Published : 20 Oct 2019 10:30 AM
Last Updated : 20 Oct 2019 10:30 AM

பூனை திரும்பி வந்தது எப்படி?

ஹாருகி முராகாமி

நாங்கள் சுகுகவாவில் வாழ்ந்துவந்தபோது ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒருநாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டுபோய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடம் உள்ளதுதான். அது தெருவிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கலாம்; கர்ப்பமாக இருந்து அதன் குட்டிகளையும் பராமரிக்க இயலாதென்று கருதியிருக்கலாம். இந்தப் புள்ளியில் எனது நினைவு அத்தனை துல்லியமாக இல்லை. பூனைகளைக் கொண்டுபோய் விடுவது என்பது வழக்கமானதாகவே இருந்தது; அதற்காக யாரும் உங்களை விமர்சிக்கவும் போவதில்லை. பூனைகளின் கருப்பையை நீக்கும் யோசனையெல்லாம் யாருக்கும் உதிக்கவேயில்லை. நான் அச்சமயத்தில் நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப வகுப்புகளில் இருந்தேன். 1955-ம் ஆண்டாகவோ அதற்கு சற்றுப் பின்னரோ இருக்கலாம் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகே அமெரிக்க விமானங்களால் குண்டுபோடப்பட்ட ஒரு சிதிலமான வங்கிக் கட்டிடம் இருந்தது - போரின் அப்பட்டமான வடுக்களைக் கொண்ட சில கட்டிடங்களில் ஒன்று.
என் அப்பாவும் நானும் அந்தக் கோடை நாள் மதியப் பொழுதில் பூனையை விடுவதற்காகக் கடற்கரைக்குப் போகத் தயாரானோம். அப்பா, சைக்கிள் ஓட்ட, நான் பூனை இருந்த பெட்டியை மடியில் வைத்தபடி பின்னால் அமர்ந்திருந்தேன். நாங்கள் சுகுகவா நதியின் வழியாகப் பயணித்து, கொரோயின் கடற்கரைக்கு வந்துசேர்ந்து, அங்கிருந்த மரங்களுக்கு நடுவே பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் வீட்டிலிருந்து கடற்கரை இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும்.

அந்தப் பூனைக்காக வருத்தப்பட்டபடி, ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும் என்று ஆறுதலாகி வீட்டின் முன்னர் இறங்கினோம். முன்கதவைத் திறந்தபோது நாங்கள் விட்டுவிட்டு வந்த பூனை எங்களைத் தனது சினேகமான மியாவுடன் வாலை விறைத்துக்கொண்டு வரவேற்றது. அந்தப் பூனை எப்படி வீட்டுக்கு வந்ததென்று தெரியவேயில்லை. நாங்கள் சைக்கிளில்தான் வந்தோம். என் அப்பாவும் ஆச்சரியப்பட்டுப்போனார். சிறிது நேரம் நாங்கள் இரண்டு பேரும் அங்கே பேசாமல் நின்றிருந்தோம். வெறும் விந்தையைத் தெரிவித்த என் அப்பாவின் முகத்தில் பெருமை படர்ந்து இறுதியில் நிம்மதியாக மாறியது. திரும்பவும் அந்தப் பூனை எங்களது செல்லமாக மாறிவிட்டது. எங்கள் வீட்டில் பூனைகள் இருந்தன. அவற்றை நாங்கள் விரும்பவும் செய்தோம். எனக்குச் சகோதரர்களோ சகோதரிகளோ கிடையாது. பூனையுடன் தாழ்வாரத்தில் சூரியவெளிச்சத்தோடு அமர்ந்திருப்பதை மிகவும் விரும்பினேன். அப்படியிருக்கும் நிலையில், நாங்கள் ஏன் பூனையைக் கடற்கரைக்குக் கொண்டுபோய் விட்டுவிட நினைத்தோம்? நான் ஏன் அதை எதிர்க்கவில்லை? இந்தக் கேள்விகளோடு சேர்ந்து அந்தப் பூனை எப்படி எங்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்ததென்ற கேள்விக்கும் இன்னும் பதில்களே இல்லை.

தமிழில்: ஷங்கர்

‘தி நியூயார்க்கர்’ இதழில், ஹாருகி முராகமி தன் தந்தையைப் பற்றி எழுதியிருக்கும் ‘அபாண்டனிங் எ கேட்’ நினைவுக் கட்டுரையிலிருந்து சிறு பகுதி...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x