Published : 19 Oct 2019 09:15 am

Updated : 19 Oct 2019 09:15 am

 

Published : 19 Oct 2019 09:15 AM
Last Updated : 19 Oct 2019 09:15 AM

தமிழறிவு: ஒரு மெய்யியல் விசாரணை!

book-review

கரு.ஆறுமுகத்தமிழன்

அறிவு பற்றிய தமிழரின் அறிவு
சி.மகேந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78
8754507070
விலை: ரூ.250


உண்மையை விசாரிக்கத் தொடங்கும்போது மெய்யியல் (தத்துவம்) தொடங்கிவிடுகிறது. காண்பன எல்லாம் மெய் என்று கருதிக்கொண்டிருந்தவர், ‘காண்பன எல்லாமே மெய்யா? காண்பன மட்டும்தான் மெய்யா?’ என்று விசாரிக்கத் தொடங்கிய நாளே மெய்யியலின் பிறந்தநாள் என்க. மெய்யியல் எனும் மூலச் சிந்தனை மரபு அறிவியலாக, உளவியலாக, பொருளியலாக, இன்னபிறவாகப் பல்கிப் பெருகியது. தன்னில் பிறந்த அறிவுத் துறைகள் சிலவற்றைத் தனிக்குடி வைத்து வேறாக்கிவிட்ட மெய்யியல், தன்னைவிட்டு நீங்காமல் தன்னோடே சேர்த்து ஒண்டுக்குடி வைத்துக்கொண்ட கிளைகள் நான்கு: அறிவு ஆராய்ச்சியியல் (epistemology), புலன்கடந்த பொருளியல் (metaphysics), அற இயல் (ethics), அழகியல் (aesthetics). இவை நான்குமே அறிவார்ந்த விசாரணையின் அடிப்படையில் இயங்குபவைதான் என்றாலும் அறிவு ஆராய்ச்சியியல் என்பது எல்லாவற்றையும் அறியும் அறிவையே ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது என்பதால் இன்னும் சிறப்பு.

அறிவைத் தமிழர்கள் முதன்மைப்படுத்திய விதத்தையும், தங்கள் அறிவு என்பதற்காகப் பொத்தி வைத்துக்கொள்ளாமல் அதை ஆய்வுக்குட்படுத்திய திறத்தையும் ‘அறிவு பற்றிய தமிழரின் அறிவு’ எனும் நூலில் சித்திரிக்க முனைந்திருக்கிறார் சி.மகேந்திரன். அறிவுக் கனியைத் தொடத் துணிந்ததற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், இந்திய மெய்யியல் மரபில் மிகவும் பழிக்கப்பட்ட, மிரட்டப்பட்ட துறை அறிவு ஆராய்ச்சியியல்தான். அப்படி என்ன பெரிய கோளாறைச் செய்துவிட்டது அது? நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி அறிவை முதன்மைப்படுத்தச் சொல்கிறது அல்லவா? அதுதான் கோளாறு.

இந்திய மெய்யியல் மரபில் வேதங்களுக்கு ஒரு தனி மரியாதை. ஏனென்றால், அவை யாராலும் செய்யப்படாதவை - கடவுளாலும்கூட - என்பதால். வேதங்கள் எதையும் தாண்டிப் புனிதமானவை. அவற்றைக் கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. கேள்வி கேட்போர் நாத்திகர் (anti-Vedics) என்று நிந்திக்கப்படுவர். வேதக் கருதுகோள்களை ஆராய முனைவோருக்கு மட்டுமல்ல, கடவுளின் இருப்பை ஆராய முனைவோருக்கும் இந்தப் பழியே.

இப்படியாக அறிவு ஆராய்ச்சியியல் அப்போது எதிர்கொண்ட, இப்போதும் எதிர்கொள்ளும் தடைகள் நிறைய. ஆயினும், அறிவு ஆராய்ச்சியியல் அஞ்சாது அவற்றை எப்போதும் எதிர்முட்டுகிறது. இந்த எதிர்முட்டலுக்குச் சான்றாக ஒன்று: இருத்தல் x இன்மை. வைதிக மரபின் அச்சடித்த வாரிசான அத்துவைதக் கொள்கை ‘இருப்பது ஒன்றே; அது நித்தியமானது; என்றும் இருப்பது’ என்கிறது. அறிவு ஆராய்ச்சி செய்யும் மரபுகளோ இந்த இருத்தலைக் கேள்விக்குள்ளாக்குகின்றன: ஒன்றுதான் இருக்கிறது, அது எப்போதும் இருக்கிறது என்றால், எதுவுமே ஆவதும் இல்லை, அழிவதும் இல்லை, உலகத்தில் இயக்கமும் இல்லை என்று ஆகிவிடும். ஆகவே, இருத்தலுக்கு எதிராக இன்மை என்ற ஒன்றை நிறுத்தலே முறை.

