தமிழ் இலக்கணம் கற்பிக்க ஆங்கிலத்தில் ஒரு கையேடு

தமிழ் இலக்கணம் கற்பிக்க ஆங்கிலத்தில் ஒரு கையேடு
Updated on
1 min read

ரவிக்குமார்

புதுச்சேரியில் இருக்கும் பிரெஞ்சு கீழ்த்திசைப்பள்ளியில் (EFEO) பணியாற்றும் ஈவா வில்டனை தமிழ்ப் புலமையுலகில் இருப்போர் நன்கு அறிவர். அவரது மேற்பார்வையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோடைகால/ குளிர்கால இலக்கண வகுப்புகளின் அனுபவத்தையும், அந்த வகுப்புகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட பயிற்சி உபகரணங்களையும் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கற்பிப்பதற்கான ஒரு நூலை அவர் உருவாக்கியிருக்கிறார்.

பழந்தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் இருக்கும் தடைகளில் சிலவற்றைத் தனது சுருக்கமான முன்னுரையில் ஈவா வில்டன் விவரித்திருக்கிறார். ‘மொழி பக்தி’யும் அதில் ஒன்று என அவர் கூறியிருப்பது கவனத்துக்குரியது. அத்தகைய பக்தியின் காரணமாக வாய்ப்புகள் இருந்தும்கூட போதுமான அளவில் தமிழ் மொழி கற்பிக்கப்படவில்லை. இன்று மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கென்று நல்ல இலக்கண நூல்கள் இல்லை, கையேடுகள் இல்லை, தொகை நூல்களும் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றன என வருத்தத்தோடு தெரிவிக்கும் அவர், ‘மதத்தைப்போல தமிழ் மொழிக்கும் ஒளிவட்டம் உருவாக்கப்பட்டிருப்பதால் அது கற்பதற்கானதல்ல, புகட்டப்படுவதற்கானது’ என்ற கருத்து நிலவுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் என்பது உணர்வு சார்ந்த அடையாளமாக இருப்பதால் வேறுபட்ட பின்புலங்களைச் சார்ந்த மாணவர்கள் ஒரு வாக்கியத்தை எப்படி புரிந்துகொள்வது எனக் கேட்பதற்குக்கூட அஞ்சி தாமே தெளிவற்ற முறையில் ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கொள்ள நேர்வதையும் ஈவா சுட்டிக்காட்டுகிறார்.

சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் இலக்கண வளர்ச்சிக்கு உதவும் என்பதையும், சங்க இலக்கியப் பிரதிகள் பலவற்றுக்கு இன்னும்கூட நம்பகமான பதிப்புகள் இல்லை என்பதையும் குறிப்பிடும் ஈவா, சிலவற்றுக்கு புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செம்பதிப்புகளை வெளியிட்டிருந்தாலும், மேலும் சில செம்பதிப்புகள் தயாராகிவந்தாலும் செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன என்கிறார்.

தமிழ் மொழியைக் கற்க விரும்பும் பிறநாடுகளைச் சேர்ந்த மாணவர்களை மனதிற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் அணுகுமுறையைத் தெரிந்துகொள்வது நமக்கும்கூட உதவவே செய்யும். ஈவா வில்டனின் மேற்பார்வையில் செயல்படும் ‘நே தமிழ்’ (NETamil) என்ற திட்டத்தில்தான் தமிழறிஞர்களான கோ. விசயவேணுகோபால், கி.நாச்சிமுத்து, இந்திரா மனுவேல் முதலானோர் பணியாற்றுகின்றனர். புறநானூறு, வீரசோழியம், தொல்காப்பியம் ஆகியவற்றில் அவர்கள் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகள் தமிழுக்கு மேலும் பல சிறப்புகளைக் கொண்டுவரும். அதற்கான முன்னறிவிப்பாக இருக்கிறது இந்நூல்.

Grammar of old Tamil for Students
Eva Wilden
வெளியீடு: French Institute of Pondicherry
விலை: ரூ.650
தொடர்புக்கு : 0413 2231605

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in