Published : 19 Oct 2019 09:18 AM
Last Updated : 19 Oct 2019 09:18 AM

நூல்நோக்கு: தேசபக்தனின் நவசக்தி

திரு.வி.க தமிழ் இதழியலின் முன்னோடி
அ.பிச்சை
காந்தி நினைவு அருங்காட்சியகம்
மதுரை - 625020
விலை: ரூ.100
0452-2531060

பத்திரிகையாளரும் ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலாசிரியருமான அ.இராமசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பேராசிரியர் அ.பிச்சை ஆற்றிய ஆய்வுச் சொற்பொழிவின் நூல்வடிவம் இது. தமிழறிஞரும் தொழிற்சங்க முன்னோடியுமான திரு.வி.க.வின் இதழியல் பங்களிப்பை விரிவாக எடுத்துரைக்கிறது. தமிழாசிரியர் பணியை விடுத்து, ‘தேசபக்தன்’ நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த திரு.வி.க., அதைத் தொடர்ந்து ‘நவசக்தி’ வார இதழைத் தொடங்கி நடத்தினார். இதழியல் துறையில் தமிழ் எட்டியிருக்கும் உயரங்களுக்கு முன்னோடியாக இருந்தவர் அவர். விடுதலைப் போராட்ட உணர்ச்சியை ஊட்டிவளர்த்த ‘தேசபக்தன்’, மற்றொருபக்கம் நீதிக்கட்சியோடு சூடான விவாதங்களையும் நடத்திக்கொண்டிருந்தான். சமூகச் சீர்திருத்தம், பெண்கள் நலன், தமிழ்மொழியின் வளர்ச்சி, சமதர்ம சன்மார்க்கம் ஆகியவற்றில் அக்கறை காட்டியது ‘நவசக்தி’.

- புவி

புயல் அரசியல்

கஜாப் புயலும் காவிரி டெல்டாவும்
வறீதையா கான்ஸ்தந்தின்
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை-18.
044-24332424
விலை: ரூ.90

பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் இதுவரை கடல் சார்ந்த புத்தகங்களையே எழுதிவந்தார். முதன்முறையாக மருத நிலம் சார்ந்த புத்தகம் ஒன்றாக இந்நூலை எழுதியிருக்கிறார். எந்த நிலத்தையும் தனித்தனியாகப் பிரித்துப்பார்க்க முடியாது அல்லவா என்று முன்னுரையில் நக்கீரன் சரியாகவே கூறியிருக்கிறார். கஜா புயல் அடித்து மூன்று மாதம் கழித்து புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வறீதையா மேற்கொண்ட பயணத்தின் விளைவு இந்நூல். பல்வேறு விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் பாதிப்பைப் பதிவுசெய்திருக்கிறார். கஜா புயல் பாதிப்புடன் சேர்ந்து அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறார் வறீதையா.

- குமரேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x