கவிதைக்கு வெளியே ஞானக்கூத்தன்

கவிதைக்கு வெளியே ஞானக்கூத்தன்
Updated on
3 min read

நஞ்சுண்டன்

நான் ஞானக்கூத்தனை முதன்முதலில் பார்த்தது 1981 ஜனவரி முதல் வாரத்தில், சென்னை தியாகராய நகரின் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில். அது எம்ஜிஆர் முதல்வராக இருந்து நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கான எதிர்ப்புக் கூட்டம். ‘இலக்கு’ அமைப்பு அதை ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தைச் சேர்ந்த பலரும் பேசினார்கள். பலருடைய பேச்சுகளும் உலகத் தமிழ் மாநாடு குறித்த கடும் விமர்சனங்களாகவே இருந்தன. ஆனால், மாநாடு சிறப்பாகவும் காத்திரமாகவும் நடைபெறப் பல ஆக்கபூர்வமான யோசனைகளை ஞானக்கூத்தன் முன்வைத்தார். இன்றுவரை அது என் நினைவில். இருந்தாலும், அப்போது அவருடன் நேரில் பேசவில்லை. தூரத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதற்கு முன்னரே ஞானக்கூத்தனின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயிருந்தன. அவருடைய ‘அன்று வேறு கிழமை’, ‘சூரியனுக்குப் பின் பக்கம்’ தொகுப்புகளின் தலைப்புகளே மிக வித்தியாசமாகத் தோன்றி கவர்ந்திருந்தன. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தொடர்ந்து பல்வேறு இதழ்களில் வெளியான அவர் கவிதைகளையும் எழுத்துகளையும் படித்துவந்தேன். சென்னை மாநிலக் கல்லூரியில், நான் முதுநிலைப் புள்ளியியல் படித்த காலத்தில் சில கூட்டங்களில் அவர் பேச்சுகளையும் கேட்டேன். ஆனால், அவருடன் நேரடியான பழக்கத்தை ஏனோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நான் பெங்களூரு பல்கலைப் பணியில் சேர்ந்த பிறகு வெளியான என் முதல் கவிதைத் தொகுப்பான ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அவரை அழைக்க என் முன்னாள் குரு தமிழவன் யோசனை கூறி, அதற்காக ஞானக்கூத்தனுக்கு அவரே கடிதமும் எழுதினார். ஞானக்கூத்தனும் முதலில் வருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

நான் ‘பிரதி’ என்று கவிதை அழகியலுக்கான சிற்றிதழை நடத்தியபோது, இரண்டாம் இதழுக்காக அவரிடம் கவிதை கேட்டேன். அப்போதுதான் அவருடன் எனக்கு நேர்ப் பழக்கம் ஏற்பட்டது. ‘பிரதி’யின் வடிவமும் உள்ளடக்கமும் அவருக்குப் பிடித்திருந்தன. கவிதை தர ஒப்புக்கொண்டார். ஒரு மாதத்துக்குப் பிறகு அவரிடம் கேட்டதற்கு, ‘உங்களுக்காக ஒரு கவிதை எழுதினேன். ஆனால், சரியாக வரவில்லை. கொஞ்சம் பொறுத்திருங்கள்’ என்றார். அவர் பதில் எனக்கு ஆச்சரியமாயிருந்தது. பொதுவாக, அவர்போலும் பெயர்பெற்ற கவிஞர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஒரு மாதம் கழித்து கவிதையை அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். ‘பிரதி’யில் அதை வெளியிட்டேன். அது எனக்குத்தான் பெருமை. பின்னர், பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கும், அவரோடு கூட்டத்தில் பேசும் வாய்ப்புகளும் கிடைத்தன. ‘மாற்றம்’ என் இரண்டாம் தொகுப்பு. அதற்கு அவர் முன்னுரை எழுதினார்.

