Published : 20 Oct 2019 10:28 AM
Last Updated : 20 Oct 2019 10:28 AM

வாசிப்பிலும் எழுத்திலும் இயற்கையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!: என்.ஸ்ரீராம் பேட்டி

த.ராஜன்

கொங்குவெளி நிலக் காட்சிகளின் துல்லியமான விவரணைகளோடு தாராபுர சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மனிதர்களைத் தன் படைப்புகளில் உலவவிட்டவர் என்.ஸ்ரீராம்.

தற்போது ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் பணிபுரிந்துவரும் இவரது முப்பதுச் சொச்சம் சிறுகதைகளும் பதின்மூன்று குறுநாவல்களும் ஒரு நாவலும் ‘தோழமை’ பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பல அரிதான புத்தகங்களும், பல ஆண்டுகளாகச் சேகரித்துவரும் இதழ்களும் நிறைந்திருக்கும் ஸ்ரீராமின் அறையில் ஒரு ஞாயிறு காலையில் சந்தித்தேன். வெவ்வேறு செய்தித்தாள்களில், இதழ்களில் வெளியான கத்தரித்து வைத்திருக்கும் விநோதமான விஷயங்களும், எங்கெங்கோ சேகரித்த சிறுசிறு குறிப்புகளும் கதைகளாவதற்காக அவரது அறையில் காத்துக்கொண்டிருந்தன. அவருடன் உரையாடியதிலிருந்து...

கடவுள், பேய், பூஜை, சடங்கு, முன்ஜென்மம், செய்வினை போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களும், அவர்களது நம்பிக்கைகளும்தான் உங்களது பெரும்பாலான கதைகள். இதையெல்லாம் கதைகளாக்க நினைத்தது ஏன்?

எங்களது கொங்கு மண்டலப் பகுதிகளின் தொன்மக் கதைகள், வழமையான சடங்குகள், கோயில் சாங்கியங்களெல்லாம் என்னை ஈர்ப்பவையாக இருந்தன. திருவேலைக்காரி, முனி விரட்டுபவர், கொம்பூதுபவர் போன்ற தனித்தன்மையான சனங்களின் வாழ்க்கையெல்லாம் எழுதப்படவில்லை என்று தோன்றியது. அப்படித்தான் அவர்களை எழுதத் தொடங்கினேன். என்னைப் பொறுத்தவரை, மூடநம்பிக்கை என்ற பெயரில் இந்த நம்பிக்கைகளையெல்லாம் புறக்கணித்துவிட முடியாது. அதேவேளையில், எழுத்தாளனாக நான் என் கதைகளில் பேசுவதும் கிடையாது. பாத்திரங்களுக்கு நியாயமாக, அவை நினைப்பதையும் பேசுவதையும்தான் எழுதுகிறேன்.

இந்த நம்பிக்கைகளை நீங்கள் உத்தியாகப் பயன்படுத்தவில்லை. மாறாக, இதன்வழி வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்வதில்தான் உங்கள் அக்கறை இருக்கிறது இல்லையா?

என் கதை மாந்தர்கள் நான்கு விதமான நம்பிக்கைகளில் இயங்குகிறார்கள். முதலாவதாக, இறை நம்பிக்கை - இறைவன் மீது நம்பிக்கை கொண்டு கோயில் சார்ந்து இயங்குவது. இரண்டாவதாக, இயற்கை - எங்கள் ஊரில் ஒரு முதியவர் இருந்தார். உடம்பு சரியில்லை என்றால் காலையில் எழுந்து சூரியனைத் திட்டுவார். மரங்களை அம்மனாகப் பாவித்துக் கும்பிடுவார். இப்போது கிரிவலம் சுற்றிவருவதைக்கூட இயற்கை சார்ந்ததாகவே நான் பார்க்கிறேன். அடுத்தது, இசை - காவடிப் பாடல்களும், தங்கள் வாழ்க்கைப்பாட்டை இட்டுக்கட்டிப் பாடுவதும், பெண்களுக்கு ஒப்பாரிப் பாடல்களும் அவர்களுக்கான வடிகாலாக இருக்கின்றன. நான்காவதாக, இலக்கியம் - இரவுகளில் தொண்ணூறுகள் வரை சில வீடுகளில் பலர் ஒன்றுகூடி ராமாயணமும் மகாபாரதமும் வாசிக்கும் வழக்கம் இருந்தது. இதிகாசங்கள் படிப்பதை இன்றும்கூட வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இறைவன், இயற்கை, இசை, இலக்கியம் - இந்த நம்பிக்கைகளோடு வாழ்பவர்களைத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இப்படியான நம்பிக்கைகளெல்லாம் சமகாலத்தில் என்னவாக இருப்பதாக நினைக்கிறீர்கள்? அழிந்து வருவதாகத் தோன்றுவதுண்டா?

