

கோபால்
எழுத்தாளர் இமையம் எழுதி 2017-ல் வெளியான ‘போலீஸ்’ சிறுகதையை மையமாக வைத்து நாடக ஆசிரியர், இயக்குநர் பிரஸன்னா ராம ஸ்வாமி இயக்கிய ‘எல்லா உயிர்க்கும்’ நாடகம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வாண்டரிங் ஆர்டிஸ்ட்ஸ் அரங்கில் கடந்த 13-ம் தேதி நடந்தது. சமுதாயத்தில் வேரூன்றியுள்ள சாதி ஆதிக்கத்தால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள், மறுக்கப்படும் உரிமைகளைப் பற்றிய மனதை உலுக்கும் பதிவே இந்த நாடகம்.
பட்டியலின சாதியைச் சேர்ந்த ஒரு முதியவ ரின் உடலை காவல்துறை அடக்கம் செய்கிறது. மயானத்துக்கு உடலை காவலர்கள் சுமந்து செல்லும் புகைப்படம், நாளிதழ்களில் வெளியாகிறது. இதை அவமானமாக கருதும் காவலர் சீனிவாசன், பணியை விட்டு விலக முடிவெடுக்கிறார். பணிவிலகல் கடி தத்தை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்க ஏட்டு ராஜேந்திரன் வீட்டுக்குச் செல்கிறார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரை யாடல் மூலம் ஆதிக்க சாதியினரிடையே நிலவும் சாதிய மேட்டிமை உணர்வையும், அதற்காக அவர்கள் எதையும் இழக்கத் துணிவதையும், சாதிப் படிநிலையில் தங்களைவிட கீழ் நிலையில் இருப்ப வர்கள் மீதான வெறுப்பையும் பிரச்சார நெடியின்றி அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பார் இமையம்.
அதேபோல, என்னதான் அரசும், காவல்துறை யும், நீதிமன்றங்களும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்தாலும் பொதுமக்கள், அதிகாரிகள் மத்தியில் நிலவும் சாதி ஆதிக்க மன நிலை அவற்றை நடைமுறைப்படுத்த தடையாக இருப்பதையும் படம்பிடித்துக் காட்டியிருப்பார்.
பெருமளவில் உரையாடல்களால் நிரம்பிய இந்தக் கதையுடன் ஆதவன் தீட்சண்யா, தெலுங்கு கவிஞர் சல்லப்பள்ளி ஸ்வரூபராணி ஆகியோரின் கவிதைகளையும், பட்டியல் சாதி மக்கள் குறித்த சில வரலாற்றுத் தகவல்களையும் இணைத்து நாடகமாக்கியிருக்கிறார் பிரஸன்னா ராமஸ்வாமி.
இவ்வளவு விஷயங்களை சேர்த்திருந்தாலும், இமையத்தின் கதையையும், அதன் தாக்கத்தையும் சிதைக்காமல் நாடகமாக்குவதில் மிகுந்த அக்கறை செலுத்தியிருக்கிறார். சீனிவாசனின் புலம்பல்களைக் கேட்டுக்கொண்டே ஏட்டு சவரம் செய்துகொள்வது, இதுபோன்ற காவல்துறை நடைமுறைகளுக்கும் சாதிய பிரச்சினைகளுக்கும் பழகி அவரது மனம் கெட்டித்தட்டிப் போய் விட்டதைக் காட்டுகிறது. கதையைக் காட்சி அனுபவமாக மாற்றும்போது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்திருப்பதன் மூலம் அதற்கு மெருகூட்டியிருக்கிறார். சீனிவாசன் - ஏட்டு உரையாடலின் இடையே கலந்துகொள்ளும் ஏட்டு மனைவி கதாபாத்திரம் மூலம், பெண்களிடமும் சாதிய மனநிலை ஆழமாகப் பரவியிருப்பது உணர்த்தப்படுகிறது.
கவிதை வரிகளும், வரலாற்றுத் தகவல்களும் கதைக்கு வெளியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை ஒடுக்கப்பட்டவர்களின் வேதனையை கூடுதல் அழுத்தத்துடன் கடத்த உதவுகின்றன. கதையின் நீட்சியாக, இறந்துபோனவரின் மகள் கதாபாத்திரம் தன் வலியை வெளிப்படுத்துவது போன்ற காட்சியை சேர்த்திருப்பதும் இன்னொரு தரப்பின் கோணத்தை அதற்குரிய முக்கியத்துவத் துடன் பதிவுசெய்கிறது
சீனிவாசனாக தர்ஷன், கதாபாத்திரத்தின் பதற்றத் தையும், சீற்றத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்து கிறார். வசன உச்சரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி யிருக்கலாம். ஏட்டாக ஆன்டனி அருள் பிரகாஷ் சிறந்த நடிப்பைத் தந்துள்ளார். அவரது வசன உச்சரிப்பும், உடல்மொழியும், கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கியிருப்பதை காட்டுகின்றன. ஏட்டு மனைவி கதாபாத்திரமாகவும், கதைகூறும் கட்டியக்காரியாகவும் வருகிறார் மெலோடி டோர்காஸ். மேடை முழுவதும் சுற்றிக்கொண்டே கவிதைகளை உரைப்பது, மேடை பாடல்களைப் பாடுவது, உணர்ச்சி நிரம்ப பார்வையாளர்களை நோக்கிப் பேசுவது என கதைக்கு வெளியே அவர் அளித்திருக்கும் பங்களிப்பு சிறப்பு. இறந்தவரின் மகளாக கடைசி சில நிமிடம் தோன்றும் ஜானகி ஆற்றாமை, கோபத்தை சிறப்பாக வெளிப்படுத்து கிறார். நாடகத்தில் பின்னணியாகப் பயன்படுத்தப் பட்டுள்ள நட்ராஜின் ஓவியங்கள் கவனம் ஈர்க்கின்றன.
இசையோ, ஒளி அமைப்போ இல்லாமல் 40 நிமிடங்களில், நம் சமுதாயத்தில் சாதி ஆதிக்கம் இன்னும் தீவிரமாகத் தொடர்வது குறித்த உறுத்தலை ஏற்படுத்திவிடுகிறது நாடகம். அந்த உறுத்தலில் இருந்து விடுபடவாவது நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது.