Published : 29 Sep 2019 10:23 AM
Last Updated : 29 Sep 2019 10:23 AM

பிரபஞ்சன்: வாழ்தலின் மகத்துவம்

சி.மோகன்

மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை மனபூர்வமாக உணர்ந்து தன் வாழ்வை வெகு சுபாவமாகப் பேணியவர் பிரபஞ்சன். அல்லல்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் நெருக்கடியிலும் வாழ்வைப் புகார்களின்றி சகஜமாக எதிர்கொண்டவர். தான் தேர்ந்த வாழ்க்கையிலிருந்தும், அதன் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்தும் பிசகாதவர். அவரது சிறு பிராய வாழ்க்கை வடிவமைத்த வலுவான அடித்தளத்தோடு கட்டமைந்த வாழ்க்கை. பிரபஞ்சனின் இந்த வாழ்க்கை முறையின் உயிர்ச் சுடராக அவரது அப்பா இருந்திருக்கிறார். அவரது அப்பாவைப் பற்றிய பிரபஞ்சனின் சித்திரம் இது:

‘என் அப்பாதான் எனக்கு ஆதர்சம். மிகவும் மேன்மையான மனிதர் அவர். சைனாப் பட்டுச் சட்டை, சாண் அகலப் பட்டுச் சரிகை வேட்டி, அமெரிக்கன் கிராப்பு, கட் ஷூக்கள், பிரான்ஸ் பரிமள வாசனைப் பொருட்களோடும் அவர் வாழ்ந்தார். பாகவதரின், சின்னப்பாவின், வசந்த கோகிலத்தின், ராஜகுமாரியின் ரசிகர் அவர். கிட்டப்பா பாடல்களில் கிறங்கிப்போவார். கிராமபோன் என்கிற வஸ்து, எங்கள் வீட்டில் கிட்டப்பா, சுந்தராம்பாளையே பாடிக்கொண்டிருக்கும். அந்த அப்பா, ஒரு நாளில் ஒரு வேளையே சாப்பிட்டு வாழ நேர்ந்த ஒரு பத்தாண்டையும் அவருடன் சேர்ந்து வாழக் கொடுத்து வைத்திருக்கிறேன். உப்பரிகையிலும் பாதாளத்திலும் யாரையும் குற்றம் சொல்லாத, வெறுக்காத, மிகுந்த சாந்த பாவத்தோடு துன்பங்களை எதிர்கொண்ட அந்த மாமனிதரைப் போல் வாழ்ந்து தீர்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். என் ஒரே பிரார்த்தனை இது மட்டும்தான். மனிதனாக வாழ்தல் மகத்தானது.’ பிரபஞ்சனின் பிரார்த்தனை அவரை வழிநடத்தியது. மகத்தான மனிதனாக வாழ்ந்தார். சாந்தம் அவரைத் தழுவியிருந்தது.

1945 ஏப்ரல் 27 அன்று புதுச்சேரியில் பிறந்தவர் பிரபஞ்சன். இயற்பெயர் வைத்திலிங்கம். பள்ளிப் படிப்பு புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் அமைந்தது. கோடைக் கால விடுமுறைகளின்போது விழுப்புரத்தில் வசித்த தாத்தா வீட்டுக்குச் செல்கையில் அங்கிருந்த அலமாரியில் நிறைந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களை வாசித்துத் தன் ரசனையை ஏதோ ஒருவகையில் வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது பதினான்காம் வயதிலேயே ரோமன் ரோலந்து நூலகத்தில் அவரது அப்பா அவரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டிருக்கிறார். அவரது வாழ்வில் அதன் முக்கியத்துவம் பற்றி பிரபஞ்சன் குறிப்பிடுவது: ‘பிருமாண்டமான தமிழ், ஆங்கில, பிரெஞ்சு நூலகம் அது. என் வாழ்வில் நான் கடன்பட்ட ஸ்தலம் அது. தமிழ் மொழிபெயர்ப்பில் வந்திருந்த அத்தனை நூல்களும் அங்கிருந்தன. க.நா.சு. மொழிபெயர்த்தவை, அ.கி.ஜயராமன், கோபாலன் நூல்கள், த.நா. சேனாதிபதி, குமாரசாமி நூல்கள், சாமிநாத சர்மா, பழைய ஆயிரத்தோர் இரவுகள், ஆர். சண்முகசுந்தரத்தின் சரத் சந்திரர் நூல்கள், சுத்தானந்த பாரதியின் பிரெஞ்சுத் தமிழ் ஆக்கங்கள், ரஷ்ய மொழிபெயர்ப்புகள், குறிப்பாக சொக்கலிங்கத்தின் போரும் வாழ்வும் முதலான பேரிலக்கியப் பரிச்சயங்கள் என்னைப் பதப்படுத்திக்கொண்டிருந்தன.’

