Published : 06 Oct 2019 11:58 am

Updated : 06 Oct 2019 11:58 am

 

Published : 06 Oct 2019 11:58 AM
Last Updated : 06 Oct 2019 11:58 AM

நடைவழி நினைவுகள் - பிரபஞ்சன்: மானுடம் பாடிய எழுத்து

prabhajan-memories

பிரபஞ்சனின் எழுத்துலகப் பயணம் மிக நெடியது. 55 ஆண்டுகளுக்கும் மேலானது. இப்பயணத்தில் வெளியான புத்தகங்களின் எண்ணிக்கை கணிசமானவை மட்டுமல்ல; காத்திரமானவையும்கூட. மானுட வாழ்வின் மேன்மையைப் போற்றிய எழுத்துகள் அவருடையவை. சகமனிதர்களிடம் நேசத்தையும் பரிவையும் பகிர்ந்துகொள்வதன் மூலமே வாழ்வு பரிபூரணம் எய்தும் என்று நம்பிக்கை கொண்டவை. உலகம் அன்பால் தழைக்க வேண்டும் எனக் கனவுகாண்பவை. மனித இருப்பு பற்றிய விசாரணையினூடாக அன்பின் விதைகளைத் தூவிச் செல்பவை. தனது வாழ்வியக்கத்தையும் அப்படியாக அமைத்துக்கொண்டு பிரகாசித்தவர் பிரபஞ்சன்.

தனது 16-வது வயதில், பள்ளிப் படிப்பின் இறுதியில் எழுதத் தொடங்கியவர். 1961-ல் ‘பரணி’ என்ற இதழில் ஒரு கதையும் கவிதையும், அதே ஆண்டில் ‘கலைச்செல்வி’ என்ற இதழில் ஒரு கட்டுரையும் பிரசுரமாகியிருக்கின்றன. 1971-ல் கோவையிலிருந்து சில படைப்பாளிகள் இணைந்து நடத்திய ‘வானம்பாடிகள்’ கவிதை இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். சொந்தப் பெயர் துறந்து சாதி, மத அடையாளங்களற்ற பெயர்களைப் புனைபெயர்களாகக் கொண்டனர். அதன் நிமித்தம் வைத்திலிங்கம், பிரபஞ்சன் ஆனார். பிரபஞ்ச கவி என்ற பெயரில் ‘வானம்பாடி’ இதழில் கவிதைகள் எழுதினார். திராவிட இயக்கப் பற்று, மார்க்ஸியப் பிடிமானம், தமிழர் வாழ்வு, அரசியல், பண்பாட்டுச் சலனங்கள் குறித்த அவதானிப்பு எனத் தன் வாழ்வின் கதியில், பல்வேறு பாதைகளினூடாகப் பயணப்பட்ட பிரபஞ்சன், அதன்வழி தனதான இலக்கியத்துவப் பாதையைக் கண்டடைந்தார். ஆனால், எப்போதும் அவரது இலக்கிய நம்பிக்கை என்பது, மானுடம் போற்றுவதையும், அன்பையும் பரிவையும் முன்னிறுத்துவதையுமே இலக்காகக் கொண்டிருந்திருக்கின்றன. ‘நேற்று மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனிதன் சகமனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். எனில், மனிதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி எனில், அவன் தன்னைத் தானே புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இங்கனம், மனிதன் தன்னை அறிவதற்குக் கலையும் இலக்கியமும் மிகப் பெரும் துணையாய், ஒரு நல்ல சிநேகிதனாய் நிற்கும் என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்.”


1982-ல் அவரது முதல் புத்தகமாக வெளிவந்த, ‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு, அவரைத் தமிழின் குறிப்பிடத்தகுந்த புனைகதையாளராக அடையாளம் காட்டியது. அடுத்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்குள் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் (300 சிறுகதைகளுக்கும் மேலானவை), 21 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, 3 நாடகங்கள், 5 குறுநாவல் தொகுப்புகள், 8 கட்டுரை நூல்கள் என அவரது எழுத்துலகம் விரிந்து பரந்தது. பிரபஞ்சனுடைய இறுதிக் காலத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்த பி.என்.எஸ்.பாண்டியன் வெளியிட்டிருக்கும் ‘பிரபஞ்சன்: ஓர் எழுத்தின் பயணம்’ என்ற சிறு கையேடு தரும் தகவல் இது. அவரது பல நெடுங்கதைகளை நாவல் பட்டியலில் சேர்த்துவிட்டிருப்பது இதன் குறை.

சமகால வாழ்வில், கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களைத் தன் வாழ்வினூடாகக் கிரஹித்துக்கொண்டு அவற்றைப் புனைவுகளாக்கும் அம்சத்தில் ஜெயகாந்தனையும், மனித மன உணர்வுகளின், குறிப்பாகப் பெண்களின், நுண்மைகளினூடாகப் பயணிப்பதில் ஜானகிராமனையும் பிணைத்துக்கொண்டிருக்கும் தனித்துவப் படைப்புலகம் பிரபஞ்சனுடையது.

