவிட்டு சாம்பலையும் புகையையும் வைத்துக்கொள்வது போன்றது அது’ என்று உதாரணம் தருகிறார்.
தற்போதைக்கு அதிபுனைவில் மட்டுமே சாத்தியப்படும் காலப்பயணம், வேற்றுக்கிரகக் குடியேற்றம் குறித்த ஸ்டீபன் ஹாக்கிங் மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து அங்கே மக்கள் குடியேறியது எத்தனை இயல்பாக இருக்குமோ, அதேபோல மனித குலத்தின் அடுத்த நடவடிக்கை குடியேறுவதற்குத் தகுந்த இன்னொரு கிரகத்தைத் தேடுவதுதான் என்கிறார். பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் அதற்கான சாத்தியமும் வசதிகளும் ஏற்படும் என்று கூறும் அவர் அதற்கான ஏற்பாடுகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்துக் குடியேறும்போதுதான் மதம், தேசம் எனப் பிரிவினைகளில் உழலும் மனிதகுலம் இந்தப் பூமி என்னும் அற்புதக் கிரகம் குறித்த பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் அடையும் என்கிறார்.
கற்பனையும் விந்தையும் அறிதலுக்கான ஆசையும் ஒரு மனிதனிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஸ்டீபன் ஹாக்கிங்கும் அவரது இந்த எழுத்துகளும் ஒரு உதாரணம். கற்பனையின்மையிலும் படைப்பாற்றலின்மையிலும் உறைந்து சாதி, மத, இன அடையாளங்கள் கூர்மையாகி முரண்பட்டுப் போரிட்டுக்கொண்டிருக்கும் உலகில் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு உயிலைப் போல இந்த இறுதிப் புத்தகத்தை எழுதிச்சென்றிருக்கிறார் ஹாக்கிங். எதிர்காலம் நல்லதாகவே இருக்கும்; அதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் நகைச்சுவையுடன் சொல்கிறார். இந்தத் தமிழ்ப் புத்தகத்தில் ஹாக்கிங்கின் குரலைக் கேட்கச் செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் பிஎஸ்வி குமாரசாமி.
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
ஸ்டீபன் ஹாக்கிங்
தமிழில் : பிஎஸ்வி
குமாரசாமி
மஞ்சுள் பதிப்பகம்
விலை : ரூ. 299
தொடர்புக்கு: 98194 59857