Published : 27 Oct 2019 10:39 AM
Last Updated : 27 Oct 2019 10:39 AM

தமிழ்க் கலை, இலக்கிய அறிவின் திரட்சியே அன்றைய சிற்பிகள்: பேராசிரியர் சா.பாலுசாமி பேட்டி

சு.அருண் பிரசாத் / ஆதி வள்ளியப்பன்

தமிழக வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த ஆய்வுக்குப் பல சந்தர்ப்பங்களில், அந்தத் துறை சாராதவர்களின் பங்களிப்புதான் கணிசமாக இருந்திருக்கிறது. சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்றிருக்கும் சா.பாலுசாமி, ஒரு கலை வரலாற்று ஆய்வாளராகத் தமிழ் ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை ஆகியவை குறித்து மெச்சத் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலக் கலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டிருக்கும் பாலுசாமி, தொடர் கள ஆய்வு வழியே தமிழகக் கலைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர்; இந்தியக் கலைகள் குறித்த பரந்துபட்ட பார்வையைக் கொண்டவர்; சிற்பம், ஓவியம், கட்டிடம் ஆகிய நுண்கலைகளை இலக்கியத்துடன் ஒப்பிட்டுக் கலைக்கோட்பாடுகளை வடிவமைத்து, கலையியல் ஆய்வில் ‘நம் பார்வை விரிவுக்கான புதிய பூபாள’மாகத் திகழ்பவர் என அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். இலக்கியம், நாட்டுப்புறவியலிலும் ஈடுபாடுகொண்ட இவர், கொல்லிமலைப் பழங்குடி மக்களின் பாடல்களைப் பதிப்பித்துள்ளார். படைப்பிலக்கியத்திலும் தமிழ்க் கலை சார்ந்த திறனாய்விலும் இவருடைய பங்களிப்பு கணிசமானது. தமிழகச் சுவரோவியங்கள் ஆவணத் திட்டம், சென்னை - மாமல்லபுரம் இடையிலான கிழக்குக் கடற்கரை மீனவர் வழக்காற்றியல், தாம்பரம் - அதன் சுற்றுப்புறத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகிய ஆய்வுத் திட்டங்களில் முக்கியப் பங்களித்துள்ளார். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில், பிற்பகல் தொடங்கி மாலைவரை நீண்ட செறிவான உரையாடலின் சில பகுதிகள் இங்கே:

உங்கள் இளமைக் காலம், கல்லூரிப் படிப்பு, தமிழ் ஆர்வம் குறித்துச் சொல்லுங்களேன்...

தெற்கு நோக்கி வரும் காவிரி ஈரோடு மாவட்டத்தில் கிழக்குப் பக்கம் திரும்பும் திருப்பாண்டிக் கொடுமுடியில் 1958 ஜூன் 16-ல் பிறந்தேன். தேவாரப் பாடல் பெற்ற கொங்கு மண்டலத் தலங்களுள் ஒன்றான மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ள ஊர். கே.பி.சுந்தராம்பாள் பிறந்த ஊர். சங்கரா வித்யாசாலைப் பள்ளியிலும் வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியிலும் படித்தேன். உயிரியலே விருப்பப் பாடமாக இருந்தது. அன்றைக்குக் கூடுதல் மதிப்பு பெற்றிருந்த தாவரவியல் பட்டப்படிப்பில் சேரக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், பிடிவாதமாக விலங்கியல் எடுத்தேன். 9,10-ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது நண்பர் கொடுத்த பாரதியார் கவிதைகள் புத்தகம் என்னைத் தீவிரமாகப் பாதித்தது. அன்றைக்குக் கொடுமுடியில் இருந்த நூலகம் மிகச் சிறந்த நூலகம். அங்கே ஜெயகாந்தன் நூல்களை வாசித்திருக்கிறேன். என் தம்பி செல்வராஜ், மீன்வளத் துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிறுவயதிலிருந்தே, வாசிப்பு - விவாதம் என்று அவரும் நானும் நிறைய பேசுவோம். அந்தக் காலத்தில் ஓவியத்திலும் எனக்கு அதீத ஈடுபாடு இருந்தது.