மாயவரத்தில் பிறந்த ஞானக்கூத்தன் பிறப்பால் மாத்வர். வீட்டில் கன்னடம் பேசியவர். ஆனால், அதில் தமிழ்க் கலப்பு அதிகம்; கர்நாடகத்தில் செல்லாது. இருந்தாலும், ஞானக்கூத்தன் கர்நாடகத்தில் - குறிப்பாக, மைசூர் பகுதியில் - புழங்கும் கன்னடத்தைப் பேசவும் எழுதவும் கற்றிருந்தார். தமிழில் அவருக்கிருந்த புலமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு இணையான புலமை அவருக்கு சம்ஸ்கிருதத்திலும் இருந்தது. கவிதையைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளிலும் தமிழ், சம்ஸ்கிருதக் கவிதை ஒப்பீட்டுக் கருத்துகளை அதிகமும் காணலாம்.

ஞானக்கூத்தனுக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் திவாகருக்கு மாத்வ பெண்ணையே மணமுடித்து வைத்தார். பெரியோர்கள் நிச்சயித்த திருமணம் அது. அவரது இளைய மகனுக்கு வங்கியில் வேலை. அவர் மார்வாரிப் பெண் ஒருவரைக் காதலித்தார். ஞானக்கூத்தன் அதை அங்கீகரித்துத் திருமணம் நடத்திவைத்தார். ஞானக்கூத்தன் அன்பான, பொறுப்பான தந்தைதான். அவர் குடும்ப வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் உறுதுணையாக இருந்தவர் அவர் மனைவி. தேய்வழக்கானாலும் இப்படித்தான் சொல்ல முடிகிறது: அவர்கள் ஒருவருக்கு மற்றவர் என்றே பிறந்தவர்கள்.

ஞானக்கூத்தன் வசிக்காத திருவல்லிக்கேணித் தெருவே இல்லை என்றால் மிகையாகாது. அவர் பெரிய தெருவில் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்த காலத்தில், தேவிபாரதி ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியர் ஆகியிருந்தார். இதழ்ப் பணிக்காகச் செல்லும்போதெல்லாம், தேவிபாரதியும் நானும் மதிய உணவுக்கு பாரதி சாலையிலுள்ள அடையாறு ஆனந்தபவன் உணவகத்துக்குச் செல்வோம். போகும்போதோ திரும்பும்போதோ பெரிய தெருவில் ஞானக்கூத்தன் நடைப் பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆம். மதிய நேரத்தில்கூட அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். காரணம், அவரது நீரிழிவுக் குறைபாடு. அவர் வேகமாக நடக்க மாட்டார். வேட்டி, அரைக்கைச் சட்டையில்தான் செல்வார். எங்களைப் பார்த்தால், நின்று அவசரமில்லாமல் பேசிவிட்டுத்தான் செல்வார். கூட்டங்களுக்கு ஞானக்கூத்தன் மிகப் பாந்தமாக உடையணிந்துவருவார். முழுக்கைச் சட்டையை டக்செய்து பெல்ட் அணிந்திருப்பார். ஆட்டோவில் வந்திறங்குவார். அவரோடு சில சமயம் ‘ழ’ ராஜகோபாலனும் வருவார்.

இளையவனுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனிக் குடித்தனமும், மூத்தவனுக்கு திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டு வாசமும் என்றான பிறகு, ஞானக்கூத்தனும் அவர் மனைவியும் இருவரோடும் மாறி மாறித் தங்கினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நான் தொடர்ந்து கவிதைகள் பற்றி ‘உயிர்மை’ இதழில் கட்டுரைகள் எழுதினேன். அவை தொடர்பாக அவருடன் பேச நினைத்து, சென்னை சென்றிருந்தபோது அவரைத் தொடர்புகொண்டேன். அச்சமயம் அவர் பெருங்குடியில் இளைய மகனோடு தங்கியிருந்தார். மாலையில் வரச் சொல்லியிருந்தார். நுங்கம்பாக்கத்திலிருந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை அடையும் வழியைத் தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கியிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் அங்கே சென்றேன். எனக்காகக் காத்திருந்தார் ஞானக்கூத்தன். அப்போதும் பாந்தமாக உடையணிந்திருந்தார். அக்குடியிருப்பின் பொது அறைக்கு அழைத்துப்போனார். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பல யோசனைகளையும் சொன்னார். சுமார் ஒன்றரை மணி நேரம் என்னோடு செலவிட்டார். பிறகு, ஃபிளாட்டுக்கு அழைத்துச் சென்று காபி உபசரித்து, வெளியில் கூட்டிவந்தார். பக்கத்தில் இருந்த மருந்துக் கடைக்குச் செல்லும் வேலை அவருக்கிருந்தது. எனக்கு விடை தந்தார். அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.

