Published : 05 Oct 2019 08:30 AM
Last Updated : 05 Oct 2019 08:30 AM

நூல் நோக்கு: நிகழ்த்துக்கலையும் இலக்கியமும்

உடல்மொழியின் கலை
வெளி ரங்கராஜன்
போதிவனம் வெளியீடு
ராயப்பேட்டை, சென்னை-14.
விலை: ரூ.120
98414 50437

இலக்கியம், நிகழ்த்துக் கலைகள் குறித்து வெளி ரங்கராஜன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இது. நகுலனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டது குறித்த முதல் கட்டுரை, விருதின் நடுவர் குழுவில் இருந்த இன்குலாபின் பெருந்தன்மையைப் பற்றி அழகாகப் பேசுகிறது. நாடகங்கள் குறித்த கணிசமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூல், ஒரே மாதிரியான நாடகப் போக்கை மட்டும் பிரதானப்படுத்தவில்லை. உதாரணமாக, திராவிட இயக்கங்களின் நாடகங்கள் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது. வெளி ரங்கராஜன் மொழிபெயர்த்த கட்டுரைகளும்கூட இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

- கார்த்திகேயன்

ஆளுமைகள் முப்பது

நெஞ்சிருக்கும் வரை...
(நான் சந்தித்த ஆளுமைகள்)
ஆர்.எஸ்.மணி
ஆரம் வெளியீடு
மைலாப்பூர், சென்னை- 4
9176549991
விலை: ரூ.180

திண்டுக்கல்லைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர் ஆர்.எஸ்.மணி தான் வியந்த சமகால ஆளுமைகளைப் பற்றி பேஸ்புக்கில் அவ்வப்போது எழுதிவந்த சிறுகட்டுரைகளின் தொகுப்பு. மூன்று பேர் உட்காரும் அளவுக்குச் சிறிய வீட்டில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் மதுரை நன்மாறன், அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்ஏபி, நாற்பதாண்டுகளாய் எழுத்தும் வாசிப்புமாய்த் தீவிரமாக இயங்கிவரும் பேராசிரியர் அருணன் என்று பொதுவுடைமை இயக்கம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் பற்றி அறியப்படாத பல தகவல்களுடன் அறிமுகப்படுத்துகிறார் ஆர்.எஸ்.மணி. இவை நினைவுக் குறிப்புகள் மட்டுமல்ல; பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பதிவுகளும்கூட.

- புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x