மூடிய கதவுகளை முட்டித் திறக்கும் அறிவு மரபு நம்பிக்கை மரபுக்கு எதிர்மரபாகக் காலூன்றி நிலைகொண்டுவிட்டது. இப்போது அடுத்த சிக்கல் வந்தது: அறிவு என்ற ஒன்று சம்ஸ்கிருத மொழி மரபால் உருவாக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் கிளம்பினார்கள். இது மற்றுமொரு மூடநம்பிக்கை. இதையும் முட்டித்திறக்க வேண்டுமல்லவா? அதைத்தான் இந்த நூலில் முயல்கிறார் மகேந்திரன்.

‘தமிழ் ஹீரோயிக் பொயம்ஸ்’ என்ற பெயரில் ஜி.யு.போப்பு புறநானூற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்ததும், தொடர்ந்து கைலாசபதி ‘தமிழ் ஹீரோயிக் பொயெட்ரி’ என்ற பெயரில் சங்கப் பாடல்களை ஆய்வுசெய்ததும், தொடர்ந்து வந்த திராவிட இயக்கத்தின் ‘சங்கத் தமிழன் சிங்கத் தமிழன்’ போன்ற களமுனைப் பேச்சுகளும், அவற்றின் அடியொற்றி வந்தத் திரைப்படங்களும், தமிழ் மரபு வீரத்தையும் காதலையும் தவிர்த்து வேறு ஒன்றுமே இல்லாத பொக்கை மரபு என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன; முன்னிலைப்பட்டிருக்க வேண்டிய தமிழரின் அறிவு மரபு முனை மழுங்கி அமுங்கிப்போய்விட்டது என்று வருந்துகிறார் மகேந்திரன். ஏற்க வேண்டியதுதான்.

இந்நூலில் தமிழ் மொழியின் சொல்வளம், திண்மை, பேசுபொருள்கள், பண்பாட்டு மரபு, நாகரிக ஒழுங்கு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுவதன் மூலம் தமிழர் அறிவின் அழுத்தத்தையும் பரப்பையும் சுட்டுகிறார். பின்னர் தொல்காப்பியம், திருக்குறள், சங்கப் பாடல்கள் துணைகொண்டு அறிவுக்கு அடிப்படைச் சட்டகமாகத் தமிழர்கள் வகுத்துக்கொண்ட நிலமும் பொழுதும், அறிவின் நிறை பார்ப்பதற்குத் தமிழர்கள் வகுத்துக்கொண்ட காட்சி, கருதல், உரை போன்ற வாயில்கள், அறிவை வெளிப்படுத்துவதற்கான உத்திகள், அறிவின் அடிப்படைத் தூண்டுகோலாகிய ஐயம் ஆகியவற்றை அடுக்கடுக்காய் விளக்கிக்கொண்டுபோகிறார்.

அறிவு ஆராய்ச்சியியல் துறையில் வந்த தமிழ் நூல்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவை. மேலைநாட்டு மரபை முன்னிலைப்படுத்தியும் இந்திய மரபைத் தொட்டுக்கொண்டும் துறை அறிமுகமாக இர.இராமானுஜாச்சாரி எழுதிய ‘அறிவு ஆராய்ச்சி இயல்’; சிறப்பாகத் தமிழர் நெறியைப் பேசும் வகையில் மெய்யியல் பேராசிரியரான க.நாராயணனின் ‘தமிழர் அறிவுக் கோட்பாடு’, தமிழ்ப் பேராசிரியரான க.நெடுஞ்செழியனின் ‘தமிழரின் தருக்கவியல்’, ஆங்கிலப் பேராசிரியரான நிர்மல் செல்வமணியின் ‘தமிழ்க் காட்சி நெறியியல்’ ஆகியன. இவற்றைத் தொடர்ந்து பொதுமை அறிவு ஆர்வலரான மகேந்திரனின் ‘அறிவு பற்றி தமிழரின் அறிவு’ என்னும் இந்நூல். புகழ்ந்துரைத்தும் கைதட்டியும் வரவேற்பு.

- கரு.ஆறுமுகத்தமிழன்,

மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர்,

‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com


அறிவு பற்றிய தமிழரின் அறிவுசி.மகேந்திரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x