இந்தப் பின்னணியில் கல்லூரிக் காலத்தில் தமிழ் மேல் ஈடுபாடு வரவே, தமிழாசிரியர் வேங்கடாசலத்திடம் பேசினேன். வீட்டில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு என் தந்தைக்குத் தெரியாமலேயே விலங்கியல் பட்டப்படிப்பிலிருந்து தமிழுக்கு மாறி, படித்தும் முடித்தேன். தமிழ் படித்தால் வாழ்க்கையில் சிறப்புற முடியாது என்ற நம்பிக்கை அன்றைக்கு நிலவியதே வீட்டில் எழுந்த எதிர்ப்புக்குக் காரணம். ஆனால், இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றேன். பச்சையப்பன் கல்லூரியில் ‘வள்ளலாரின் மனிதநேயம்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நெறிஞர் (எம்.பில்.) முடித்தேன். வேலூரில் இருந்தபோது பேராசிரியர் தி.கு.நடராஜன் வீட்டுக்குத் தினமும் செல்வேன். அங்குதான் சிறுபத்திரிகைகள், புதுக்கவிதைகள் எல்லாம் எனக்கு அறிமுகமாயின.

1988 செப்டம்பரில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தேன். வேலையும் நாமும் வேறாக இல்லாதபோது வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்பார்கள். சென்னை கிறித்துவக் கல்லூரியை ‘திருவருட்காடு’ என்றே கூறுவேன். அறிவு, கலைகள் சங்கமிக்கும் மையமாக அது திகழ்ந்தது. நான் அங்கு பணிபுரிந்த காலத்தில் டாக்டர் தயானந்தன் (தாவரவியல் துறை), மைக்கேல் லாக்வுட் (தத்துவத் துறை), விஷ்ணு பட் (ஆங்கிலத் துறை), நரசிம்மன் (தாவரவியல் துறை) ஆகியோர் தங்கள் துறை சார்ந்த அறிஞர்களாக இருந்தது மட்டுமின்றி, மற்ற துறைகள் சார்ந்தும் பேரார்வத்தைக் கொண்டிருந்தார்கள். என்னுடைய இன்றைய பணிகள் அனைத்துக்கும் சென்னை கிறித்துவக் கல்லூரியே அடித்தளமாக இருந்துவந்திருக்கிறது.

தமிழ் நவீனக் கவிதையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்திய ‘வனம்’ அமைப்பு, உங்களுடைய ஒருங்கிணைப்பில் கிறித்துவக் கல்லூரியின் தனி அடையாளமாக மாறியது, இல்லையா?

சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிறித்துவக் கல்லூரியில் இருக்கும் செஞ்சந்தன மரத்தடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4 முதல் 7 மணிவரை ‘வனம்’ என்ற பெயரில் கவிதை வாசிப்பை ஏற்பாடு செய்துவந்தோம். பேராசிரியர்கள், மாணவர்கள், கல்விப் புலம் சாராதவர்கள் என சகலரும் கலந்துகொள்ளலாம். அந்த அமைப்புக்கு நிர்வாகிகள் என்று யாரும் கிடையாது. அனைவரும் புல் தரையில்தான் அமர்ந்து கவிதை வாசிப்போம். அதற்கு எதிர்வினையாகப் பல்வேறு புலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும்போது, கவிதை எழுதியவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரு பெருவாய்ப்பு அமைந்தது. ‘வனம்’ என்ற பெயரில் வெளியான முதல் தொகுப்பின் பெயரிலேயே இந்தக் கவிதைக் கூடல் அமைந்துவிட்டது. 13 ஆண்டுகள் தொடர்ந்த ‘வனம்’ கவிதைக் கூடலில் பங்கெடுத்தவர்களின் கவிதைகள் ‘சுபமங்களா’, ‘கண்ணதாசன்’, ‘குமுதம்’, ‘நந்தன்’ ஆகிய இதழ்களில் வெளியாகின. அந்தக் காலகட்டத்தின் முதன்மை இலக்கியவாதிகள் வனத்துக்குத் தொடர்ச்சியாக வருகை தந்திருக்கிறார்கள். அந்தக் கூடலுக்கு வந்திருந்தவர்களில் 25 பேர் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். ‘வன’த்தைப் பின்பற்றி, ‘மருதம்’, ‘கவிமாலை’, ‘தேன்கூடு’, ‘நெய்தல்’ போன்ற பல்வேறு கவிதை அமைப்புகள் கல்லூரிகளில் தொடங்கப்பட்டன.

