Published : 13 Oct 2019 09:54 AM
Last Updated : 13 Oct 2019 09:54 AM

பிரபஞ்சன்: காலம் கலை கலைஞன்

சி.மோகன்

பிரபஞ்சனின் வாசிப்பும் எழுத்தும் இறுதிவரை சற்றும் சோராதது. நூல்களை அறிமுகப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மிகவும் முக்கியமானது. மக்கள் டி.வி.யில் பணிபுரிந்த காலத்திலும் தினசரி காலை ஒளிபரப்பில் புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அதிகம் அழைக்கப்பட்டவரும் அவராகவே இருக்கக்கூடும். பக்க மற்றும் நேர வரையறைக்கேற்ப, சுருக்கமாகவும் விஸ்தாரமாகவும் புத்தகத்தை அவரால் அறிமுகப்படுத்த முடிந்தது. அர்ப்பணிப்புமிக்க இந்த நெடும் பயணத்தில், அவர் எண்ணற்ற நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியபடி இருந்தார். இச்செயல்பாடு, மெல்ல மெல்ல புதிய தலைமுறைப் படைப்பாளிகளிடம் அவர் மீதான ஓர் ஈர்ப்பை உருவாக்கியது. பெண்கள் எழுத முனைவதில் அவர் மிகவும் பரவசமடைந்தார். உற்சாகப்படுத்தினார். உத்வேகமூட்டினார். பெண் சிநேகிதங்கள் குறித்த பெருமிதம் அவரிடம் எப்போதும் இருந்தது. வாசகர்களும் இளம் படைப்பாளிகளும் சூழ்ந்த உலகமானது, அவர் வாழ்க்கை.

பொதுவாக, சமூகச் சூழல் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்த கட்டுரைகளில் சீற்றத்தோடு தன் எண்ணங்களை வெளிப்படுத்திய பிரபஞ்சன், படைப்புகளில் சகமனிதர் மீதான பரிவை இழையோட்டமாகக் கொண்டிருந்தார். அவர் தனது கட்டுரை நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளில் சமூக அறம் சார்ந்த சீற்றங்களைக் கொந்தளிப்போடு வெளிப்படுத்தினார். எனில், படைப்பு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளில் தன் அறம் சார்ந்த பரிவை மிகுந்த சாந்தத்தோடு வெளிப்படுத்தினார். “சகமனிதனைப் புரிந்துகொள்வதே என் அறம்” என்கிறார் பிரபஞ்சன். சமூகம் வரையறுக்கும் நெறிப்படுத்தும் ஒழுக்கத்துக்கும், தனிமனிதர் தன் வாழ்வின் சுடராக வரித்துக்கொள்ள வேண்டிய அறத்துக்குமான வேறுபாட்டைக் கண்டடைந்து எழுத்திலும் வாழ்விலும் தனதான அறத்தைப் பேணியவர். அவர் சொல்கிறார்: “அறம், நீதி உரைப்பது இல்லை. நியாயம் வழங்குவது இல்லை... கண்ணீரை, துன்பத்தை, துயரை, வறுமையை, இயலாமையை, தவிர்க்க முடியாத சமரசத்தைப் புரிந்துகொள்வதே என்னைப் பொறுத்தவரை அறம். நான் பாதிக்கப்பட்டவர் பக்கமே நிற்கிறேன். உலகம் ஒழுக்கவாதிகள் என்கிற வன்முறையாளர்களால் இயங்குவது அல்ல. பலவீனர்களால் அல்லது மனிதர்களால் இயங்குவது.”

இத்தகைய மேலான புரிதலோடு, அதையே தன் வாழ்வு மற்றும் எழுத்தின் அறமாகக் கொண்டிருந்ததே பிரபஞ்சனின் வாழ்வியக்கம். அதுவே அவரது சுபாவமாகவும் நிலைபெற்றது. இந்த சுபாவம் வழிநடத்திய பாதையில் அமைந்த பயணத்தில் காலகதியில் பலரும் அவர் மீது அன்புகொண்டு அவரை வந்தடைந்தனர். என்னதான் இயல்புணர்ச்சிகள் இட்டுச்சென்ற வாழ்வாக இருந்தாலும், அவரும் இச்சமூகத்தில் வாழ்ந்த சமூக மனிதன்தான். அதனாலேயே அவர் சில மனச் சங்கடங்களுக்கு ஆளான தருணங்களும் உண்டு. அதன் காரணமாகவே, சமயங்களில் விரக்தியும் சலிப்பும் பீடித்திருக்கிறது. சமயங்களில் குற்றவுணர்ச்சி வாட்டியிருக்கிறது. இவற்றினூடாகவும், அவர் தன் வாழ்வை இயல்புணர்ச்சிகளின் வெளிச்சத்திலேயே தொடர்ந்தார். எல்லாம் புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