மேலும், இந்த நூலகம்தான் அவரது வாழ்வின் திசையை வடிவமைத்திருக்கிறது. இங்குதான், வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தொ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வ., ஒளவை சு.துரைசாமி ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் மூலம் அவருக்கு சங்க இலக்கியப் பரிச்சயமும் ஈடுபாடும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து, ‘என் வாழ்க்கைப் பயணம் முடிவுசெய்யப்பட்ட தருணம் அது. ஒரு முழுதான தமிழ் வாழ்வையே வாழ்வது என்று முடிவெடுக்க எனக்கு சங்க இலக்கியங்களே காரணமாயின” என்கிறார் பிரபஞ்சன். இந்த முடிவுதான் தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரியில் அவரைச் சேரவைத்தது.

தஞ்சையில் படித்தபோது, தஞ்சை ப்ரகாஷுடன் ஏற்பட்ட நட்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் வாசல்களைத் திறந்துவிட்டது. ப்ரகாஷ் வீட்டு மாடி நூலகத்தின் அற்புத உலகுக்குள் பிரபஞ்சன் பிரவேசித்தபோது, அவரது படைப்பு மனம் சுடர்விடத் தொடங்கியது. தஞ்சை வாழ்க்கை, கோயில்களோடும் ஆற்றுவெளியோடும் கர்னாடக சங்கீததோடும் நாட்டியக் கலையோடும் அவரது மனவெளியை நிரப்பியிருக்கிறது. பட்டப் படிப்பு முடிந்ததும் வேலையேதும் அமைந்திராத நிலையில், தூரத்துச் சொந்தமான பிரமிளா ராணியுடன் 1970-ல் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, புதுவை ‘மாலை முரசு’வில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார். எனினும், வாழ்க்கையின் நெருக்கடி அவரைச் சென்னைக்கு நகர்த்தியது.

அவர் சென்னை வந்த பின்பு, 1980-90 ஆகிய பத்தாண்டுகள் ‘குங்குமம்’, ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ எனப் பல இதழ்களில் இடையிடையே பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் இவரது புனைவுகள் புத்தகங்களாக வெளிவந்து குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக அறியப்பட்டார். 1990 முதல் அவர் முழுநேர எழுத்தாளனாகத் தன்னை வரித்துக்கொண்டார். இத்தேர்வு தமிழ்ச் சூழலில் நிகழ்த்தும் சாதக பாதகங்கள் அனைத்தோடும் தன் வாழ்வை இயல்பாக எதிர்கொண்டார். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, உரை, உரையாடல் என நவீனத் தமிழ் இலக்கிய வாழ்வை மேற்கொண்டார். குடும்பம் புதுவையிலும் அவர் சென்னை மேன்சன்களிலும் என்றான வாழ்க்கையே தொடர்ந்தது. ராயப்பேட்டை அரசுக் குடியிருப்பில் வீடு அமைந்த பின்னும் தனிமை வாழ்க்கை தொடர்ந்தது. அவரது கலை நம்பிக்கை சார்ந்த வாழ்வு, அவருக்கான கொடையை வழங்க வெகு காலம் பிடித்தது. இதற்கிடையே அவர் தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக நிலைபெற்றார். காலமும் கனிந்துவந்தது. புதிய தலைமுறை இளம் எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் அவரது எழுத்திலும், சுபாவமாகச் சுடரிட்ட அன்பின் ஆளுமையிலும் வசீகரிக்கப்பட்டு அவரைச் சூழ்ந்து கொண்டாடினர்.

அவரது 72-வது வயதில் மு.வேடியப்பன், பவா செல்லதுரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னெடுப்பில் ‘எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்ற ஒரு நாள் நிகழ்வு 2017 ஏப்ரல் 29 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் உவந்தளித்த ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புதுவை முதலமைச்சர், அந்நிகழ்வு அளித்த உத்வேகத்தில், தங்கள் மண்ணின் மைந்தனுக்கு புதுவை அரசு விழா எடுக்கும் என்று அறிவித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். 2018 மே முதல் வாரத்தில் அரசு சார்பில் விழா எடுத்ததோடு, ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார். ஆனால், இதை அடுத்த சில மாதங்களில், புற்றுநோய் முற்றிய நிலையில் அவரை ஆட்கொண்டிருப்பது தெரியவந்தது. சில மாத சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 21, 2018-ல் மரணமடைந்தார்.

புதுவை அரசு, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செய்தது. ஒரு தமிழ்ப் படைப்பாளியின் உடல், தேசியக்கொடி போர்த்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட அபூர்வ நிகழ்வு, வரலாற்றில் முதல் முறையாக அரங்கேறியது. நட்சத்திரமானார் பிரபஞ்சன்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x