பாரதி மீதான பற்றில் பாரதிபுத்திரன் என்ற பெயரைச் சூடிக்கொண்ட நீங்கள், பாரதியார் பற்றி நேர்காணல் வடிவில் ‘தம்பி, - நான் ஏது செய்வேனடா?’ என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறீர்கள்…

பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், தலித்தியம் பேசுபவர்கள், தேசியவாதிகள், பெண்ணியவாதிகள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழும் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கேள்வி - பதில் வடிவில் பாரதியை அறிமுகப்படுத்தும் நூல் ‘தம்பி, - நான் ஏது செய்வேனடா?’. பா.இரவிக்குமார் – இரா.பச்சியப்பன் ஆகியோர் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள், நான் பதில் கூறியிருந்தேன். பரலி சு.நெல்லையப்பருக்கு ஜூலை 19, 1915-ல் எழுதிய கடிதத்தில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு வரியை பாரதி எழுதியிருக்கிறான். அந்தக் கடிதத்திலிருந்து பாரதியின் உள்ளத்தை நாம் ‘தரிசிக்க’ முடியும். தமிழ் இனம், மொழி, மக்கள், ஆண் - பெண் உறவு உள்ளிட்டவை எல்லாம் எத்தகைய உன்னத நிலையை எட்ட வேண்டும் என்ற தன்னுடைய கனவை பாரதி அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்துகிறான். அந்தத் தவிப்புகளின் மொத்த வடிவமாக ‘தம்பி! நான் ஏது செய்வேனடா?’ என்று கூற்று வெளிப்படுகிறது. அதற்கு முன்பும் பின்பும் பாரதி குறித்து நிறைய எழுதிவந்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே பாரதி மீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டே போனது. அதனால்தான் பாரதிபுத்திரன் என்ற பெயரில் கவிதைகளை எழுதுகிறேன்.

ஆனால், பணி சார்ந்த உங்கள் தொடக்க கால ஆய்வுகள், உங்களுடைய தனிப்பட்ட ஆர்வத்திலிருந்து மாறுபட்டவையாக இருந்திருக்கின்றனவே?

ஆமாம். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் தொடங்கி மாமல்லபுரம் வரை உள்ள மீனவக் குப்பங்களில் ஆய்வுசெய்து அவர்களின் வழக்காற்றியலை ஆவணப்படுத்தினோம். ஆசிய கிறித்துவ உயர்கல்விக்கான ஒன்றிய வாரியத்தின் ஆதரவுடன் சென்னை கிறித்துவக் கல்லூரி முன்னெடுத்த இந்த ஆய்வு செம்மஞ்சேரி, நெம்மேலிக் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு, கலந்துரையாடல், மீனவர்களுடன் கடலுக்குச் செல்லுதல் போன்ற செயல்பாடுகள் வழியாக நடந்தது. மீன் வலைகள் காயவைக்கும் இடம் சுருக்கப்பட்டது, சொந்தமாக இடமில்லாதது போன்ற பல்வேறு சிக்கல்களால் அவர்கள் தவித்துவருகின்றனர். அனைத்துப் பூர்வகுடிகளும் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை உணர முடிந்தது. தாம்பரம் - அதன் சுற்றுப்புறங்களில் ‘உலகமயமாக்கத்தின் தாக்கம்’ குறித்து ஆய்வுசெய்திருக்கிறோம். உலகமயமாக்கத்தின் நன்மைகளாக சில அம்சங்கள் இருந்தாலும் போரிடாமல், நேரடியாக ஆட்சிபுரியாமல் ஒரு நாட்டின் வளங்களைச் சுரண்டி அந்நாட்டு மக்களுக்கே விற்பதுதான் உலகமயமாக்கத்தில் நடக்கிறது. வேலைவாய்ப்பு உருவாகிறது என்ற தவறான புரிதலால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மக்கள் உணரவில்லை. உலகமயமாக்கத்தின் விளைவால் இன்றைய இளைஞர்களின் தோற்றம், மனநிலை, கல்வி முறைகளில் பேரளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபத்து புரியாமல், தேவையில்லாவிட்டாலும் பெருமைக்காகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். இது எல்லோரையும், எப்போதும் நோயாளியாகவும் கடன்காரராகவும் பதற்றத்திலும் வைத்திருக்கிறது. பணம் மட்டுமே தேவை என்ற மனநிலை, குற்றங்கள் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