பிரபஞ்சனின் புனைவாக்கங்களில் மிகச் சிறந்தவை ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய இரண்டு வரலாற்று நாவல்கள். இந்த இரு நாவல்களையும் எழுதுவதற்கு அவருக்கு ஆதாரமாக அமைந்த அரிய பொக்கிஷம், ‘ஆனந்தரங்கம் பிள்ளை டயரி’. இதன் வெளிச்சத்திலிருந்துதான் அவரது இந்த இரண்டு நாவல்களும் புனைவு பெற்றிருக்கின்றன. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்பிளேவிடம் துவிபாஷியாகப் பணியாற்றியவர் ஆனந்தரங்கர். இப்பணிக் காலத்தில் அவர் பார்த்த மற்றும் அறிந்த அரசியல் நிகழ்வுகளை ஆனந்தரங்கர், 1736 செப்டம்பர் 16 முதல் 1761 வரை தொடர்ந்து நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். இந்த டயரிக் குறிப்புகளின் பின்புலமும் பிரபஞ்சனின் படைப்பு மேதமையும் இணைந்து உறவாடி, இவ்விரு நாவல்களையும் வளப்பமானதாக ஆக்கியிருக்கின்றன.

‘மானுடம் வெல்லும்’ நாவல், 1735 முதல் 1742 வரையான ஏழாண்டுகளின் போதான புதுச்சேரியின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டது. 1735-ல் புதுச்சேரியை ஆள்வதற்கென பிரான்ஸிலிருந்து தூய்மா என்பவர் வருவதிலிருந்து இந்நாவல் ஆரம்பமாகிறது. இக்காலகட்டத்தில்தான் ஆனந்தரங்கம் பிள்ளை, அரசியலில், அதிகார வட்டத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்குகிறார். “இக்காலகட்டத்து உழைக்கும் மக்களது, நிலச்சுவான்தார்களது, அதிகாரிகளினது, தாசிகளினது வாழ்வு எங்கனம் இருந்தது என்கிற கலாபூர்வமான, இலக்கியரீதியான விமர்சனமே இப்புதினம்” என்று பிரபஞ்சன் கூறுவது இந்நாவலில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நாவலின் தொடர்ச்சியாக, அடுத்த பத்தாண்டுக் கால புதுவை அரசியல் வரலாற்றுப் புனைவாக அமைந்தது ‘வானம் வசப்படும்’. இந்நாவல்தான், 1995-ல் பிரபஞ்சனுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றுத்தந்தது. எனினும், ‘வானம் வசப்படும்’ நாவலை விடவும் அடர்த்தியும் செறிவும் புனைவுச் சுழிப்புகளும் கொண்டது ‘மானுடம் வெல்லும்’.

இந்நாவல்கள் பற்றிப் பிரபஞ்சன்: “ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்துசேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும், இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும். எனக்கு இருந்தது” என்கிறார். நிச்சயம் வாசகனுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“தமிழில் தக்க வரலாற்று நாவல்கள் இல்லை என்கிற வசைச் சொல் என்னால் ஒழிந்தது!” என பிரபஞ்சன் பெருமிதத்தோடு கூறுவதில் சிறு மிகையுமில்லை. பிரபஞ்சனின் இந்த வரலாற்று நாவல்களில்தான் நம் தமிழ் மக்கள், உழைக்கும் சாமானியர்கள், நிலச்சுவான்தார்கள், அதிகார வட்டத்திலிருப்பவர்கள், மன்னர்கள் மது அருந்தவும் மீன் சாப்பிடவும் கள் குடிக்கவும் கருவாடு சாப்பிடவும் முடிந்திருக்கிறது. இது ஒரு எளிய உதாரணம்தான்.

இவ்விரு நாவல்களையும் ‘நற்றிணை’ பதிப்பகம் அழகிய மறுபதிப்பாக வெளியிட்டபோது நான் அப்பதிப்பகத்தில் பணியாற்றியதால் அவற்றின் மெய்ப்பைச் சரிபார்க்கும் பொறுப்பு அமைந்தது. அப்போது, பனுவலில் ஏற்பட்ட சில சந்தேகங்ககள் குறித்து அவரிடம் அவ்வப்போது பேச வேண்டி வந்தது. அவர் மிகக் கவனமாக எழுதியிருக்கிறார் என்பதை அப்போது அறிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக, ஒரு பெயரைச் சாமானிய மக்கள் உச்சரிப்பதற்கும், படித்த, பிரெஞ்சு அறிந்த, அதிகார அமைப்பில் உள்ளவர்கள் உச்சரிப்பதற்குமான வேறுபாட்டையெல்லாம் அவர் மிகத் துல்லியமாகப் பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. பல்வேறு தளங்களில் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அறியாமையிலிருந்து ஞானத்துக்கும் இந்நாவல்கள் நம்மை அழைத்துச் செல்கின்றன.

- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.comபிரபஞ்சனின் எழுத்துலகப் பயணம்எழுத்தாளர் பிரபஞ்சன்புத்தகங்களின் எண்ணிக்கைஅரசியல் வரலாற்றுப் புனைவு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x