Published : 09 Nov 2019 08:44 AM
Last Updated : 09 Nov 2019 08:44 AM

ஆநிரைகளை மீட்க போரிடும் கரந்தை வீரனின் நடுகல்- கோவை அருகே கண்டெடுப்பு

த.சத்தியசீலன்

கவர்ந்து சென்ற ஆநிரைகளை (கால்நடைகளை) மீட்க, வெட்சி வீரனுடன் போரிடும் கரந்தை வீரனின் நடுகல் கோவை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் மறவன் ராமேசு (47). தொல்லியல் ஆய்வாளரான இவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு, தொல்லியல் பொருட்களை கண்டறிந்து, அதன் வரலாற்றை உலகறியச் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இதன்படி பொள்ளாச்சி அருகே சமத்தூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குறிஞ்சேரி என்ற பகுதியில் கள ஆய்வு மேற்
கொண்டபோது, அங்குள்ள ஓர் ஏரிக்கரையோரம் உள்ள தோட்டத்தில் சற்று மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்ட நடுகல்லை கண்டெடுத்துள்ளார்.

ஆநிரைகளை மீட்கும் கரந்தை வீரன்

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவன் ராமேசு ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கண்டெடுக்கப்பட்ட நடுக்கல்லானது, இரு பெரும் வீரர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் போன்று அமைந்துள்ளது. வலது புறமுள்ள வீரன், இடது புறமுள்ள வீரனைக் காட்டிலும் சற்று உயரமாக காட்டப்பட்டுள்ளான். அவனது இரு காதுகளிலும் பெரிய வளையங்களும், கழுத்தில் மாலையும் தென்படுகிறது. தனது நீண்ட தலைமுடியை சுருட்டி பந்தைப்போல கொண்டையிட்டுள்ளார். இந்த வீரன் கரந்தை பூ சூடிய வீரனாக இருக்கலாம். ஏனெனில் கரந்தை பூவானது உருண்டையாக பந்து போலவே காட்சியளிக்கும்.

தொல்காப்பிய புறத்திணையில் குறிப்பிட்டது போல, இவர் தலையில் கரந்தை பூச்சூடியே போரிடுகிறார் என நம்புகிறேன். எனவே இவ்வீரன் வெட்சி வீரர்களால் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்கும் பொருட்டு, கரந்தை வீரனாக இருக்க லாம். இடது புறமுள்ள வீரனின் தலைமுடியை, இடது கையால் பிடித்தவாறும், வலது கையால் தன்னிடம் உள்ள குறு வாளால் அவரது வயிற்று
பகுதியில் குத்துவதைப்போல அமையப்பெற்றுள்ளது.இதைப்போலவே இடது புறமுள்ள வீரன், இரு காதுகளிலும் பெரிய வளையங்களும், கழுத்தில் மாலையும் அணிந்துள்ளார். வலது கரத்தில் ஒரு குத்துவாளுடன், தனது தலைமுடியைப் பிடித்துள்ள மற்றொரு வீரனது கையை தடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இவ்வீரனின் கொண்டையும் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. தலையில் வெட்சிப்பூ சூடி போரில் ஈடுபட்டிருப்பார் என கருதுகிறேன். இவன் வெட்சி பூ சூடி போரிட்டிருக்கலாம் என்பதால், வெட்சி வீரனாக இருந்திருக்கலாம். இக்கல்லின் இடது புறத்தின் மேல் பகுதியில் வில்லும், அம்பும் செதுக்கப்பட்டுள்ளது.

