Published : 20 Oct 2019 08:09 am

Updated : 20 Oct 2019 08:09 am

 

Published : 20 Oct 2019 08:09 AM
Last Updated : 20 Oct 2019 08:09 AM

150 கலைஞர்களின் `மகாத்மா நிருத்யாஞ்சலி’

mahatma-niruthyanjali

யுகன்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாடே கொண் டாடும் வேளையில், 150 நடன மணிகளைக் கொண்டு `மகாத்மா நிருத்யாஞ்சலி’ நிகழ்ச்சியை மும்பை ஷண்முகானந்தா சபாவின் ஆதரவோடு சமீபத்தில் மும்பை ஷண்முகானந்தா அரங்கில் நடத்தி யது நாட்டிய குரு கே.கல்யாண சுந்தரத்தின் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலாமந்திர்.


மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி யின் முக்கிய தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் நாட்டிய குரு கே.கல்யாணசுந்தரம்.

காந்திக்கு விருப்பமான பாடல்

காந்தியடிகளின் லட்சியங்களை அவருக்குப் பிடித்த பாடல்கள் மூலமாக வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். காந்தி தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அஹிம்சை, சுதேசி இயக்கம், வாய்மை போன்ற கருத்து களை வெளிப்படுத்துகிற, அவரால் அதிகம் விரும்பப்பட்ட பாடல்களுக் கேற்ப நடனத்தை வடிவமைத்து எங்களது மாணவிகளைக் கொண்டு இந்த `மகாத்மா நிருத்யாஞ்சலி’யை நடத்தினோம்.

சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடி களால் பாடப்பட்டு வந்த கணேச ஸ்துதி, சரஸ்வதி ஸ்துதி ஆகிய வற்றையும் நடனத்துக்கும் பயன் படுத்தினோம். தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, சம்ஸ்கிருதம், வங்காள மொழிகளில் எழுதப்பட்ட பாடல்களை இந்த நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தினோம்.

காந்தியை சந்தித்த பிறகு பாரதி பாடிய பாடல் `வாழ்க நீ எம்மான்’. இதற்கு உழவின் பெருமையை விளக்கும் காட்சிகள் திரையில் ஒளிர, மேடையில் குழந்தைகள் நடனமாடினர்.

ராமரை சத்தியத்தின் உருவமா கவே பார்த்தார் காந்தி. ராமரின் குணநலன்களை ` ராமச்சந்திர கிருபாளு’ ராமர் ஸ்துதிப் பாடலில் துளசிதாசர் அற்புதமாக விளக்கி இருப்பார். சிவதனுசு வில்லை வளைத்து ராமர், சீதாபிராட்டியை மணம்புரியும் காட்சிகளை இந்தப் பாடலுக்காக ராகமாலிகையில் அலங்காரமாக அரங்கேற்றினோம்.

காந்திக்கு தாகூர் பாடிய பாடல்

காந்திக்கு மிகவும் பிடித்தமான `ஹரி தும் ஹரோ’ மீரா பஜன், சந்த் துக்காராமின் பாடலுக்கும் குழந்தைகள் நடனமாடினர். எர வாடா சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த காந்திக் காக அங்கேயே சென்று தாகூர் பாடிய வங்காள மொழிப் பாடலுக் கும் நடனம் அமைத்திருந்தோம்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய `ஆடு ராட்டே’, நரசிங்க மேத்தாவின் `வைஷ்ணவ ஜனதோ’, `ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடல்களும் இடம்பெற்றன.

பாடல் காட்சிகளை விளக்கும் திரைக்காட்சிகள் மற்றும் அரங்க நிர் மாணத்தில் பங்களித்த சங்கீதா ராகவன், ஒவ்வொரு நடனத்துக்கும் முன்பாக அதை ஒட்டிய வரலாற்று நிகழ்வை தொகுத்துச் சொன்ன கீதா கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகாத்மா காந்தியின் மகள்வழிப் பேரன் டாக்டர் ஆனந்த் கோஹானி, “நம் எல்லோரிடமும் காந்தியின் அம்சம் சிறிதளவாவது இருக்கும். சிறிதளவு இருக்கும் அம்சத்தை வளர்த்தெடுப்பதே நாம் காந்திக்குச் செய்யும் நன்றிக் கடனாக இருக் கும்’’ என்று பேசியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

இவ்வாறு நாட்டிய குரு கே.கல்யாணசுந்தரம் கூறினார்.


Mahatma niruthyanjaliமகாத்மா காந்திதாகூர் பாடிய பாடல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x