

வீ.பா.கணேசன்
இசை, நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளின் தனித்துவமே அவை பார்வையாளரின் எண்ணப் பிரதிபலிப்பை உடனடியாக வெளிக்கொண்டுவருகின்றன என்பதுதான். அதுவும் தங்கள் ஆசைகளை, நிராசைகளை, விரக்தியை, எதிர்பார்ப்புகளைக் கண்ணெதிரே காண்கையில் பார்வையாளர்கள் எத்தகைய உணர்வை வெளிப்படுத்துவார்கள் என்பதை நடந்துமுடிந்த தென்னிந்திய மக்கள் நாடக விழா நிரூபித்துக்காட்டியது. சென்னை கேரள சமாஜத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் இணைந்து அக்டோபர் 2 முதல் 6 வரை சென்னையில் நடத்திய நாடக விழா மாபெரும் வெற்றிக் கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை இந்த ஆண்டு விழா கொடுத்திருக்கிறது.
கிரீஷ் கார்னாட் பெயர் சூட்டப்பட்டிருந்த சென்னை கேரள சமாஜம் அரங்கை தமிழ்நாடு அரசின் கலை-பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் திறந்துவைத்து விழாவைத் தொடங்கிவைத்தார். “அங்கீகரிக்கப்பட்ட நாடகக் குழுக்களுக்கு ஒத்திகை பார்க்க கர்நாடகத்தில் ரூ.6000-க்கு அரங்கம் தருகிறார்கள். அதேபோன்று சென்னையிலும் அரங்கம் வழங்க வேண்டும்” என்று விழாக்குழு செயலாளர் பிரளயன் கோரிக்கை எழுப்பியதும், “நாடகக் குழுக்களை முறைப்படுத்தி பகலில் ஒத்திகை பார்க்க கர்நாடகத்தைவிடக் குறைவாக அல்லது அதற்கு நிகரான கட்டணத்தில் வழங்கப்படும்” என்று பலத்த கரவொலிக்கிடையே உறுதியளித்தார் அமைச்சர் பாண்டியராஜன். மனோரமா, ஞாநி, ந.முத்துசாமி, முகில் ஆகிய நாடக ஆளுமைகளின் பெயரில் அமைந்த அரங்குகளைத் கலைஞர்கள் சச்சு, அகஸ்டோ, வேல ராமமூர்த்தி, மு.நடேஷ் ஆகியோர் திறந்துவைத்தனர். நாடக ஆக்கங்கள் குறித்த மோகன்தாஸ் வடகராவின் ஆவணப்படக் காட்சியை நாடக நடிகரும் திரைக்கலைஞருமான நாசர் திறந்துவைத்தார்.
தொடக்க விழாவில் வரவேற்றுப் பேசிய விழாக் குழு செயலாளர் பிரளயன், “நாடகக் குழுக்களிடையே ஒரு வலைப்பின்னலை உருவாக்கவே தென்னிந்திய நாடக விழா இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டார். விழாக் குழுத் தலைவர் ரோகிணி, “குடும்பத்தோடு வந்து நாடக விழாவில் பங்கேற்றனர். கலை யாருக்கானதோ அவர்களிடையே நிகழ்த்துகிறோம் என்ற பெருமை எமக்குள்ளது” என்றார். தொடக்கவுரை ஆற்றிய இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, “எதிரே நின்று உறவாடும் நாடகம் கேள்வி கேட்கிறது; தவறைச் சுட்டிக்காட்டுகிறது” என்றார். அறிவொளி இயக்கம் நடத்திய நாடகங்கள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பா.ரஞ்சித். நாசர் தனது வாழ்த்துரையில், “கூத்தையும் சதிரையும் படிப்படியாக வளர்த்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்சென்றதைப் போல நவீன நாடகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்செல்ல வேண்டும்” என்றார்.
கவிஞர் மனுஷ்ய புத்திரன், “பிற்போக்குக் கருத்துகளை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்க்கும்போது அதற்கு மாற்றானதை ஏன் கொண்டுசெல்ல முடியவில்லை என்று சிந்திக்க வேண்டும்” என்றார். தென்னிந்திய என்பதற்கு பதிலாக ‘திராவிட நாடக விழா’ என்றே இதை அழைக்கலாம் என்றும் கூறினார். தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் பேசுகையில் ஒரு சரியான கேள்வியைத் திசைதிருப்பலின்றி சமூகத்தின் காதில் விழவைப்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது. இத்தருணத்தில் நாடகத்தின் வேலை வலுவோடு தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா தனது உரையில், “கலை இலக்கியம் அதிகாரத்தை நோக்கி சமரசமின்றி உண்மையைப் பேசுகிறது” என்றார்.
‘நாடகம்-எதிர்ப்பு-ஜனநாயகம்’ என்ற தலைப்பில் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தலைமையில் நாடக வித்தகர்கள் பிரேம் பிரசாத் (கேரளா), விக்ரம் விசாஜி (கர்நாடகா) ரத்ன சேகர் ரெட்டி (தெலுங்கானா) பசுபதி, ஹன்ஸ் கவுசிக் (சென்னை), கிருஷ்ணா தேவநந்தன் (புதுச்சேரி) ஆகியோர் நாடகங்கள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்கள் ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்குவதை எடுத்துரைத்தது முக்கியமான அமர்வாக இருந்தது. தனியாள் நிகழ்வாக திரைக்கலைஞர் ரோகிணி, காஷ்மீர் சிறுமி சோஃபியாவின் மனவெழுச்சிகளைத் திறம்பட வெளிப்படுத்தினார். ‘ஜோக்கர்’ திரைப்பட நாயகன் குரு சோமசுந்தரம், நாடகத்தின் அவசியம் மற்றும் இன்றைய திரைப்பட உலகம் குறித்து வில்லுப்பாட்டு நிகழ்த்தி சிரிப்பலைகளை ஏற்படுத்தினார்.
நிறைவு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன், ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, ராஜேஷ், ரோகிணி, பாரதி மணி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, ச.செந்தில்நாதன், சுந்தரவள்ளி, வீ.பா.கணேசன் ஆகியோர் இந்தக் கலைவடிவத்தைப் பரவலாக எடுத்துச்சென்று பன்முகத் தன்மையின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். தமிழகம், புதுச்சேரியுடன் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான நாடகக் கலைஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பெருந்திரளான மக்கள் கூட்டம் பங்குகொண்டதோடு கலந்துரையாடலிலும் உற்சாகமாக அவர்கள் பங்கேற்றது கலைஞர்களிடம் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. கேரள சமாஜம் தலைவர் பி.கே.என்.பணிக்கர், எதிர்காலத்திலும் இத்தகைய முயற்சிகளுக்குக் கைகோக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னது விழாவின் வெற்றியில் உதிர்ந்த சொற்கள்தான்.
- வீ.பா.கணேசன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு : vbganesan@gmail.com