Published : 12 Oct 2019 08:36 AM
Last Updated : 12 Oct 2019 08:36 AM

நூல்நோக்கு: சந்தைப் பொருளான குடிநீர்

நீலத்தங்கம்: தனியார்மயமும்
நீர் வணிகமும்
இரா.முருகவேள்
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை-18.
விலை: ரூ.70
044-24332424

மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர் எப்படி உலகம் முழுக்கச் சந்தைப் பொருளானது என்பதை இரா.முருகவேளின் ‘நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்’ நுட்பமாக விவரிக்கிறது. டெல்லியில் தனியார்மயத்திடமிருந்து குடிநீரைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் அரசியலை மெச்சும் அதேவேளையில், அதற்குப் பின்னிருக்கும் சித்தாந்தச் சிக்கல்களையும் விவரிக்கிறது. நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார். குடிநகர்த்துதலுக்குப் பின் இருக்கும் பல்வேறு காரணங்களில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தண்ணீர் பருகுவது மனிதர்களின் அடிப்படைத் தேவை எனில், அதைக் காப்பதும் அவர்களின் கடமை. ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய விழிப்புணர்வும், அரசு செய்ய வேண்டிய அல்லது அரசிடமிருந்து மக்கள் கோர வேண்டிய விஷயங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது ‘நீலத்தங்கம்’.

- கிருஷ்ணமூர்த்தி

*******************************

விழிப்புணர்வே தீர்வு

நோய் அரங்கம்
கு.கணேசன்
சூரியன் பதிப்பகம்
மயிலாப்பூர், சென்னை-4.
விலை: ரூ.275
72990 27361

மருத்துவம் மிகப் பெரும் வியாபாரமாக உருக்கொண்டிருப்பதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையும் மிகமுக்கிய மூலதனம். பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து நோய்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எளிமையாக எழுதிவருபவர் டாக்டர் கு.கணேசன். தலைவலி, மூட்டுவலி, சீதபேதி தொடங்கி எபோலா, டெங்கு என ஜிகா வைரஸ் வரை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். பற்கள், நகங்களைப் பாதுகாக்கும் விஷயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. வெறுமனே நோய் அறிகுறிகளையும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மட்டும் இவர் பேசுவதில்லை. நோய் குறித்த அறிவையும் நமக்குக் கடத்திவிடுகிறார்.

- இரவி

*******************************************

ஹைக்கூ விளக்கம்

கற்றுக்கொடுக்கிறது மரம்
ஜெயபாஸ்கரன்
டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர் மேற்கு, சென்னை-78
விலை ரூ: 150
87545 07070

தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக அறியப்படுகிற லிங்குசாமியின் 15 ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அக்கவிதைகளின் அகவெளிப் பரிமாணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயபாஸ்கரன். வாசகருக்குள் ஒரு கவிதை ஏற்படுத்துகிற அதிர்வுகள் அந்தந்த வாசகருக்குரிய உள்வாங்கும் சக்தியையும் ரசனையையும் உள்ளடக்கியதாக அமையும். இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு விஸ்தரித்துச் சொல்லப்படுகிற விளக்கம்தான் இந்நூல். ‘கூழாங்கல்லில் தெரிகிறது/ நீரின் கூர்மை’ என்கிற லிங்குசாமியின் கவிதையைப் பற்றி கூறும்போது ‘காண்பதற்குக் கண்கள் இல்லாமல், வடிமைக்க உளியும் சுத்தியலும் இல்லாமல், அவற்றைப் பற்றிப் பிடிக்கக் கைகள் இல்லாமல் நீர் செதுக்கி வைத்திருக்கிற வழவழப்பான, அழகழகான கூழாங்கற்களைக் காட்சிப்படுத்தி நீரின் கூர்மையை உறுதிசெய்கிறார் லிங்குசாமி’ என்று ஜெயபாஸ்கரன் சொல்லும்போது கவிதையின் மீது கூடுதல் பாரம் வந்து உட்கார்ந்துவிடுகிறது.

- மானா பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x