நவீனக் கருவிகளைக் கையில் வைத்திருக்கிறோம். உலக விஷயங்களை ஒரு நொடியில் தரவிறக்கிக்கொள்ள முடிகிறது. ஆனால், இப்போதும் எல்லோரது மனதின் அடியாழத்திலும் இந்த நம்பிக்கைகளெல்லாம் புதைந்துபோயிருக்கின்றன. நவீன இருசக்கர வாகனம் வாங்குபவன்கூட எலுமிச்சம்பழத்தை நசுக்கிக்கொண்டு முதல் பயணம் செல்கிறான். தொடர்ந்து விபத்து ஏற்பட்டால் பாடிகாட் முனீஸ்வரனைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறான். ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் முதிர்கன்னர்கள் தங்களுக்குப் பெண் கிடைக்காததால் ஊருக்கு விமானம் ஏறி வந்து, அண்ணமார் கோயிலில் உடுக்கைப் பாட்டு கேட்கிறார்கள். உடுக்கைப் பாட்டு கேட்டால் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம். ஆணித்தரமாக எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஒருவரால் வாழ முடிவதில்லை.

ஒரு சமூகத்துக்கு இந்த நம்பிக்கைகள் எவ்வளவு தேவையாக இருக்கின்றன?

கிராமங்களில் நீங்கள் அலாதியாகப் பயணித்தீர்கள் என்றால், இப்படியான நம்பிக்கைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நம்பிக்கைகள் எல்லாமே ஐதீகம் சார்ந்தவை. தனிநபர்கள் பின்பற்றுவதற்கு இதுபோன்ற நம்பிக்கைகள் தேவையாகவே இருக்கின்றன. சென்னை நகரின் பரபரப்பான அண்ணா நகரிலுள்ள ஒரு அம்மன் கோயிலில் இன்றும் சாமியாடுகிறார்கள். நவீன அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழும் ஒரு மெத்தப் படித்த பெண் அருள் வந்து சாமியாடுகிறார். இதில் எழும் பெரும் புதிரான கேள்வியைத்தான் என் கதைகள் எழுப்புவதாக நினைக்கிறேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிக்கிறீர்கள். உங்கள் எழுத்துப் பயணம் உத்வேகம் பெறுவதும்கூட சென்னை வந்த பிறகுதான். ஆனால், உங்கள் படைப்புகளுக்குள் நகரம் ஏன் வரவேயில்லை?

தோட்டத்துப் பனையோலைக் கொட்டகைக்குள் சித்தர்போல வாழ்ந்த என் அப்புச்சி இயற்கையோடே இருந்தவர். ‘ஆரியமாலா’, ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘மதுரைவீரன்’, ராமாயண-பாரதக் கதைகள் என ஆயிரமாயிரம் கதைகளை எனக்குச் சொல்லியிருக்கிறார். மயில்ராவணனெல்லாம் எனக்குள் பெரும் பிரம்மிப்பாக இன்றும் இருக்கிறான். மூலத்தில் இல்லாத, ஆனால் பெரும் கற்பனைக்கு இடம் தரும் விதமாக அவர் கூறிய தொன்மக் கதைகள் என்னை வசீகரித்தன. ‘ஆத்தி மரத்தில் இடி இறங்காது’ என்று அவர் சொன்ன கதையைக் கேட்டு மழை நாளில் ஆத்தி மரத்தைத் தேடி அலைந்திருக்கிறேன். மஞ்சி தட்டிக் கயிறு திரிக்கும் கற்றாழை சூழ்ந்த ஏரிக்கு அவரோடு சென்று உடும்பு, முயல், குருவி, கீரி, பாம்புகளையெல்லாம் பார்த்திருக்கிறேன். பல வகை மரங்கள், செடிகளின் பெயர் எனக்குத் தெரியும். சிறு வயதில் என்னை நவீனமாகவே வளர்த்தினார்கள் என்றாலும், எனது வாழ்வில் பெரும்பாலான நாட்கள் நகரம் சார்ந்தே இயங்கியிருக்கிறேன் என்றாலும், எனது நகர வாழ்க்கையை எழுத எனக்கு ஒன்றுமே இல்லாததுபோலத் தோன்றுகிறது. நான் இங்கே இயற்கையோடு எந்தத் தொடர்பும் இல்லாத சாதாரண, சுவாரஸ்யமற்றுக் கடக்கும் தருணங்களைக் கொண்ட வாழ்க்கையைத்தானே வாழ்கிறேன். என்னைப் போலத் தான் ஒரு கோடி பேர் வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. கல் சிலம்பக்காரரை, தேர்த் தச்சரை, நதிப்பிரவாகப் பரிசலோட்டியை இப்பெருநகரத்தில் நான் எங்கு போய்த் தேடுவேன்? ஆக, இயற்கையோடு எனக்கு இருந்த பரிச்சயத்தையும், என்னை வசீகரித்த தொன்மக் கதைகளையும், என் இளம் பிராயத்தில் எங்கள் ஊரில் வசித்த ஒவ்வொரு சனங்களின் வாழ்வையும்தான் இன்னும் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

