Published : 02 Nov 2019 08:45 am

Updated : 02 Nov 2019 08:46 am

 

Published : 02 Nov 2019 08:45 AM
Last Updated : 02 Nov 2019 08:46 AM

360: யூடியூப் நாயகன்

360-events

ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி

ராஜபாளையத்தில் ‘மீனாட்சி’ புத்தக நிலையமும், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகமும் இணைந்து புத்தகக்காட்சி நடத்துகிறது. ராஜபாளையத்திலுள்ள காந்தி கலை மண்டபத்தில் நவம்பர் 1 தொடங்கி 17 வரை நடக்கும் இந்தப் புத்தகக்காட்சியில் 10% தள்ளுபடி விலையில் புத்தக வேட்டையாடலாம். நமது புதிய வெளியீடுகளான அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, காந்தியை அறிந்துகொள்ள உதவும் தொடக்க நூலான ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ உள்ளிட்ட புத்தகங்களை இங்கே வாங்கிக்கொள்ளலாம்.
தொடர்புக்கு: 94432 62763


இந்திய இலக்கியத்துக்கு ‘மாத்ருபூமி’ விருது

இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு ‘புக் ஆஃப் தி இயர்’ என்ற பெயரில் கேரள ஊடக நிறுவனமான ‘மாத்ருபூமி’, ஐந்து லட்சம் ரூபாய் தொகை கொண்ட விருதை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் கொடுக்கப்படவுள்ள இந்த விருதுக்கான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் சசி தரூர், சந்திரசேகர கம்பார் இடம்பெற்றுள்ளனர். இந்திய கலாச்சாரத்தின் பன்மைத்துவத்தையும் வளங்களையும் பிரதிபலிக்கும் தற்காலச் செவ்வியல் படைப்புக்கு இந்த விருது தரப்படும் என்று சந்திரசேகர கம்பார் கூறியுள்ளார்.

யூடியூப் நாயகன்

வாசிப்புக் கலாச்சாரம் செழித்தோங்கும் பிரதேசங்களில் எல்லாம் வெவ்வேறு விதமான வழிகளில் புத்தகங்களை எடுத்துச்செல்லும் ஆரோக்கியமான போக்கு உண்டு. டிஜிட்டல் யுகத்தில் யூடியூப் விமர்சனங்கள் மிகப் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. தமிழிலும் இப்போது சிலர் இதை முன்னெடுத்துவருவது வரவேற்கத்தக்கது. அதில் கவனம் ஈர்க்கிறார் ‘புக்டேக்ஃபோரம்’ (BookTagForum) யூடியூப் பக்கத்தை நடத்திவரும் சதீஷ்வரன். புத்தகத்தின் முக்கியமான தருணங்கள் தொடர்பான படங்களையும் வாக்கியங்களையும் தனது காணொலியுடன் இணைத்து அசத்துகிறார். ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த சதீஷ்வரன் ஒரு ஐடி ஊழியர். இப்போது அமெரிக்க வாசம். “அமெரிக்கா போன பிறகுதான் வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள அங்கே நண்பர்கள் கிடையாது. அதனால்தான் இந்தப் பக்கத்தைத் தொடங்கினேன்” என்கிறார் சதீஷ்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு

வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டேல்ரிம்பிள்ளின், ‘தி அனார்கி: தி ஈஸ்ட் இந்தியா கம்பெனி, கார்ப்பரேட் வயலன்ஸ் அண்ட் தி பில்லேஜ் ஆஃப் அன் எம்பயர்’ என்ற புதிய நூல் வெளியாகியுள்ளது. லண்டனில் ஒரு மூலையில் இயங்கிக்கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி மொகலாயர்களை இடம்பெயர்த்து இந்தியத் துணைக் கண்டத்தை 1756 முதல் 1803 வரை ஆண்டது என்பதுதான் இப்புத்தகம். கிழக்கிந்திய கம்பெனியார் தம்மை இந்தியாவில் எதிர்த்த வங்காள நவாப்கள், மைசூர் சுல்தான்கள், மராத்திய அரசர்கள், முகலாயப் பேரரசர் ஷா ஆலம் ஆகியோரை எவ்வாறு படிப்படியாக ஐம்பது ஆண்டு காலத்தில் நசுக்கி, சர்வாதிகார சக்தியாக மாறியது என்பதைச் சொல்லும் படைப்பு இது. காலனியம் எப்படி நிகழ்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்கலாம். ஒரு பெருநிறுவனத்தால் உலகமயமாக்கல் தொடங்கப்பட்ட கதை மட்டுமல்ல; ஐரோப்பா, அமெரிக்கா போன்று தொலைதூர நிலங்களிலிருந்து இந்தியாவில் வாழும் சாதாரண மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் கதையும்கூட.360 events‘மாத்ருபூமி’ விருதுவாசிப்புக் கலாச்சாரம்ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x