Published : 05 Oct 2019 08:34 AM
Last Updated : 05 Oct 2019 08:34 AM

மேதைகளைத் துரத்தும் நரிகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

மறதியால் எதெல்லாம் விழுங்கப்படாமல் இருக்கிறதோ அதுதான் நினைவு. நிறைவேற்றாமல் விட்ட பொறுப்புகளும் சரிசெய்யாமல் விட்ட தவறுகளும் சேர்ந்தவன்தான் மனிதன். இதை நியாயமாகச் சொல்லி சாதாரணர்கள், வரலாறு என்னும் மாபெரும் புதைசேற்றில் புதைந்து முகமே தெரியாத இருட்டின் குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம். ஆனால் சிந்தனையாளர்கள், தேசப் பிதாக்கள், மேதைகள், கலைஞர்கள் ஆகியோரை அவர்கள் இறந்த பிறகும் நரிகள் துரத்துகின்றன; விசாரணை செய்கின்றன. அந்த விடுபட்ட நரிகளின் விசாரணையைத்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை மூன்று நாடகங்களாக எழுதியிருக்கிறார். ‘ஹார்டியின் நியாயப்பாடு’, ‘சாதாரண மனிதன் அல்ல’, ‘இரண்டு தந்தையர்’ ஆகிய மூன்று சிறு நாடகங்களின் தொகுப்பான ‘இரண்டு தந்தையர்’ ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சமீபத்திய புத்தகங்களில் முக்கியமான வரவு.

அறிவியலாளர்கள், மேதைகள், தேசப் பிதாக்கள் அனைவருமே அசாதாரணமானதொரு வாழ்க்கையை, அதற்கான தனிமையை, போராட் டத்தைத் தேர்ந்தாலும் அவர்கள் அன்றாடத்தில் உறவுகொள்ள வேண்டிய சாதாரணர்களுடன் நேரும் அனுபவங்களும் மோதல்களும் அவை சார்ந்த தார்மீக விசாரணையும்தான் இந்த நாடகங்கள். அத்துடன் மனித குலத்துக்கு அசாதாரண மனிதர்கள் அளித்த பங்களிப்பில் அவர்களது தனி வாழ்க்கையின் பிரதிபலிப்பையும் தடயங் களையும் தேட முயல்கின்றன.

கணித மேதை ராமானுஜன், அவருக்கு இங்கிலாந்தில் ஆதரவளித்த கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டி, ஐன்ஸ்டைன், காந்தி ஆகியோர்தான் இந்நாடகங்களில் விசாரணைக்குள்ளாகு கிறார்கள். அவர்களை விசாரணைக்குள்ளாக்கும் விடுபட்ட நரிகளாக காந்தியின் மகன் ஹரிலால், ஐன்ஸ்டைனின் கைவிடப்பட்ட மகள் லீசரல், ஜிப்சி பெண் லூபிகா ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.
மூன்று நாடகங்களிலும் முதல் நாடகமான ‘ஹார்டியின் நியாயப்பாடு’ தனித்துவமானது. ராமானுஜன், டாக்டர் ஹார்டி இருவருமே கணிதவியலாளர்களாக இருந்தாலும் அவர்களது சமூக, கலாச்சார, பொருளாதாரப் பின்புலங்கள் இருவரது வாழ்வை மட்டுமல்ல; துயரம், புகழ், மரணம் ஆகியவற்றிலும் வேறுவித பாகுபாடான செல்வாக்கைச் செலுத்துவதன் மீது கவனம் குவிக்கின்றன. மரணம், தாழ்வாரத்துக்குக் காசநோய் வழியாக வந்துவிட்டதைப் பார்த்துவிட்ட ராமானுஜன், ஆரோக்கியமாக இருக்கும்போது தாம்பத்தியத்தை ஒன்றுசேர்ந்து கழிக்க முடியாமல் லண்டன் செல்வதற்கு நேர்ந்த துரதிர்ஷ்டசாலி; இந்தியாவுக்கு நோயோடு திரும்பிய பின்னர், தனது இளம் மனைவியோடு, வரவிருக்கும் மரணத்தை முன்வைத்தே செல்லமாகச் சீண்டி விளையாடும் வலியும் விளையாட்டும் கலந்த நாடகம் மொழிபெயர்ப்பிலும் அத்தனை உயிர்ப்புடன் கடத்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில், கொஞ்சம் முன்பின்னாகக் காசநோயால் மரித்துப்போன புதுமைப்பித்தன் ஞாபகத்துக்கு வருகிறார். மரணத்துக்கும் வறுமைக்கும் புறக்கணிப்புக்கும் மேதைகளைத்தான் தெரியுமா? மேதமையைத் தான் தெரியுமா?

