அதிகாரம் தரும் வலி 

அதிகாரம் தரும் வலி 
Updated on
1 min read

இரா.சசிகலாதேவி

சுகுமாரனின் ‘பெருவலி’ நாவலில் வலி என்பது வலிமை, நோய்மை என்பதாக இருவேறு பொருள்களைத் தருகிறது. அதிகாரத்தின் வலியையும் அகவலியையும் கடந்த காலத்தினூடே நிகழ்கால அரசியல் அடக்குமுறைகளோடு பொருத்திப் பார்க்கும்படியான நிகழ்வுகளோடு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வலிமை எங்கிருந்தாலும் அது அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைக்கு உட்படுத்தி அடிமையாக்கலாம் என்பதை நாம் வரலாறு நெடுகக் காண்கிறோம். ஷாஜகானின் மகள் இளவரசி ஜஹானாராவைப் பற்றி மிகுபுனைவு இல்லாமல் அவளின் அந்தரங்க நாட்குறிப்புகளை வைத்துக் கவித்துவ மொழியில் இந்நாவலை எழுதியுள்ளார் சுகுமாரன்.

அரச குலத்துப் பெண்களின் தனிக்குரல்கள் எங்கேயும் ஒலிப்பதில்லை. மெல்லிய விசும்பல்களுடன் அந்தப்புரத்தின் சரசரப்பில் அவை எவ்வாறு கடந்துபோகின்றன என்பதை மொகலாயச் சக்ரவர்த்தி ஷாஜகான்-மும்தாஜ் தம்பதியினரின் மகள் ஜஹானரா வழியே இந்நாவல் பேசுகிறது. பதினான்கு வயதில் அரசியல் விவகாரங்களில் ஆலோசனை சொல்லும் நுண்ணறிவு, தர்பாரில் தனி ஆசனம், மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை, கவிதை, காவியங்கள், வேதங்கள், புராணங்கள், மத நூல்களில் தேர்ச்சி, பாடலிலும் ஆடலிலும் சரளம், கட்டிடக் கலையில் புலமை, இவற்றோடு கப்பல்கள், தனி மாளிகை, பணம் ததும்பி வழியும் கஜானா, பணிவிடை செய்ய அடிமைகளைப் பெற்றிருந்தும் ஜஹானாராவுக்குச் சுதந்திரம் என்ற ஒன்றே ஒன்று இல்லை. ஏனெனில், அவள் பெண்ணாக இருந்தாள். ஜஹானாராவுக்குப் பதின்ம வயது காதல் உண்டு. மொகாலாய அரச வம்சத்து இளவரசிகள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று அக்பர் காலத்தில் கட்டளை. காரணம், பதவி போட்டிகள் வந்துவிடும் என்பதற்காக. வேட்கையின் பெருமூச்சுகள் அரண்மனையின் திரைச்சீலைக்குள்ளே மறைந்துபோகின்றன.

மொகலாய அரசில் பெண்களின் இடம் ஒட்டுமொத்தமாக எவ்வாறிருந்தது என்பதை தாராஷுகோவின் மனைவி உதய்பூர் பேகம் வழியாக அறியச்செய்திருக்கிறார். வரலாற்றில் தென்படும் மெளன இடைவெளிகளையும், அதிகாரத்தின் ஆணைக்குப் பணிந்து பெண்ணின் மன வெளியைச் சொல்ல வாய்ப்பளிக்கப்படாமல் குரலற்றவர்களாய் இருக்கும் உதிரிப் பாத்திரங்களின் உணர்வுகளையும், மூன்றாம் பாலினமான பானிபட் போன்ற அடிமைகளின் குரல்களையும் பேச முற்படுவதால் சுகுமாரனின் இப்புனைவு மதிப்பு மிக்கதாய் மாறுகிறது.

ஜஹானாராவின் ஆழ்மனத்தை, அவளின் ஆன்மாவை அவளது ஆசைகளை, நிராசைகளை மிக அழகாய் பேசுகிறது ‘பெருவலி’. அதிகாரத்தின் போட்டிகளுக்கு இடையே ஒரு சாம்ராஜ்யத்தின் அதிகார பீடத்தைத் தக்கவைக்க உருளும் தலைகளும் இரக்கமற்ற கொடுஞ்செயல்களும் வரலாறு நெடுக உண்டு. அதிகாரத்தைத் தக்கவைக்க எதுவும் நிகழ்த்தப்படலாம் என்ற இன்றைக்குமான அச்சமே இந்தப் புனைவை எழுதுவதற்குக் காரணம் என்கிறார் சுகுமாரன். உண்மையில், அந்த அச்சம் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதிகாரம் தனது பிடியை இறுக்கும்போது அது பெருவலியாகவே உருப்பெரும்!

பெருவலி
சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
விலை: 225
9677778863

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in