“என் எழுத்துப் பயணம், அருமையான நண்பர்களை எனக்கு அருளியிருக்கிறது. என் சம்பாதனை என்பதும் இதுதான்” என்று மனம் நெகிழும் பிரபஞ்சனின் இறுதி நாட்களில் பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவருக்குப் பெரும் துணையாக இருந்தார். முற்றிய புற்றுநோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இக்காலகட்டத்தில் அவர், உடல்நிலையின் கடுமையையும் மீறி, மனதளவில் அடுத்து எழுத வேண்டியது பற்றிய எண்ணங்களைச் சுடரேற்றியபடியே இருந்திருக்கிறார். ‘அடுத்த கட்டம் என்ன?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்தார் என்கிறார் பி.என்.எஸ்.பாண்டியன். அவர் மனதில் இந்தக் கேள்வி சலனித்தபடியே இருந்திருக்கும். மீண்டுவருவோம் என்ற நம்பிக்கையும், எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்ற கனலும் அவருள் தகித்துக்கொண்டே இருந்திருக்கின்றன.

மருத்துவமனையில் முதல் முறை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய பிரபஞ்சன், முன்னதாக ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ இரண்டையும் தன் பார்வையிலிருந்து நூல்களாக உருவாக்கியதன் தொடர்ச்சியாக, ‘பாகவத’த்தைத் தன் பார்வையில் எழுதுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறார். மேலும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்துசென்ற பாதையில் நடந்துசென்று, அதை நூலாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்திருக்கிறது. ஆனால், மீண்டும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது தன் காலத்துக்குப் பின்னான காரியங்கள் குறித்து மனம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. பாண்டியனிடம் இதுபற்றி உரையாடியிருக்கிறார். பிரபஞ்சன் பெயரில் அறக்கட்டளை தொடங்குவது என்றும், அவரது புத்தகங்கள் அனைத்தையும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியிடுவது என்றும், ராயல்டி தொகை அறக்கட்டளைக்குத் தரப்பட்டு, அத்தொகையில் அறக்கட்டளை செயல்படுவது என்றும் அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

வரும் டிசம்பர் 21, அவரது முதலாவது நினைவுநாள். மிகச் சிறப்பாக நினைவுகூரப்படவும் கொண்டாடப்படவும் வேண்டிய நாள். “ஒரு நாளில் இரண்டு வேளை சாப்பிட எனக்கு வாய்த்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பேன்” என்று பின்னாளில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பிரபஞ்சன். நம் சூழலில் எழுத்தை முழுநேர வாழ்க்கைத் தேர்வாக ஒரு படைப்பு மனம் கொள்ளும்போது காலமும் சமூகமும் இன்றளவும் அத்தேர்வை உதாசீனப்படுத்தி படைப்பாளியை வாட்டி எடுக்கிறது. எனினும், தன் காலத்துக்கும் சமூகத்துக்கும் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையினூடாகப் பெரும் கருணையுடன் தன் எழுத்தின் வழியாக அரிய கொடைகளை அளிக்கிறான் படைப்பாளி. அப்படியாக வாழ்ந்த நம் பெருமிதங்களில் ஒருவர் பிரபஞ்சன். நம் பெருமிதங்களைக் கொண்டாடுவதன் மூலம்தான் நம் காலமும் சமூகமும் வாழ்வும் செழுமையடையும்.

பாரதி, புதுமைப்பித்தன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன் ஆகியோரின் காலச் சூழலிலிருந்து இன்றைய சூழல் மேம்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. காலத்துடன் கொண்ட உறவில் லட்சிய மனங்கள் அயராது மேற்கொண்ட பிரயாசைகளிலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. பிரபஞ்சனின் இறுதிக் காலத்தில் எடுக்கப்பட்ட விழாக்களும், அவரது மரணத்துக்குப் புதுவை அரசு அளித்த உயரிய மரியாதையும் மிகுந்த நம்பிக்கையளிக்கும் அம்சங்கள்.

நம் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் படைப்பாக்க மனங்கள் நிகழ்த்தும் அரிய பங்களிப்புகள் மூலமே அந்தந்தத் துறைகளும் சமூகமும் காலமும் மனித வாழ்வும் வளமடைகின்றன. மனித வாழ்வின் மகத்துவத்தையும் சக மனிதர்களையும் நேசித்த படைப்பு மனம் பிரபஞ்சனுடையது. அவரைக் கொண்டாடுவதென்பது நம் வாழ்வை நாம் சக மனிதர்களுடன் கொண்டாடுவதுதான்.

- சி.மோகன், எழுத்தாளர். தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

(முற்றும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x