Published : 12 Oct 2019 08:38 AM
Last Updated : 12 Oct 2019 08:38 AM

என்றும் காந்தி: இரண்டு கூட்டங்கள்

சிந்தனையாளர் மன்றம் சார்பில் அக்டோபர்-4 அன்று தி.நகர் பத்மாவதி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ஆசை எழுதி ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட ‘என்றும் காந்தி’ நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் எம்.பி. டாக்டர் ஜெயக்குமார், எழுத்தாளர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். பார்வையாளர்கள் ஆர்வத்துடன் ‘என்றும் காந்தி’ நூலை வாங்கிக்கொண்டு நூலாசிரியரிடம் கையெழுத்தும் வாங்கிச் சென்றார்கள்.

காந்தியின் 150-வது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் அக்டோபர் 10 அன்று ‘காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்’ சென்னைக் கோட்டம்-2ன் சார்பில் பாரிமுனையில் நடைபெற்றது. இக்கூட்டத்திலும் ‘என்றும் காந்தி’ புத்தகம் குறித்த விவாதம் நடைபெற்றது. காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் க.சுவாமிநாதன், த.செந்தில்குமார், மா.தனசெல்வம், வி.ஜானகிராமன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் கு.மனோகரன் தலைமை தாங்கினார். ஏற்புரை வழங்கிய ஆசை, பார்வையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையிலுள்ள காந்தி இலக்கியச் சங்கம் நூல் நிலையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் 40% வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ புத்தகம் இங்கே 20% தள்ளுபடி விலையில் கிடைக்கும். தொடர்புக்கு: 94440 58898.

அ.மார்க்ஸ் 70

எழுத்தாளர், விமர்சகர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் என்று பன்முக ஆளுமையான பேராசிரியர் அ.மார்க்ஸின் 70-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக முழு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் 13 அன்று, கும்பகோணம் அன்பு மருத்துவமனை அருகிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடக்கும் கூட்டத்தில் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தலித் அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், அ.மார்க்ஸின் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பேராசிரியர் அ.மார்க்ஸுக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்துகள்!

காந்தி, பாரதி, அண்ணா சிறப்புக் கருத்தரங்கு

காந்தி, பாரதி, அண்ணா மூவருக்கும் தஞ்சையில் தனித் தனி அமைப்புகளை நிறுவி, ஆண்டுதோறும் கூட்டங்களை நடத்திவந்தவர் வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம். அவரின் நினைவாக அவரது மகன் செம்பியன் சிறப்புக் கருத்தரங்கை ஏற்பாடுசெய்திருக்கிறார். தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் அக்டோபர் 12 (இன்று) மாலை 6 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு தஞ்சை அ.இராமமூர்த்தி தலைமையேற்கிறார். ‘இதழாளர் பாரதி’ என்ற தலைப்பில் களப்பிரனும், ‘காந்தியின் கடவுள்’ என்ற தலைப்பில் வெ.கோபாலனும், ‘அண்ணாவின் இருமொழிக் கொள்கை’ என்ற தலைப்பில் கோவி.லெனினும் பேசுகிறார்கள்.

திருவண்ணாமலை, கடலூர், சுரண்டையில் புத்தகக்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுக்கும் மூன்றாவது புத்தகக்காட்சி வேங்கிகால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் அக்டோபர் 11 தொடங்கி 20 வரை நடக்கிறது.

கடலூரில் குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழா. டவுன் ஹாலில் அக்டோபர் 14 அன்று தொடங்கும் புத்தகக்காட்சி அக்டோபர் 21 வரை நடக்கிறது. குழந்தைகளுக்கு என ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இங்கே காட்சிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சுரண்டையில் காமராஜர் வணிக வளாகத்தில் அக்டோபர் 11 தொடங்கி அக்டோபர் 20 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும், மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை இலக்கியக் கூட்டங்களும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x