Published : 06 Oct 2019 12:01 pm

Updated : 06 Oct 2019 12:01 pm

 

Published : 06 Oct 2019 12:01 PM
Last Updated : 06 Oct 2019 12:01 PM

முடியரசன்: பாரதிதாசன் பரம்பரையின் மூத்த வழித்தோன்றல்

bharathidhasan-family

தமிழகத்தில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் கனன்றுகொண்டிருந்த 1964-ல் முடியரசனின் ‘பூங்கொடி’ (மொழிக்கொரு காப்பியம்) வெளியானது. தமிழ் உணர்வாளர்களையும் இளைஞர்களையும் இந்த நூலிலுள்ள கவிதைகள் வீறுகொள்ளச் செய்தன. இந்நூல் தடைசெய்யப்பட்டதோடு இந்நூலை எழுதிய முடியரசன் மீது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி வழக்கும் தொடரப்பட்டது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், ‘பூங்கொடி’ நூலுக்கான தடை விலக்கப்பட்டது.

மொழிப் போரில் முக்கியப் பங்கு வகித்தபோதிலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பதவிகள் எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர் முடியரசன். மு.கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சிக்காலங்களில் அரசவைக் கவிஞராகும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோதும், தனது அரசியல் கொள்கைகளுக்கு அரசுப் பொறுப்புகள் தடையாக இருக்கும் என்று அந்த வாய்ப்புகளை மறுத்தார்.


பெரியகுளத்தில் சுப்புராயலு - சீதாலெட்சுமி தம்பதியினரின் மகனாக 7.10.1920-ல் பிறந்து, காரைக்குடியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்தவர் முடியரசன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடனான நெருங்கிய நட்பின் காரணமாக துரைராசு என்ற தனது இயற்பெயரை விடுத்து, முடியரசன் ஆனார். பெரியகுளத்திலுள்ள திண்ணைப் பள்ளியிலும் அதைத் தொடர்ந்து மேலைச்சிவபுரியிலும் ஆரம்பக் கல்வி பயின்றார். பெரும் புலவரான தனது தாய்மாமா துரைசாமி மூலமாக, இளம் வயதிலேயே மொழிப் பற்றையும் இலக்கிய உணர்வையும் வளர்த்துக்கொண்டார். 1948-ல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட முடியரசன், திருமணமான சில மாதங்களிலேயே தனது துணைவியார் கலைச்செல்வியுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

சிறுவயதிலேயே பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. தொடக்க காலத்தில் கடவுள் பற்றிய கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த அவரின் சிந்தனையில், சுயமரியாதை இயக்கத் தொடர்பு மாற்றங்களை உண்டாக்கியது. அதற்குப் பிறகு சமூகம், மொழி, நாடு, இயற்கை வளம் என்று தன் கவிதைகளின் பாடுபொருள்களை மாற்றிக்கொண்டார். 21 வயதில் முடியரசன் எழுதிய ‘சாதி என்பது நமக்கு ஏனோ?’ எனும் கவிதையை அண்ணா தனது ‘திராவிட நாடு’ இதழில் பிரசுரித்தார்.

முடியரசனின் கவிதைகளில் இருந்த தமிழின் செழுமையும் வீறார்ந்த உணர்ச்சியும் அண்ணாவைக் கவர்ந்தன. தொடர்ந்து ‘திராவிட நாடு’ இதழ்களின் அட்டைகளை முடியரசனின் கவிதைகளால் அலங்கரித்தார் அண்ணா. ‘திராவிட நாடு’ மட்டுமின்றி திராவிட இயக்கத்தின் சார்பில் வெளியான அனைத்து இதழ்களிலும் முடியரசனின் கவிதைகள் தொடர்ந்து இடம்பெறத் தொடங்கின. இத்தனைக்கும் 1945-ல் திருப்பத்தூரில் பெரியாரின் தலைமையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில்தான் முடியரசனுக்கும் அண்ணாவுக்குமான நேரடிச் சந்திப்பு முதன்முதலாக நிகழ்ந்தது. அந்த மாநாட்டில், மாநாட்டுத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் முடியரசன்.

‘கவிஞன் யார் என்பதற்கான எடுத்துக்காட்டுத்தானய்யா திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’ என்று பெரியாராலும், ‘திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர் முடியரசன் ஆவார். புரட்சிக் கவிஞர் அடிச்சுவட்டில் இன்று எத்தனையோ கவிஞர்கள் எழுச்சி முரசு கொட்டிவருகிறார்கள், லட்சிய கீதம் இசைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் முதன்மையானவர் முடியரசன்’ என பேரறிஞர் அண்ணாவாலும் பாராட்டப்பெற்றவர் கவிஞர் முடியரசன்.