பல்லவர் கலை, நாயக்கர் கலை குறித்து ஆய்வுகளின் அடிப்படையில் புதிய கருதுகோள்களுடனும் தமிழகக் கலையின் மேன்மையையும் எடுத்துரைக்கும் உங்களுடைய நூல்கள் புகழ்பெற்றவை…

மாமல்லபுரம் ‘அர்ச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி குறித்து நான் எழுதிய நூல், 13 ஆண்டுகால உழைப்பு. கிறித்துவக் கல்லூரி தாவரவியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் தயானந்தன் மாமல்லபுரத்துக்கு அடிக்கடி அழைத்துச்செல்வார். கடந்த முப்பது ஆண்டுகளில் நானும் மாணவர்களை அழைத்துக்கொண்டு மாமல்லபுரம் சென்றுவந்திருக்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் அந்தச் சிற்பங்களை நெருங்கிப் பார்த்தபோது, அவற்றின் மீதான ஆர்வமும் அவை என்ன சொல்லவருகின்றன என்பது குறித்த கேள்வியும் தொடர் செயல்பாடாக மாறின. அதன் விளைவாகவே அவற்றைக் குறித்து விளக்கும் நூல்களை எழுதினேன். இவற்றில் ‘அர்ச்சுனன் தபசு’ நூல் பரவலான கவனத்தையும் விருதுகளையும் பெற்றது.

‘அர்ச்சுனன் தபசு’ சிற்பம் சித்தரிப்பது இமய மலை இயற்கைக் காட்சி, உயிரினங்கள், தாவரங்களைத்தான். அந்த நூல் எழுதப்பட்டதை ஒட்டி நானும் இயக்குநர் சிவக்குமாரும் இமய மலையின் கோமுக்வரை சென்றிருந்தோம். அந்தச் சிற்பத்தில் பரல் ஆடு (Blue sheep), தேன் பருந்து, மந்தி, அசாமியக் குரங்குகள், பட்டைத் தலை வாத்து ஆகியவற்றை நேரில் பார்த்தபோது வியந்துபோனேன். அந்த நேரத்தில் ஒரு உடும்பு மட்டும் மரத்தில் ஏறினால், அர்ச்சுனன் தபசு சிற்பம் இமயமலையின் பிரதிபலிப்பு என்பது முழுமையடைந்துவிடும் என்று தோன்றியது. அந்த நேரத்தில், சிற்பத்தில் உள்ளதைப் போன்றதொரு உடும்பு மரத்தில் ஏறியதை என்னவென்று சொல்வது? அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் முதன்மையாக இடம்பெற்றிருக்கும் யானையைப் போன்றதொரு உயிர்ப்புள்ள யானைச் சிற்பம் உலகில் வேறெங்கும் கிடையாது. அதேபோல, கிருஷ்ண மண்டபத்தில் இருக்கும் சிற்பத்தில் இடையர் ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பதுபோல் இருக்கிறது. சிற்பத் தொகுதியின் ஒவ்வொரு அம்சமும் அமைதியைப் பிரதிபலிப்பதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. குழலை வாசிப்பதற்கு இடையர் விரல்களை வைத்திருக்கும் முறை அமைதியை வெளிப்படுத்தும் பஞ்சமத்தை ஒட்டியுள்ள பிரதிமத்திம ராகத்தின் அடையாளமாக உள்ளது. இப்படி அன்றைய சிற்பிகள் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தி நுணுக்கமாகச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். அதற்குரிய பல்துறை அறிவுடன் திகழ்ந்திருக்கிறார்கள்.

‘நாயக்கர் கால கலைக் கோட்பாடுகள்’ நூல் எப்படி உருவானது?

பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் சுமார் 6 ஆண்டுகள் விரிவாக ஆய்வுசெய்தேன். அது மிகவும் விரிவான பொருளாக இருந்ததால் என்னுடைய நண்பர்கள் பலரும் அந்த ஆய்வுக்குப் பங்களித்தார்கள். நமக்கு மிகச் சமீபத்திய, பிரிட்டிஷார் தாக்கத்துக்கு முந்தைய நாயக்கர் காலக் கலை குறித்துத் தமிழில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதுவே இந்த ஆய்வைச் செய்ய என்னைத் தூண்டியது. செவ்வியல் - நாட்டுப்புறக் கலைகளின் இணைவாக விஜயநகரப் பேரரசின் சிற்பங்கள், கலைப்படைப்புகள் விளங்குகின்றன. ஆந்திரத்தில் 55 ராமாயணங்கள் இருக்கின்றன. அழகர் கோயில் சுவர்களில் வரையப்பட்டுள்ளது தெலுங்கு ராமாயணங்களுள் ஒன்று என்று கூறப்பட்டுவந்தது. தற்போது அது நாட்டுப்புற ராமாயணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. திருப்புடைமருதூர் ஓவியங்களும்கூட தெலுங்கு நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் வரையப்பட்டவைதான். இன்றைய காமிக்ஸ் வடிவில் கதை சொல்லலே அந்த ஓவியங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

திருப்புடைமருதூர் கோயில் ஓவியங்கள் குறித்த உங்களுடைய பெருநூல் எந்தப் பின்னணியில் உருவானது?

திருப்புடைமருதூர் கோயில் ஐந்து நிலை கோபுரங்களைக் கொண்டது. அங்கு 16-ம் நூற்றாண்டு ஓவியங்கள் உள்ளன. பல நாள் செலவிட்டு அவற்றை ஆவணப்படுத்தினோம், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனின் சொந்த ஊராக இருந்ததால், ஆவணப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர் செய்துகொடுத்திருந்தார். கோயிலின் இரண்டாம் தளம் வரலாற்றுக் காட்சிகள் நிறைந்தது. 2004-லிருந்து 2013 வரையான ஆண்டுகளில் அவற்றை ஆய்வுசெய்தபோது, விஜயநகரத்து அச்சுதேவராயருக்கும் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் இடையில் நடந்த போர் என்று கண்டறிந்தோம். வரலாற்றில் ‘தாமிரபரணிப் போர்’ என்று சுட்டப்படும் இந்தப் போர் ஆரல்வாய்மொழியில் நடந்தது. வர்மாவுக்காகப் போரிட்டவர்களுள் ஒருவர் பரமக்குடி பாளையக்காரர் தும்புச்சி நாயக்கர். அவரைப் பற்றி இந்த நூலில் எழுதியதை அறிந்த அவருடைய வழித்தோன்றல் நேரில் வந்து நன்றி தெரிவித்துவிட்டுப் போனார். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முடநீக்கியல் துறைப் பேராசிரியர் அவர்.

இப்படி நெடிய தொடர்ச்சி கொண்ட நமது கலை மரபின் சிறப்புகளாக எவற்றைச் சொல்லலாம்?

எழுநிலை மாடம், வேயா மாடம் என இயற்கையோடு இயைந்த பெருவீடுகள் அன்றைக்குக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கற்களாலும் காரையாலும் கட்டப்பட்டதால் நம் பண்டைக் கட்டிடங்கள் காலங்களைத் தாண்டி நிற்கவில்லை. அதனால் கட்டிடக்கலை வளர்ச்சி குறித்து முழுமையாக அறிய முடியவில்லை. அதேநேரம் போர், ராணுவம் சார்ந்த கட்டிடங்கள், கோயில் கட்டிடக் கலை மாறுபட்டிருந்ததால் காலத்தைக் கடந்து நின்றன. எத்தனை விதமான கோயில்கள் இருக்கின்றன என்று அப்பர் பாடியிருக்கிறார். சிற்பம், இசை, நாடகம், ஓவியம் போன்றவையும் மிக உன்னத நிலையை எட்டியிருந்திருக்கின்றன. அஜந்தா, நாகர்ஜுனகொண்டா ஓவியங்களிலிருந்து ஊக்கம் பெற்றிருந்தாலும் தங்களுடைய திறமையால் தனித்துவமான கலையை பல்லவர் கால ஓவியர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மகேந்திரவர்ம பல்லவனுக்கு ‘சித்திரக்காரப் புலி’ என்னும் பட்டப் பெயரே உண்டு. சங்க கால மக்கள் ஓவியங்களை ரசித்ததாகப் பரிபாடல் கூறுகிறது. மாமல்லபுரம் சிற்பங்களைப் போன்று இந்தியாவில் வேறெங்குமே பார்க்க முடியாது. மாமல்லபுரம் ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், கொடும்பாளூர் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்ற வரிசையில் திராவிடக் கட்டிடக் கலை, சிற்பக் கலை வளர்ந்து பரவத் தொடங்கியது. இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் இந்தக் கலை தாக்கம் செலுத்தியிருக்கிறது.