அடுத்ததான ‘சாதாரண மனிதன் அல்ல’, ‘இரண்டு தந்தையர்’ இரண்டு நாடகங்களும் ஒன்றோடொன்று உறவுகொண்டவை; ஒன்றின் வலியை இன்னொன்று குணப்படுத்தும், ஒன்றின் கொந்தளிப்பை இன்னொன்று சாந்தப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன. ‘சாதாரண மனிதன் அல்ல’ நாடகத்தில், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணலிலிருந்து தப்பித்துத் தொலைதூரம் சென்று, சிகரெட் பிடிக்கத் தீப்பெட்டி கேட்பதற்காக ஒரு ஜிப்சி பெண்ணின் குடிலுக்குள் நுழையும் ஐன்ஸ்டைன், தன் மகளை ஞாபகப்படுத்தும் லூபிகாவின் தார்மீக விசாரணைக்குள்ளாகிறார். முதல் மனைவியை ஐன்ஸ்டைன் நிராதரவாக விட்டுச்சென்றதும், பெண் குழந்தையையும் மகன்களையும் புறக்கணித்ததும் அவர் மனித குலத்துக்கு அளித்த பங்களிப்பால் மறைந்துவிடுமா என்ற மீன்முள் கேள்வியை வைக்கிறாள். ஐன்ஸ்டைன் பலவீனமான ஒரு கணவராக, ஒரு தந்தையாக நிலைகுலைந்து நிற்கிறார்.

மூன்றாவது நாடகமான ‘இரண்டு தந்தையர்’ சரித்திரத்தில் பரஸ்பரம் மரியாதை வைத்திருந்தும் சந்திக்கவே சந்திக்காத ஐன்ஸ்டைனையும் காந்தியையும் சந்திக்க வைக்கிறது. நாடகாசிரியர் சுந்தர் சருக்கை வைக்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும் இந்நாடகத்தில்தான் ஒரு அமைதியும் நிம்மதிப் பெருமூச்சும் நிகழ்கிறது. ஐன்ஸ்டைனை காந்தியின் மகன் ஹரிலாலும், காந்தியை ஐன்ஸ்டைன் மகள் லீசரலும் சந்திக்கின்றனர். கடைசியில், தந்தையால் கைவிடப்பட்டதாக நினைத்த அந்தக் குழந்தைகள் இருவரும் கை கோக்கிறார்கள். முந்தைய நாடகத்தில் மகளின் சார்பாக ஜிப்சி பெண்ணால் சட்டையைப் பிடித்து உலுக்கப்பட்ட ஐன்ஸ்டைனின் கோட்டை காந்திதான் நீவிக்கொடுக்கிறார். இதற்காகத்தான் நான் சட்டையே போடுவதில்லை என்று சொல்வதுபோல அவருடைய பாவனை இருக்கிறது. காந்திக்கும் ஐன்ஸ்டைனுக்குமான சந்திப்பு இரட்டைகள் சந்திப்பதுபோல உள்ளது. ஒருவர் அறிவியலிலும் இன்னொருவர் பொதுவாழ்க்கையிலும் சத்தியத்தைத் தேடியவர்கள் என்பதால், பரஸ்பரம் ஒருவரில் இன்னொருவரை உணர்கிறார்கள்.

இரண்டு பேரின் குழந்தைகளும் மற்ற தந்தையிடம் கூடுதலாக இணக்கத்தை உணர்கின்றனர். தமது தந்தையின் மேலுள்ள பிரியத்தை இன்னொரு தந்தையிடமே அவர்களால் தெரிவிக்க முடிகிறது. ஹரிலால் தனது நவீன உடைக்குள் மறைத்திருக்கும் காதி வஸ்திர உடையை ஐன்ஸ்டைனிடம் காண்பிக்கிறான். “இன்னும் அவரிடம் நான் பிரியத்துடன் நடந்திருக்கலாம். நான் அப்பாவை அச்சு அசலாகப் பிரதிபலிப்பவன்” என்கிறான்.

நாம் நேசிப்பவர்களிடம் நமது நேசத்தை நமக்குச் சொல்ல முடியாமல் போகும் இடம் எது? நாம் ஏன் அதிகம் நேசிப்பவர்களையும் அத்தியாவசியமாக உடனிருப்பவர்களையும்தான் அதிகம் காயத்துக்கும் புறக்கணிப்புக்கும் உட்படுத்துகிறோம்? அந்த யுத்தத்தில் படுகாயங்களும் பலிகளும் அதிகமாக நிகழும் புதிர்ப் பிரபஞ்சமான குடும்பத்தைத் தீவிரமாக விசாரணை செய்ய இந்த மூன்று நாடகங்களும் நம்மைத் தூண்டுகின்றன. ஒரு தந்தையாக ஐன்ஸ்டைனும் காந்தியும் நமக்கு அவர்களது குறைகளோடு அழகானவர்களாகவும், கூடுதல் புதிர்கள் கொண்டவர்களாகவும் மாறுகிறார்கள்.

பின்னுரையில் சொல்லப்படுவதைப் போலவே அறிவியல், கணிதம், வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற வெவ்வேறு அறிவுத் துறைகள் ஒன்றுசேர்ந்து உரையாடும் மாயம் மொழிபெயர்ப்பாளர் சீனிவாச ராமாநுஜத்தின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. படிக்கவும் அருமையான பிரதியாக இருக்கிறது.

தொடர்புக்கு:
sankararamasubramanian.p@hindutamil.co.in

இரண்டு தந்தையர்கள்
சுந்தர் சருக்கை
தமிழில்: சீனிவாச ராமாநுஜம்
பரிசல் வெளியீடு
திருவல்லிக்கேணி, சென்னை-5.
விலை: ரூ.200
93828 53646

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x