பாரதிதாசனின் பாராட்டு

மரபுச் செழுமையோடு கூடிய கவிதைகளை 1940 முதல் தொடர்ந்து எழுதிவந்தார் முடியரசன். கவியரங்க மேடைகளிலும் அனல் பறக்கும் கவிதைகளைப் பாடினார். அவை பின்னாளில் ‘கவியரங்கில் முடியரசன்’ எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. 1954-ல் ‘முடியரசன் கவிதைகள்’ எனும் முதல் நூல் வெளியானது. 18 கவிதை நூல்கள், 3 காப்பியங்கள், 3 கதைகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 2 கடித இலக்கியம், 4 பாட நூல்கள் என 30-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் படைத்துள்ளார். பாரதிதாசன் பரம்பரையில் திராவிட இயக்கச் சார்போடு நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இருந்தபோதும், ‘என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே’ என்று பாரதிதாசனால் பாராட்டப்பட்டவர் முடியரசன்.

1944-ல் நாடகங்களில் பாடல்கள், உரையாடல் எழுதுவதற்காக நவாப் டி.எஸ்.இராசமாணிக்கத்தின் ஸ்ரீதேவி பாலவினோத சபாவில் சேர்ந்தார். இயல்பிலேயே சுதந்திரச் சிந்தனை கொண்டவரான முடியரசனுக்கு, அந்த நாடகக் குழுவில் இருந்த கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் பிடிக்காமல் விரைவிலேயே அங்கிருந்து வெளியேறினார். முடியரசனின் திரைப்பட முயற்சிகளும் அவ்வாறே கசப்பில்தான் முடிந்தன.

திரைத் துறையில் பணியாற்றும் ஆர்வத்தோடு சென்னைக்குச் சென்று, எம்.ஆர்.ராதா நடித்த ‘கண்ணாடி மாளிகை’ எனும் படத்துக்கு உரையாடலும் பாடல்களும் எழுதினார். ஆனால், அத்துறையின் இயல்போடு அவரால் ஒத்துப்போக மனமின்றியும் காரைக்குடிக்கே திரும்பிவந்து கல்விப் பணியைத் தொடர்ந்தார். ‘யாருக்காகவும் எதற்காகவும் தன் கொள்கையையும் நிலையையும் மாற்றிக்கொள்ளாத பெருமிதத்துக்குரியவர். ஒரே கொள்கை; ஒரே இயக்கம் அவருக்கு. அவை தன்மானக் கொள்கை; தமிழியக்கம் ஆகும். நான் பாட்டெழுத அழைத்தேன்… தமிழை விற்க மாட்டேன் என்று கூறிய உண்மையான வணங்கா முடியரசர்’ என்பது எம்ஜிஆரின் பாராட்டு.

நல்லாசிரியர் முடியரசன்

தேவநேயப் பாவாணரும், மா.இராசமாணிக்கனாரும் தமிழாசிரியராகப் பணியாற்றிய சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் (1947-49) தமிழாசிரியராகப் பணியாற்றிய முடியரசன் அதைத் தொடர்ந்து, காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் 29 ஆண்டுகள் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். சிறப்பான கல்விப் பணிக்காக 1974-ல் நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.

‘காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விளைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்’ என்று எழுதியவர் முடியரசன். எழுதியதோடு மட்டுமின்றி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். 3.12.1998-ல் அவர் மறைந்தார். அவரது நூற்றாண்டுத் தொடக்க விழா, 2019 அக்டோபர் 7 அன்று காரைக்குடியில் ‘வீறுகவியரசர் முடியரசனார் அவைக்களம்’ சார்பிலும், அக்டோபர் 13 அன்று புதுச்சேரியில் ‘பாரதிதாசன் அறக்கட்டளை’ சார்பிலும் நடைபெறவுள்ளது.

- மு.முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in

அக்டோபர் 7: முடியரசன் நூற்றாண்டு விழா தொடக்கம்


முடியரசன்பாரதிதாசன் பரம்பரைபரம்பரையின் மூத்த வழித்தோன்றல்பாரதிதாசனின் பாராட்டுநல்லாசிரியர் முடியரசன்முடியரசன் நூற்றாண்டு விழா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x