பால்யகால நினைவுகளையும், கொங்குவெளி மனிதர் களையும் தாண்டி இந்த நகரத்தை எப்போது எழுதுவீர்கள்?

கொங்குவெளிகளும் சனங்களும் எப்போது எனக்கு அயர்ச்சியூட்டுகிறதோ அப்போது நகரத்தை எழுத ஆரம்பிப்பேன். சென்னையில் எட்டாம் பிறை அன்று என்னால் நிலவொளியைப் பார்க்க முடியவில்லை. முழுக்கவும் விளக்குகளின் ஒளியாக இருக்கிறது. நிலவொளிதான் என்னை வசீகரிக்கிறது. மின்விளக்குகளின் வெளிச்சம் எனக்குப் படைப்பூக்கம் தருவதாக இல்லை. கிராமங்களின் ஏகாந்த வெளியில் கரிக்குருவியும் பனங்காடையும் கத்திக்கொண்டே சண்டை கட்டிக்கொண்டு, பொந்துள்ள பனைமரத்தில் போய் உட்காருவதை அவ்வழியே செல்லும் எனது பாத்திரங்கள் பார்க்கின்றன. எழுதுவதற்கான ஒரு சப்தத்தை அது கொடுக்கிறது. இதை எழுதுவது எனக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது.

உங்கள் படைப்புகளில் எண்ணற்ற விளிம்புநிலை மனிதர்கள் வருகிறார்கள். சமூக அமைப்பில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விமர்சனமாக அல்லாமல், வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்தரிப்பதாகத்தான் உங்களது எழுத்து முறை இருக்கிறது. நீங்கள் சார்பு ஏதும் எடுக்காததால் உங்கள் எழுத்துகளைச் சாதிய ஆதரவு கொண்டவையாக வாசிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஏன் நீங்கள் நிலைப்பாடு ஏதும் எடுப்பதில்லை?

பாத்திரத்தின் பார்வையிலிருந்தே எனது கதைகளை நகர்த்துகிறேன். எனது எந்தக் கதைகளிலுமே எழுத்தாளனுக்கு இடம் இல்லை. நான் இதைத் திட்டமிட்டே வகுத்துக்கொண்டதுதான். எழுத்தாளனாக நான் பேசினால் எனது சாதியாலும் பின்புலத்தாலும் ஒரு சார்பாகப் போகக்கூடும். எனது ஊர், வீடு, சாதி இவையெல்லாம் எனது எழுத்தில் சிறு அகங்காரத்தை நிச்சயம் கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை வாசிக்க வாசிக்க, எழுத எழுத எனது அகங்காரமெல்லாம் அழிந்து நானில்லாமல் அந்தரவெளியில் மிதக்க வேண்டும்போல் தோன்றும். இயற்கை எனக்குப் பெரிதாகத் தெரிகிறது. எழுதும்போது ஓரிடத்தில் இயற்கையாகவே நான் கரைந்துபோக வேண்டும். எனது வாசிப்பிலும் எழுத்திலும் இயற்கையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி இயற்கையைத் தேட வேண்டும் என்றால், புனைவில் எழுத்தாளன் எங்குமே பேசக் கூடாது என்று நினைக்கிறேன்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x