அன்றைய சிற்பிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள்?

சிற்பிகள் வெறுமென கற்களை மட்டும் கொத்திக்கொண்டிருந்தவர்கள் என்று எண்ணுவது தவறு. அவர்களுக்கு இதிகாசம் தெரியும், புராணம் தெரியும், புவியியல் தெரியும், தாவரங்கள் தெரியும், விலங்குகள் தெரியும், அவற்றின் உடற்கூறியலும் பண்புகளும்கூடத் தெரியும். இவ்வளவும் தெரிந்த மாமேதைகளாகவே அந்தக் காலச் சிற்பிகள் இருந்திருக்கிறார்கள். இசை பற்றிய அறிவும் நாடகக் கலை குறித்த அறிவும்கூட அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். தங்களுக்கு முந்தைய படைப்பு முயற்சிகளை நேரில் பார்த்து அவர்கள் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். இதற்காக நிறையப் பயணித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாமல்லபுரத்தின் அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், புலிக்குகை தொடங்கி அன்றைய சிற்பங்களை வடித்த சிற்பிகள் சங்க இலக்கியம், அன்றைய மக்களின் வாழ்க்கை, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். இன்றைக்கும் உயிர்ப்புடன் திகழும் சிற்பங்களே அதற்கான முதன்மை சாட்சி.

அந்தக் காலச் சிற்பிகள் குறித்துக் குறிப்புகள் எவையேனும் கிடைத்துள்ளனவா?

‘சார்னோகைட்’ எனப்படும் கடினத் தன்மையுடைய பாறைகளில் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கடினப் பாறைகளில் சிற்பம் வடிப்பது எளிதான காரியமல்ல. பாறைகளைக் குடைந்தும், பாறைகளை உடைத்தும் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். இதற்குப் பல வகையான உளிகள், கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எந்த நவீனக் கருவியும் இல்லாத காலத்தில் எப்படிப் பாறைகளைக் குடையவும் உடைக்கவும் அவர்களால் முடிந்தது? பாறைகளில் துளையிட்டு, அந்தத் துளைகளில் மரக்கட்டைகளைப் பொருத்திவிடுவார்கள். அவற்றின் மேல் நீரை ஊற்றும்போது, அந்தக் கட்டைகள் விரிவடைந்து பாறைகள் விரிந்துகொடுக்கும். பிறகு உடைத்தார்கள். அதேபோல நெருப்பு மூட்டி பாறைகளை வெடிக்கவைத்திருக்கிறார்கள். ஐரோப்பாவைப் போன்று சிற்பிகளின் பெயர்களைப் பதிவுசெய்யும் மரபு நம்மிடையே இல்லை. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தலைமைச் தச்சனின் பெயர் ராஜராஜப் பெருந்தச்சன். அரிய, அற்புதமான கோயிலை வடித்ததால், அந்தத் தச்சனைப் பெருமைப்படுத்தும் விதத்தில், தன்னுடைய பெயரையே பட்டமாகச் சூட்டி ராஜராஜ சோழன் பெருமைப்படுத்தினார். அந்தத் தலைமைத் தச்சரின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. ராஜராஜப் பெருந்தச்சனைப் போலவே மாமல்லபுரம் சிற்பத் தொகுதிகளுக்கும் சில தலைமைத் தச்சர்களே காரணம். அவர்களே இந்தச் சிற்பத் தொகுதிகளின் மூலகர்த்தாவாக இருந்திருப்பார்கள். அவர்களுடைய வழிகாட்டலின் பேரில், சீடர்கள் சிற்பத் தொகுதிகளை வடித்திருப்பார்கள்.

