Published : 09 Nov 2019 08:26 AM
Last Updated : 09 Nov 2019 08:26 AM

நூல்நோக்கு: விவரிக்க முடியாதவற்றின் பேச்சு

நீள் கவிதைக்கான சிந்தனை வலுவும், விரியும் மொழிச் சுருள் திறனும் கொண்டவையாக வே.நி.சூர்யாவின் கவிதைகள் தோற்றம்கொள்கின்றன. சந்நியாசியின் மலட்டு வார்த்தையை ஏற்காத பிச்சமூர்த்தியின் தேட்டமும், புற உலகின் புழுதிச் சுவரைத் தாவிச்செல்லும் பிரமிளின் அகவழிப் பயணமும் சூர்யாவிடம் தொடர்வதாகத் தோன்றுகிறது.

‘அந்தியைக் கண்டுபிடிக்க இயலாத நீளமான மத்தியானம்’தான் சூர்யாவின் கவிதைக் காலம். ‘தெரியாமையின் அப்பாலுக்கும் கணம்தோறும் உருமாறும் குழப்பத்துக்கும் இடையிலுள்ள வெளி’ அவரது கவிதை வெளி. ‘பழகிய அர்த்தம் மற்றும் பழைய யதார்த்தத்தின் மீது வைக்கப்படும் கண்டனம்’ அவருடைய கவிதை மொழி. அவரது முதல் தொகுதியான ‘கரப்பானியம்’, எதையும் வெறுமை விழுங்கிவிடாதவாறு பார்த்துக்கொள்ளும் பூச்சி இனங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள ‘காயாபுரிக் கோட்டை’ தலைப்பில் நீள்கவிதைகள் வாசக மனத்துக்கு நெருக்கமானவை. ‘கல்லின் கதவங்களைத் திறந்துகொண்டு/ எவராலும் அணிய இயலாத சப்பாத்துகளை/ ஊதைக் காற்று அணிந்துகொண்டு/ தாறுமாறாக ஓடுகின்றது’ போன்ற வரிகளின் எளிமைக்கு அருகில், ‘கப்பல்- அபோத இருட்டு - சுருள் சுருளாய் சுழன்று முடிவே இல்லாமல் நீளும் நாள்’ போன்ற அடர்த்தியான வரிகளும் அமைதியாக அமர்ந்திருக்கின்றன. யகர உடம்படுமெய் பல இடங்களில் தவறாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பது மட்டும் மரபுக்கண்ணை உறுத்துகிறது.

- ந.ஜயபாஸ்கரன்

கரப்பானியம்
வே.நி.சூர்யா
சால்ட் வெளியீடு
விலை: ரூ.125
89399 02893

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x