நடுகல் வரலாறு

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும், வாழ்வியல் முறையும், இறந்து போன மூத்தோர் நினைவுக் குறித்த வழிபாடும், அவர்களுக்கு நடுகல் எடுத்து வழிபட்டு வருவதும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையிலான நடுகற்கள் புலியுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவருக்கான நடுகற்கள், ஆநிரை கவர்தலால் ஏற்பட்ட சண்டையில் மாண்டவருக்கான நடுகற்கள், வணிக நடுகற்கள், பன்றி குத்தி நடுகற்கள், சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து இறந்த முன்னோர்களின் நினைவுச் சின்னங்கள் போன்றவை குறித்து சங்க இலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்க இலக்கிய நூல்களைப் படிக்கும்போது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வில் முறையாக இருந்துள்ளது. இதுகுறித்து நடுகல் வழிபாட்டு நூல்கள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு,அகநானூறு, ஐங்குறு நூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நூல்களின் பாடல்களில்நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த வகையான நடுகற்களுக்கு வழிபாட்டு விழா நடத்து
தல், ஆடுகளை வெட்டி பலியிடுதல் போன்ற பழக்கவழக்கம் நமது முன்னோர்களிடையே இருந்துள்ளது.

பண்டைய காலங்களில் வாழ்ந்த மக்கள் சிறு கூட்டங்களாக வாழத் தொடங்கிய நிலையில் தங்களது வாழ்வியல் தேவைக்காக தங்களோடு ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தனர். இவற்றை ஆவு என்றும் ஆநிரைகள் என்றும் அழைத்தனர். ஆநிரைகளையே பண்டைய மக்கள் செல்வமாக கருதியதால் அன்றைய சூழலில் இரண்டு சிறுகுடிகளுக்குமிடையே போர் நடக்கும் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளை கவருவதும் அதை இவர்கள் மீட்டுக்கொள்வதும் இயல்பு, இதுவே பிற்கால மன்னர்களின் போர் முறையாக மாறியது.

ஊர்ப்பெயர் ஆய்வு

நடுகல் கண்டெடுக்கப்பட்ட இடம் 'குறிஞ்சேரி' என பெயர் பெற்றுள்ளது. ஊர் பெயர்கள் பொதுவாக அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் மக்களை மட்டுமே சுட்டிக்காட்டி அமைவதில்லை. சொல்பொருள் நிலையைக் கொண்டும் இருப்பிடங்களை சுட்டிக்காட்டப்படுவது இல்லை.

மாறாக அங்குள்ள பயன்பாட்டு நிலையையும், நடந்தேறிய சம்பவத்தின் அடையாளத்தையும் ஊர்களைக் குறித்து வரும் ஆகுபெயரையும் அல்லது தழுவல் பெயரையும், செயல்பாட்டில் இருக்கும் சொற்களையும், பொருட்களையும் தெரிந்து கொண்டு, ஊர்ப்பெயர் தோன்றிய பின்னணியையும் புரிந்து கொண்டால்தான் இதுபோன்ற தரவுகளுக்கு விடை காண இயலும் .

நிலத்தோற்றமானது மலைகள்,காடுகள், மேட்டு பகுதிகள்,வெட்டவெளி, பள்ளங்கள், நீர் ஓடைகள் போன்றவை மையப்படுத்தி ஊர்ப்பெயர்கள் அமையக் காரணமாக இருந்தன. ‘குறிஞ்சேரி’ என்ற இந்த ஊர்ப்பெயரை ஆய்வு நோக்கில் எடுத்துக்கொண்டால், ‘குறிஞ்சி+சேரி’ என பிரித்தெழுதி நிலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் குறிஞ்சி என்பது குறிஞ்சிக்குரிய நிலத்தையும், சேரி என்பது முல்லைக்குரிய நிலத்தையும் குறிக்கப்படுகிறது. ‘சேரி’ என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழுமிடமாகும். இச்சொல் குறித்து தொல்காப்பியத்தில் பதிவு உள்ளது. நச்சினார்கினியர் தனது கூற்றில், முல்லை நிலத்து ஊர்களை சேரி என்று குறிப்பிடுகிறார். இதுபோன்ற நடுகற்கள் பழங்கால தமிழர் வரலாற்றை பிரதிபலிப்பதாக அமைகின்றன, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x