

சுப்பிரமணி இரமேஷ்
தமிழறிஞர்கள்
அ.கா.பெருமாள்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் - 629001.
விலை: ரூ.325
9677778863
நாவலர் சோமசுந்தர பாரதி, ‘பேராசிரியர் பணி சமூக அந்தஸ்துடையது; கற்பிப்பதில் கிடைக்கும் சுகமே தனி’ என்பார். இயல்பில் இவர் வழக்குரைஞர். வருமானம் வரக்கூடிய வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றக் கிளம்பினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு அன்று (1888) முப்பது ரூபாய் சம்பளம். தமிழாசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களைவிடக் குறைவாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்று பேராசிரியர் பணி வருமானம் ஈட்டக்கூடிய பணியாக மட்டுமே பொதுவெளியில் பார்க்கப்படுகிறது. கற்பிப்பதை ரசித்துச்செய்பவர்கள் தற்போது குறைந்துகொண்டே வருகிறார்கள். ஆரோக்கியமான தமிழாய்வுகளைச் செய்த பல்கலைக்கழகங்கள் இன்று பல்வேறு குழுக்களாகப் பிரிந்துகிடக்கின்றன. இலக்கண ஆய்வுகள் காலாவதியாகிவிட்டன. இது இன்றைய நிலை.
அடுத்த தலைமுறை ஆசிரியர்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் எடுத்த தமிழ்ப் பேராசிரியர்களை, தம்முடைய கைப்பொருளை இழந்து தமிழ்ப் பணியாற்றிய பலருடைய மகத்தான பணிகளை இன்றைய காலகட்டத்தில் நம் நினைவில் நிறுத்த வேண்டியதும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமானதாக இருக்கிறது. இப்படியான தமிழறிஞர்கள் நாற்பது பேரைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கிறது அ.கா.பெருமாள் எழுதியுள்ள ‘தமிழறிஞர்கள்’ நூல். தமிழறிஞர்கள் பலர் குறித்தும் அறிந்துகொள்ளும் பொருட்டு, தேடி வாசிக்கும் பழக்கமுடைய எனக்கு சே.ப.நரசிம்மலு நாயுடு, ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை, ஆண்டி சுப்பிரமணியம், வ.சுப்பையா பிள்ளை ஆகியோர் இந்நூலின் வழியாகத்தான் அறிமுகமாகிறார்கள்.
வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் செய்த தமிழ்ப் பணிகள் அளவில்லாதவை. தமிழறிஞர்கள் பலர் வழக்குரைஞர்களாக (ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழவேள் உமாமகேசுவரனார், எஸ்.வையாபுரிப் பிள்ளை) இருந்தவர்கள். புதுமைப்பித்தன் ‘சாபவிமோசனம்’ என்ற சிறுகதையை எழுதுவதற்குக் காரணமாக இருந்தது ‘அகலிகை வெண்பா’ என்ற நூல்; இந்நூலை எழுதிய வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் ஒரு கால்நடை மருத்துவர். 1300 ஆண்டுகளுக்கு வானியல் பஞ்சாங்கத்தை உருவாக்கியவரும், கோள்களின் அடிப்படையில் இலக்கிய நூல்களின் காலத்தைக் கணித்தவருமான எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தவர். ‘கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்’ என்ற நூலை எழுதிய பா.வே.மாணிக்க நாயக்கர் ஒரு பொறியியல் அறிஞர். மேட்டூர் அணைத்திட்டத்துக்கு வரைபடம் தயாரித்தவர். ‘சங்கம் இல்லை’ என்று ஆதாரபூர்வமான கருத்துகளை எடுத்துரைத்த கே.என்.சிவராஜ பிள்ளை காவல் துறையில் பணியாற்றியவர். இவர்களெல்லாம் செய்த மகத்தான பணிகளை இந்நூல் கோடிகாட்டுகிறது. இன்று லகரங்களில் ஊதியம் பெற்றுக்கொண்டு வகுப்பறைக்குக்கூடச் செல்லாத ஆசிரியப் பெருமக்கள், இந்தத் தமிழறிஞர்களின் பணியை எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழறிஞர்களின் அறிமுகமாக மட்டும் இந்நூல் அமையவில்லை; பல அரிய தகவல்களின் திரட்டாகவும் இருக்கிறது. ‘மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்ற தகவலை சே.ப.நரசிம்மலு நாயுடு தன்னுடைய நூலில் (ஆரியர் திவ்ய தேச யாத்திரை) குறிப்பிட்டிருக்கிறார். ஆதிசங்கரர், திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்ட தகவலை முதன்முதலில் எழுதியவர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி). சென்னை ராஜதானிக் கல்லூரியில் (மாநிலக் கல்லூரி) முதன்முதலில் எம்.ஏ. தமிழ் பட்டம் பெற்றவர் திருமணம் செல்வகேசவராய முதலியார்; பல நீதி நூல்களை (ஆசாரக்கோவை, அறநெறிச்சாரம், பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி) இவர் பதிப்பித்துள்ளார். ‘தமிழுக்குக் கதி கம்பனும் திருவள்ளுவனும்’ என்று கூறியவர் திருமணம் செல்வகேசவராய முதலியார் என்றுதான் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் திரும்பத் திரும்ப எழுதிவருகின்றனர். சி.வை.தாமோதரம் பிள்ளை கலித்தொகையைப் பதிப்பித்தவராக மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் பதிப்பித்த தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள் உரை போன்ற பதிப்புகள் குறித்துப் பேசுவதில்லை. மு.இராகவையங்காரின் அத்தை மகன்தான் ரா.இராகவையங்கார்; கே.என்.சிவராஜப் பிள்ளையின் அத்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நூல்வழி மற்றொரு சுவாரஸ்யமான தகவலைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தமிழறிஞர்கள் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்திருக்கிறார்கள். சி.வை.தா.வுக்கு மூன்று மனைவியர்; பத்து பிள்ளைகள். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாருக்கு இரண்டு மனைவியர்; ஆறு பிள்ளைகள். எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளைக்கு இரண்டு மனைவியர்; பதினாறு பிள்ளைகள் என்று இப்பட்டியல் நீள்கிறது. பதினைந்து வயதில் முதல் திருமணம் செய்த நாவலர் சோமசுந்தர பாரதியார்,
48-ம் வயதில் மறுதிருமணம் செய்திருக்கிறார். இதுபோன்ற தகவல்கள் புனைவை வாசிக்கும் மனநிலையை உருவாக்குகின்றன. இத்தன்மைக்கு அ.கா.பெருமாளின் மொழிநடைக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. தமிழறிஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றனர். சமூக மறுகட்டமைப்புக்கான பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர். விடுபட்டுள்ள தமிழறிஞர்கள் குறித்தும் அ.கா.பெருமாள் எழுத வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு இந்நூல் முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம்.
- சுப்பிரமணி இரமேஷ், எழுத்தாளர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com