Published : 09 Nov 2019 08:28 AM
Last Updated : 09 Nov 2019 08:28 AM

360: தோழர் அண்ணாச்சி - 80

ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி

‘மீனாட்சி’ புத்தக நிலையமும், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகமும் இணைந்து ராஜபாளையத்தில் நடத்திவரும் புத்தகக்காட்சிக்கு நல்ல வரவேற்பு. ராஜபாளையத்திலுள்ள காந்தி கலை மண்டபத்தில் நவம்பர் 1 தொடங்கிய புத்தகக்காட்சி 17 வரை நடக்கிறது. நமது புதிய வெளியீடுகளான அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, காந்தியை அறிந்துகொள்ள உதவும் தொடக்க நூலான ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ உள்ளிட்ட புத்தகங்களை இங்கே வாங்கிக்கொள்ளலாம். தொடர்புக்கு: 94432 62763

‘நல்லி-திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள்

மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு உத்வேகமூட்டும் வகையில் கடந்த 15 ஆண்டுகளாக ‘நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது’ வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் எஸ்.தில்லைநாயகம், ஸ்ரீதர் ரங்கராஜ், மா.கலைச்செல்வன், ஆர்.மினிப்ரியா, கார்த்திகைப் பாண்டியன், அம்பிகா நடராஜன், ப.மணிபாலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. சீனி.விசுவநாதன், வி.ராம்நாராயண் ஆகியோருக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

தோழர் அண்ணாச்சி - 80

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னோடிகளில் ஒருவரும், ‘புதிய தரிசனங்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பொன்னீலன் தனது 80-வது பிறந்தநாளில் அடியெடுத்துவைக்கிறார். கல்வித் துறை அதிகாரியாக இருந்தபோதும் சரி, ஓய்வு பெற்ற பிறகு முழு நேர எழுத்தாளராகிய பிறகும் சரி தமிழ்நாடு முழுவதும் இடைவிடாத பயணங்களை மேற்கொண்டவர். இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் எவரும் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் அவருடைய 80-வது பிறந்தநாள் விழா நவம்பர் 16 அன்று நாகர்கோவில் இருளப்பபுரம் சீதாலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முழு நாள் கொண்டாட்டமாக நடைபெறும் இவ்விழாவை நல்லகண்ணு தொடங்கிவைக்க ஜெயமோகன் முடித்துவைக்கிறார்.

டாக்டர் கு.கணேசனுக்கு அழ.வள்ளியப்பா இலக்கிய விருது

2019-ம் ஆண்டுக்கான ‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இலக்கிய விருது’ டாக்டர் கு.கணேசனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐம்பதாவது புத்தக வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் டாக்டர் கு.கணேசன் தனது எழுத்துப் பணியின் தொடக்கக் காலத்தில் குழந்தைகளுக்காகத்தான் எழுதினார். அழ.வள்ளியப்பா அவருக்கு ஆதர்சமும்கூட. அந்த வகையில் அவருக்குப் பொருத்தமானது. ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கங்களிலும் இணைப்பிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் கு.கணேசனுக்கு வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x