ஞானக்கூத்தன் எனக்கு நேரம் ஒதுக்கியதுபோலவே தன்னை நாடிவரும் அனைவருக்கும் செய்தார். பெரும்பாலான இதழ்களில் வெளியான கவிதைகளை அவர் கவனத்துடன் படித்துவந்தார். தனக்குப் பிடித்த கவிதைகளை எழுதியவர்களைச் சந்திக்க நேரும்போது, அவர்களைப் பாராட்டும் வழக்கத்தைக் கடைசிவரை பின்பற்றினார். புதிதாக எழுதவந்தவர்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அதைச் செய்தார். ஒருமுறை இலக்கியக் கூட்டம் ஒன்றில் நானும் குவளைக் கண்ணனும் பேசிக்கொண்டிருந்தோம். அருகில் வந்த ஞானக்கூத்தன் குவளைக் கண்ணனைச் சுட்டிக்காட்டி என்னிடம், ‘நஞ்சுண்டன், இவர் சமீபத்தில் ரொம்ப நல்ல கவிதைகளை எழுதுகிறார்’ என்று சொல்லிவிட்டு வேறெதுவும் பேசாமல் எங்களைக் கடந்தார். அதுதான் ஞானக்கூத்தன்.

கவிஞர் ஆனந்தின் மகன் திருமணத்தின்போதுதான் நான் ஞானக்கூத்தனையும் தேவதச்சனையும் ஒருசேரப் பார்த்தது. தேவதச்சன் சென்னை பச்சையப்பா கல்லூரியில் எம்ஏ தத்துவவியல் படித்துக்கொண்டிருந்தபோது, தேவதச்சன், ஆத்மாநாம், ‘ழ’ ராஜகோபால், ஆனந்த் உள்ளிட்ட பலர் அனேகமாகத் தினந்தோறும் ஞானக்கூத்தனை மெரினா கடற்கரையில் சந்தித்து, கவிதை குறித்து விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை கோவில்பட்டிக்குச் சென்றிருந்தபோது தேவதச்சனிடம், ‘சார், ஞானக்கூத்தன் இறந்த பிறகு எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். சில நிமிடங்கள் என்னைத் தீர்க்கமாக உற்றுப்பார்த்த தேவதச்சன் சொன்னார், ‘பெரிய வெற்றிடத்தை உணர்கிறேன்.’ உண்மைதான், ஞானக்கூத்தனுடன் நெருக்கமாகப் பழகியவர்களும் அவர் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தவர்களும் ஒரு பெரும் வெற்றிடத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ஞானக்கூத்தன் உணர்ச்சிவசப்படாமல் விவாதங்களில் ஈடுபட்டார். வார்த்தைகளை எப்போதும் சிக்கனமாகவே பயன்படுத்தினார். அவசரப்படாமல் சீரான குரலில் நாராச மில்லாமல் பேசினார். ஞானக்கூத்தன் என்று தன்னை அழைத்துக்கொண்ட மனிதரின் வாழ்வு அவர் எழுதிய கவிதைகளைப் போலவே நிறைவு என உறுதியாகச் சொல்லலாம்.

- நஞ்சுண்டன், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்.
தொடர்புக்கு: nanzundan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in