இப்படி பல்லவர், சோழர் காலத்தில் செழித்திருந்த தமிழர் கலை, இலக்கிய மரபு பிறகு தொடராமல் போனதற்கு என்ன காரணம்?

சோழர் காலத்தில் இலக்கியம் பேணப்பட்டது. அரசு, மடம் சார்ந்து படைப்பாளிகள் செயல்பட்டனர்.
10-ம் நூற்றாண்டில் பேரரசுகள் வீழ்ந்ததன் காரணமாகச் செவ்வியல் தன்மைகொண்ட படைப்புகள் குறைந்துபோயின என்று கலை ஆய்வாளர் ஆனந்த குமாரசாமி கூறுகிறார். சிற்றரசர்களால் கலைக்கு ஆதரவளிக்க முடியாமல்போனதே காரணம். மதுரை நாயக்கர்களுக்குத் தமிழ் தெரியாது. அந்த அரசர்களைப் பற்றி எந்தத் தமிழ் இலக்கியமும் இயற்றப்படவில்லை. அந்த அரசர்களைப் பற்றி எந்த இலக்கியப் பதிவுகளும் இல்லை. அரசுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கவில்லை. பாளையக்காரர்களே தமிழ்ப் புலவர்களுக்குப் புரவலர்களாக விளங்கினார்கள். பாளையக்காரர்கள் மேல் சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் எழுதப்பட்டன. இதைப் போன்று வேற்று மொழிக்கு ஆதரவளிக்கும் போக்கும் தமிழ் இலக்கியம் செழிக்காததற்கு முக்கியக் காரணம்.

செழிப்பு மிகுந்த நம்முடைய மரபுக் கலைகளைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகள் இன்றைக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்?

கலை சார்ந்த ஆய்வுகளில் குடவாயில் பாலசுப்பிரமணியன் எனக்கு ஆசான் போன்றவர்; ர.பூங்குன்றன் மிகச் சிறந்த வழிகாட்டி. தமிழ், திராவிடச் சிற்பக் கலை, கட்டிடக் கலை குறித்து இருவரும் நிறைய எழுதியிருக்கிறார்கள். அதேபோல் கலைக்கோவன், செந்தீ நடராசன் உள்ளிட்டோர் இந்தத் துறை சார்ந்து இயங்கிவருபவர்களில் முக்கியமானவர்கள். தொல்லியல் துறையிலும், வெளியிலும் ஆர்வமாகச் சிலர் இயங்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் அறிந்தவர்கள், அதற்குரிய படிப்புகளைப் படித்தவர்களைக் கொண்டு புனரமைப்பு, பராமரிப்புப் பணிகளை அரசு முடுக்கிவிட வேண்டும். அதேநேரம் நமது கலை, கலை மரபின் உன்னதம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும். உலகப் புகழ்பெற்ற கலைச் சின்னங்கள் நம் மண்ணில் இருந்தும், ஆர்வலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் திட்டவட்டமான தகவல்களைத் தரும் ஏற்பாடு இல்லை. அரசு சார்பில் ஆதாரபூர்வமான, அதிகாரபூர்வமான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். ஒரு கலைப் படைப்பைத் தேடி வருபவரை எந்த அடிப்படையும் அற்ற இரண்டாம்தரத் தகவல்களே சென்று சேருகின்றன. நமது கலையின் பெருமையும் முக்கியத்துவமும் உள்ளூர் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். நம்முடைய மரபின் வளத்தைக் குழந்தைகளுக்குக் கடத்தும் விதமான பள்ளிப் பாடங்களை அமைக்க வேண்டும். ஏனென்றால், காலம் கடந்தும் மக்களே கலையை ஆதரிப்பார்கள், புரிந்துகொண்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வார்கள்.

‘இந்து தமிழ்’ தீபாவளி மலர் 2019-ல் இடம் பெற்றுள்ள பேட்டியிலிருந்து...

விலை: ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x